Aran Sei

பாஜகவின் ” சுயசார்பு இந்தியா ” – விலை கொடுக்கப் போவது யார்?

பிஎஸ்என்எல் நிறுவனம் தனக்குத் தேவையான 4G உபகரணங்களை உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கினால் 89 சதவீதம் அதிகம் செலவாகும் என்று எச்சரித்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் போன்ற தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் 4G சேவையை வழங்கி வரும் நிலையில் பிஎஸ்என்எல் இன்னும் 2G, 3G சேவைகளிலேயே தேங்கி நிற்கிறது.

பிஎஸ்என்எல் 4G சேவை வழங்குவதற்காக வெளியிட்ட டெண்டரில் சீன நிறுவனங்களான ஹூவாவெய் மற்றும் ZTE முதலிடம் பிடித்தன.

இந்தியாவின் அனைத்து மண்டலங்களிலும், “4G மொபைல் நெட்வொர்க்குக்கான திட்டமிடல், பொறியியல் பணிகள், வழங்கல்கள், நிறுவல், சோதனை செய்தல், தொடங்கி வைத்தல் மற்றும் ஆண்டு பராமரிப்புக்கான” அந்த டெண்டரில் சீனாவைச் சேர்ந்த இந்த இரண்டு வெற்றிகரமான நிறுவனங்கள் முதலிடம் பிடித்தன.

ஆனால், லடாக்கில் எல்லைப் பகுதியில் கால்வான் பள்ளத்தாக்கில் சீனப் படைகளுடன் நடந்த மோதலைத் தொடர்ந்து மோடி அரசு இந்த டெண்டரை ரத்து செய்யும்படி கூறி விட்டது. மேலும் “ஆத்மநிர்பர் பாரத்” (சுயசார்பு இந்தியா) திட்டத்தின் கீழ், தேவையான 4G  உள்நாட்டு உபகரணங்களை உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்தே வாங்கும்படி உத்தரவிட்டிருந்தது.

மீண்டும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசு

ஆனால், தனியார் நிறுவனங்கள் சீன உபகரணங்களை வாங்குவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்பதை எகனாமிக் டைம்ஸ் சுட்டிக் காட்டுகிறது.

பிஎஸ்என்எல் குறைந்த விலையில் 4G உபகரணங்களை வாங்குவதற்கு போட்டி நிறுவனங்கள் முட்டுக் கட்டை போடுவதாக பிஎஸ்என்எல் ஊழியர்கள் பிரதமருக்கு புகார் அனுப்பியதாகவும் அந்நாளிதழ் தெரிவிக்கிறது.

ஹூவாவெய், ZTE வென்ற டெண்டரை ரத்து செய்து விட்டு, 4G சேவை வழங்குவதற்கான புதிய டெண்டரை பிஎஸ்என்எல் வெளியிட்ட போது, உள்நாட்டு உற்பத்தியாளர்கள், சர்வதேச நிறுவனங்களின் விலையை விட 80% அதிக விலை கூறியுள்ளனர். இந்தத் தகவலை பிஎஸ்என்எல் அரசுக்கு எழுதிய அதிகாரபூர்வமான கடிதத்தில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இந்த சர்வதேச நிறுவனங்களின் விலைகள் சீன நிறுவனங்களின் உபகரணங்களின் விலைகளை விட அதிகம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், உள்நாட்டு நிறுவனங்கள், பிஎஸ்என்எல்க்கு தேவையான அளவில் உபகரணங்களை உற்பத்தி செய்ய முடியுமா என்பதும் சந்தேகமானது என்று பிஎஸ்என்எல் கருதுகிறது.

இந்தத் தற்சார்பு இந்தியாவுக்கான செலவை யார் ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்று எகனாமிக் டைம்ஸ் கேள்வி எழுப்புகிறது.

” உலகமயம் நாட்டின் பொருளாதாரத்தை பாதித்து விட்டது ” – வெளியுறவுத்துறை அமைச்சர்

இழப்புகளை எதிர்கொண்ட பிஎஸ்என்எல்-ஐ மீட்பதற்கு அரசு ஏற்கனவே ரூ 70,000 கோடி நிதி வழங்கியுள்ளது. அதில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுவதற்கான ரூ 30,000 கோடி செலவும் அடங்கும்.

இந்நிலையில், இந்த விலை அதிகமான பரிசோதனையை செய்ய வைத்து பிஎஸ்என்எல்-ஐ இன்னும் அதிக இழப்புகளை எதிர்கொள்ள வைக்கப் போகிறோமா என்று எகனாமிக் டைம்ஸ் கேள்வி எழுப்புகிறது.

மோடி அரசின் “சுயசார்பு இந்தியா” திட்டத்தினால் பாதிக்கப்படுவது பிஎஸ்என்எல் மட்டுமில்லை என்பதை எகனாமிக் டைம்ஸ் சுட்டிக் காட்டுகிறது.

அழிவின் விளிம்பில் பிஎஸ்என்எல் – மக்களுக்கான நிறுவனம் மடியக் காரணம் என்ன?

சூரிய மின்சக்தி தகடுகளை எடுத்துக் கொண்டால், 100 கிகாவாட் அளவு சூரிய மின்சக்தி உற்பத்தி செய்வதற்கான இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது. ஆனால், சூரிய மின்சக்தி தகடுகளை உற்பத்தி செய்வதற்கு போதுமான கொள்ளளவு உள்நாட்டில் இல்லை.

சூரிய மின்சக்தி தகடு உற்பத்தியில் உலகில் முன்னணியில் இருக்கும் சீனாவில் இருந்து அவை மலிவு விலையில் கிடைக்கின்றன. உண்மையில், இதுவரையில் இந்தியாவின் சூரிய மின்சக்தி நிலையங்களில் நான்கில் மூன்று பங்கு சீன சூரிய மின்சக்தி தகடுகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்கிறது எகனாமிக் டைம்ஸ்.

2018 முதல் சூரியமின்சக்தி தகடுகள் மீது விதிக்கப்பட்ட 20 சதவீதம் இறக்குமதி வரி பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் ரத்து செய்யப்பட்டது. ஆனால், ஜூன் மாதம் சூரிய மின்சக்தி தகடுகள் இறக்குமதி மீது 25 சதவீதம் வரி விதித்தது, மோடி அரசு. அது 40 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.

மேலும், ஏர் கண்டிஷனர் கம்ப்ரெசர்களில் 80 சதவீதம், சலவை எந்திரங்களின் மோட்டார்களில் 95 சதவீதம் சீனாவில் இருந்து வருகின்றன என்கிறது எகனாமிக் டைம்ஸ். மின்னணு சாதனங்களில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் 45 சதவீதம், அறைக்கலன்களில் 57 சதவீதம், மருந்து இடைநிலை பொருட்களில் இறக்குமதி உள்ளடக்கம் 68 சதவீதமாக உள்ளது.

ஏற்கனவே, டயர்கள், ஏர் கண்டிசனர்கள், தொலைக்காட்சி பெட்டிகள் ஆகியவற்றின் இறக்குமதிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

இவற்றுக்கு மாறாக, உள்நாட்டு உற்பத்தித் திறனையும் தரத்தையும் செயல்திறனையும் உலகத் தரத்துக்கு அதிகரிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்கிறது எகனாமிக் டைம்ஸ். நாம் தனிச்சிறப்பாக செயல்படும் சில துறைகளில் மட்டுமாவது இதனைச் செய்வதும், தேவையான மற்ற பொருட்களை ஆகக் குறைந்த விலையில் இறக்குமதி செய்வதற்கு அஞ்சாமல் இருப்பதும் அவசியமானது என்கிறது எகனாமிக் டைம்ஸ்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்