Aran Sei

வேதாந்தா பங்குகள் – சிறு முதலீட்டாளர்களுக்கு மோசடி வலையா? : ஷியாம்

வேதாந்தா குழுமம் தனது பங்குகளை இந்திய பங்குச்சந்தையில் இருந்து விலக்கி கொள்ளப் போவதாக சென்ற மாதம் அறிவித்தது. அக்டோபர் 9-ம் தேதி முடிவடைந்த 5 நாட்களில் போதுமான அளவு பங்குகளை வாங்க முடியாததால் இந்த முயற்சி தோல்வியடைந்ததாகக் கூறி வேதாந்தா  அதனை கைவிட்டது. இந்த நடவடிக்கையை வெற்றி பெறச் செய்ய மோசடியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்று விசாரணை நடத்த வேண்டும் என்று பங்குதாரர் ஆலோசனை நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த ஜே.என் குப்தா கூறியிருப்பதாக லைவ்மின்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

லண்டனை தலைமையிடமாக கொண்ட வேதாந்தா நிறுவனம் இந்தியாவில் பல தொழிற்சாலைகளை சொந்தமாகக் கொண்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் அகர்வால் இதன் தலைவராக உள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா குழுமத்தின் குறிப்பிடத்தகுந்த ஆலைகளில் ஒன்று. மாசுகட்டுப்பாடு தொடர்பான பிரச்சனைகளால் நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

வேதாந்தா குழுமம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். இந்த நிறுவனம் வெளியிடக் கூடிய பங்குகளில் 50 சதவீதம் வேதாந்தா குழுமத்தின் கையிலும் மீதியுள்ள 50 சதவீதம் பங்குகள் நிதி நிறுவனங்களிடமும் சிறு முதலீட்டாளர்களிடமும் இருந்தன.

2017-ம் ஆண்டு இறுதியில் 300 ரூபாய் வரையிலான விலையில் விற்கப்பட்டு வந்த வேதாந்தாவின் பங்குகளின் விலை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 60 ரூபாய் வரை குறைந்தது. பங்கு விலை குறைவாக இருப்பதை ஒட்டி வெளி ஆட்களிடம் இருக்கும் பங்குகளை திரும்ப வாங்கி, தனது பங்குகளை பங்குச் சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளலாம் என்று வேதாந்தா முடிவு செய்தது.

பங்கு சந்தை ஒழுங்கமைவு அமைப்பான செபியின் வழிகாட்டுதல்படி ஒரு நிறுவனம் 90 சதவீத பங்குகளை தம்வசம் பெற்று விட்டால் பங்குச்சந்தையில் இருந்து விலகிக் கொள்ள முடியும். அதன்படி வேதாந்தா நிறுவனத்தின் பங்குகளில் மற்றவர்களிடம் உள்ள 50 சதவீதம் பங்குளில் 40 சதவீதம் பங்குகளை திரும்பப் பெற்றால் வேதாந்தாவின் பங்குகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கை வெற்றி பெற்று விடும்.

வேதாந்தா நிறுவனம் இந்தத் திரும்பப் பெறும் நடவடிக்கையில் குறைந்தபட்ச பங்கு விலையாக 88 ரூபாயை நிர்ணயம் செய்திருந்தது. பங்குகளை என்ன விலைக்கு விற்க விரும்புகிறோம் என்று குறிப்பிட்டு ஏல அடிப்படையில் முதலீட்டாளர்கள் விற்பனை செய்ய முன்வரலாம் என்று அறிவித்தது. குறைந்த விலை கூறிய 40% பங்குதாரர்களிடம் இருந்து வேதாந்தா பங்குகளை வாங்கிக் கொள்ளும்.

இந்தப் பங்கு விலக்கல் நடவடிக்கை வெற்றி பெறுமா என்ற சந்தேகம் ஆரம்பம் முதலே இருந்தது. வேதாந்தாவின் பங்குகளில் 6 சதவீதம் எல்ஐசி நிறுவனத்திடமும், 4 சதவீதம் ஐசிஐசிஐ நிறுவனத்திடமும் உள்ளன. இந்த நிறவனங்களின் பங்குகளை வாங்க முடியா விட்டால் கிட்டத்தட்ட எஞ்சிய எல்லா பங்குகளையும் வாங்க முடிந்தால்தான் விலக்கல் நடவடிக்கை வெற்றி பெறும்.

இந்தப் பங்கு விலகல் நடவடிக்கை மூலம் 134 கோடி பங்குகளை வேதாந்தா திரும்பப்பெற வேண்டும். பங்குகளை வாங்கும் நடைமுறை செயல்படத் தொடங்கிய உடனேயே 137 கோடி பங்குகளை திரும்பி அளிப்பதற்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதாக செய்திகள் பரவின. எப்படியாவது தமது பங்குகளையும் விற்று விட வேண்டும் என்ற சிறு முதலீட்டாளர்கள் பதற்றத்தில் குறைந்த விலைக்கு விற்க முன் வந்தனர்.

வேதாந்தா எதிர்பார்த்தபடி 134 கோடி பங்குகள் விற்பனைக்கு வந்திருந்தால் வேதாந்தா பெரும் ஆதாயத்தை ஈட்டியிருக்கும்.

வேதாந்தாவின் துணை நிறுவனமான Hind Zinc என்ற நிறுவனம் இந்திய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. வேதாந்தாவின் நடவடிக்கை வெற்றி பெற்றிருந்தால் பொது பங்கு நிறுவனமான வேதாந்தா தனியார் நிறுவனமாக மாறி இருக்கும். அதனால், ஹிந்துஸ்தான் ஜின்க் நிறுவனத்தின் நிதி ஆதாரங்கள் தொடர்பாக வேதாந்தாவால் சுயமாக முடிவுகள் எடுக்க முடியும். அந்நிறுவனத்தின் லாப ஈவுத்தொகையாக ரூ 4500 கோடி வேதாந்தா பெற முடியும் என்று எகனாமிக் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

இந்தப் பங்கு வாங்கும் நடவடிக்கை அக்டோபர் 9 அன்று முடிவடைந்தது. முதலீட்டாளர்கள் 125 கோடி பங்குகளை மட்டுமே திரும்பி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளனர். எனவே, இந்த நடவடிக்கை வெற்றி பெறவில்லை. தேவையான 40% முதலீட்டாளர்கள் ஒப்புதலை தராத காரணத்தினால் இந்த திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

பெரும்பாலான முதலீட்டாளர்கள் சராசரியாக 128 ரூபாய் விலையில் பங்குகளை திரும்ப அளிக்க முன்வந்தனர். ஆனால், எல்ஐசி போன்ற பெரும் முதலீட்டாளர்கள் 230 ரூபாய்க்கு பங்குகளை திரும்ப வழங்க ஒப்புதல் வழங்கியிருந்தனர்.

மேலும், சுமார் 12.3 கோடி பங்குகளை விற்பதாக முன்வந்தது உறுதி செய்யப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டது. இந்த 12.3 கோடி பங்குகளும் விற்பனை முடியும் நேரம் வரை உறுதி செய்யப்படவில்லை என்பதால் வாங்கும் நடவடிக்கை தோல்வி அடைய நேர்ந்தது.

இதன் காரணமாக வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. கடந்த வாரத்தில் அந்த பங்குகள் ஏறக்குறைய 20 சதவீத சரிவினை சந்தித்தன.

இந்தத் தோல்வி பங்கு விலக்கல் நடவடிக்கையை மேற்கொள்ளும் மற்ற நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பாடத்தை தந்திருக்கிறது. பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கும் பல பாடங்களை தந்திருக்கிறது.

முக்கியமான கேள்வி – 137 கோடி பங்குகள் விற்பனைக்கு வந்ததாக செய்தி வெளியானது எப்படி?

வெளிநாட்டு பெரும் முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் Custodian (அறங்காவலர்கள்) என்பவர்களை நியமித்து பங்குகளை வாங்கி விற்பார்கள். Custodian நேரடியாக பங்குச் சந்தையில் பங்குகளை வாங்க முடியாது. அவர்கள் சார்பாக பங்குகளை வாங்குவதற்கு புரோக்கர்களை நியமித்து இருப்பார்கள். புரோக்கர்கள் பங்குகளை வாங்கி விற்பதற்கு custodian ஒப்புதல் வேண்டும். அவர்களின் ஒப்புதல் இல்லாமல் பங்குகளை வாங்கி விற்க முடியாது.

இந்த பங்கு விலக்கல் நடவடிக்கையின்போது புரோக்கர்கள் custodian ஒப்புதல் இல்லாமல் பங்குகளை விற்பதற்கு விண்ணப்பித்துள்ளனர். கஸ்டோடியன் ஒப்புதல் இல்லாத காரணத்தினால் இந்த பங்குகளை விற்க முடியவில்லை. இதன் காரணமாகவே இலக்கை எட்ட முடியாமல் இந்தப் பங்கு விலகல் தோல்வியடைந்தது.

இவ்வாறு, அதிக முதலீட்டாளர்கள் பங்குகளை திரும்பப்பெற ஒப்புதல் அளித்து விட்டதாக செய்தி வெளியாகும் போது, பங்கு விலக்கல் நடவடிக்கை வெற்றிபெற்று விட்டால் தமது பங்குகள் விற்க முடியாமல் தேங்கி விடும் என்ற பயத்தால் தமது பங்குகளை குறைந்த விலையில் திரும்ப அளிக்க முன் வருவார்கள். அதன் காரணமாக பங்கு விலக்கல் நடவடிக்கை வெற்றி பெறும் என்பதற்காகவே போலியாக கஸ்டோடியன் ஒப்புதல் இல்லாமல் புரோக்கர்கள் பங்குகளை திரும்ப அளிக்க விண்ணப்பித்திருக்கின்றனர் என்று இது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பங்குச்சந்தையில் சிறு முதலீட்டாளர்களை ஏமாற்றுவதற்கு பல நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. சிறு முதலீட்டாளர்கள் தமக்கான பாடத்தை படித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பங்குசந்தையின் அபாயங்களை புரிந்து கொண்டு செயல்பட முடியும்.

(கட்டுரையாளர் ஷியாம் சுந்தர் ஐடி துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்