ஐக்கிய நாடுகள் சபையும் (United Nations) உலக பொருளாதார மன்றமும் (World Economic Forum) ஏற்படுத்தியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தால், ஐ.நா சபையில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தலையீடு இருக்கும் என ஒப்பன் டெமாக்ரசி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை பல நாடுகளை கொண்டுள்ள ஒரு பன்னாட்டு அமைப்பாகும். நாடுகளுக்கிடையில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைப்பது, உலக அமைதியை ஏற்படுத்துவது ஆகியவை இந்த அமைப்பின் நோக்கமாகும்.
1971 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலக பொருளாதார மன்றம், ஒரு பொதுநல சேவை அமைப்பாகும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனி பெருநிறுவனங்கள் இடமிருந்து நிதியுதவி பெற்று வரும் இந்த அமைப்பு, கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களை கொண்டு சமூகத்தை மேம்படுத்த வேண்டும் எனும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், ஐ.நா சபையும் உலக சுகாதார மன்றமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதன் மூலம் பல சர்வதேச பெரு நிறுவனங்கள் ஐ.நா சபைக்குள் நுழைவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதாக ஒப்பன் டெமாக்ரசி இணையதளம் தெரிவிக்கிறது.
கடந்த 2009 ஆம் ஆண்டு, உலக பொருளாதார மன்றம், உலகளாவிய மறுகட்டமைப்பு முன்னெடுப்பு (Global Redesign Initiative) எனும் தலைப்பில், 600 பக்க அறிக்கையை வெளியிட்டது. அதில், சர்வதேச அளவில் அரசுகள் செயல்பட்டு வரும் முறையில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
அரசாங்கங்கள் எடுக்கும் முடிவில் அரசினுடைய பங்கு இரண்டாவதாக இருக்க வேண்டும் எனவும் பெருநிறுவனங்களின் முடிவுகள் முதலாவதாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசு மற்றும் தனியார் இணைந்து செயல்பட வேண்டும் என 2009 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் கூறுகள், தற்போது இந்த ஒப்பந்தத்தின் வழியாக நிறைவேற்றப்பட்டிருப்பதாக ஒப்பன் டெமாக்ரசி தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி, பெரு நிறுவனங்கள், சுகாதாரம், கல்வி, பெண்கள் முன்னேற்றம், காலநிலை மாற்றம் உள்ளிட்டவைக்கு உதவ வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஐ.நா சபையின் பொதுச்செயலாளர், கார்ப்பரேட்டுகளுக்கு அதிகாரம் வழங்கி, ஐ.நா சபையில் உள்ள நாடுகளின் அதிகாரத்தை பறித்துள்ளதாக ஒப்பன் டெமாக்ரசி தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.