Aran Sei

உலக வங்கி கடன் : காற்றில் பறக்கும் தற்சார்பு இந்தியா கனவு

credit: world bank

ந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் கண்டறிவதற்கும் தடுப்பதற்கும் $100 கோடி கடனாக வழங்க உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.

“இந்தியா-கோவிட்-19 அவசரநிலை எதிர்கொள்ளல் மற்றும் மருத்துவ கட்டமைப்பை பலப்படுத்தும் திட்டம்” என்பதன் கீழ் உலக வங்கி இந்தியாவுக்கு $100 கோடி (சுமார் ரூ 7,300 கோடி) கடன் வழங்கியுள்ளது.

இந்தக் கடனைக் கொண்டு அமலாக்கப்படும் திட்டங்களுக்கு இந்திய அரசு கடைபிடிக்கும் பொது கொள்முதல் முறை (மேக் இன் இந்தியா), சிறுகுறு நடுத்தர தொழிலகங்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமைகள், புதிதாக ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போன்றவற்றை கடைபிடிக்கக் கூடாது என்று உலக வங்கி நிபந்தனை விதித்துள்ளது.

உலக வங்கி வழங்கும் கடனைக் கொண்டு செயல்படுத்தப்படும் திட்டத்தின் கொள்முதல் ஆவணங்கள், கணக்கு-வழக்குகளை மேல்பார்வை அல்லது தனிக்கை செய்ய உலக வங்கிக்கு உரிமையுள்ளது. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே அந்தக் குறிப்பிட்ட திட்டத்துக்கு நிதியளிக்கப்படும் என்று உலக வங்கி நிபந்தனை விதித்துள்ளது.

ரயில்வே அமைச்சகம் அதன் கீழுள்ள மண்டலங்களுக்கு ஒரு குறிப்பு அனுப்பியுள்ளது. அதில், ஊழலுக்கு எதிரான உலக வங்கியின் விதிமுறைகளை ஒப்பந்காரர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலக வங்கியின் வழிகாட்டு நெறிமுறையின் படி ஏற்கெனவே ஒப்புதல் வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

credit: Hindustan times
credit: Hindustan times

உலக வங்கி வழங்கும் கடனைக் கொண்டு ரயில்வே துறையானது ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, வடக்கு ரயில்வேக்கு ரூ.45.59 கோடி நிதி அதிகபட்சமாக ஒதுக்கீடு செய்யப்பட்டதுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, கிழக்கு ரயில்வேக்கு ரூ.42.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்னக ரயில்வேக்கு ரூ. 30.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில் பெட்டி செய்யும் தொழிற்சாலைக்கு ரூ.3.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயில் உள்ள 16 மண்டலங்களுக்கு மொத்தமாக ரூ.399.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உலக வங்கி வழங்கியுள்ள கடன் உதவியை மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் அறைகளை கட்டுதல், வென்டிலேட்டர்களை வாங்குதல், ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்குதல், ஆய்வுக் கூடத்துக்கு தேவையான இயந்திரங்களை வாங்குதல், பாதுகாப்பு கவச உடைகளை வாங்குதல், முகம் மற்றும் கைகவசம் போன்ற மருத்துவ சாதனங்கள் போன்றவற்றை வாங்கவும் பயன்படுத்தப்படுத்தவிருப்பதாக தி இந்து நாளேடு குறிப்பிடுகிறது.

இந்த கடனின் முதல் தவணையானது கொரோனா தொற்று உருவாக்கியுள்ள அவசரநிலையை சமாளிப்பதற்கு பயன்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு ஏப்ரல் 2022-ம் ஆண்டு வரையில் நிதியளிக்கப்படும் என்று உலக வங்கி கூறியுள்ளது. ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி 2021-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் செலவிட முடியாத நிலையில் இருக்கின்றது என்றால் அதை இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இந்தக் கடன் திட்டம் டிசம்பர் 31-ம் தேதி 2024-ம் ஆண்டு வரை தொடரும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்தக் கடன் உதவி மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரித்தல்) திட்டத்துக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்று தி இந்து நாளேடு குறிப்பிடுகிறது.

ஐ.ஐ.டி-யில் பொருளியல் பேராசிரியராக உள்ள எம். சுரேஷ் பாபு தி இந்து ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரித்தல்) திட்டத்தில் உள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகிறார்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நடைமுறை செய்யப்படுகிற பெரும்பாலான திட்டங்கள் அயல் நாட்டு முதலீட்டையும் உலகச் சந்தையையும் சார்ந்திருப்பதாக கூறுகிறார்.

“‘மேக் இன் இந்தியா’ என்ற கொள்கை முன்னெடுப்பு ஒன்றோடு ஒன்று முரண்படும் அம்சங்களுடன் உள்ளது. ‘சுதேசி’ பொருட்களை அன்னிய மூலதனத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்வது என்ற பொருத்தமின்மையை பரிசீலிக்கும் போது இந்த முரண்பாடுகள் வெளிப்படுகின்றன.” என்கிறார் அவர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்