Aran Sei

குறைந்தபட்ச ஊதியம் உயருமா? – கோடிகளில் ஊதியம் பெறும் அமெரிக்க தலைமை நிர்வாகிகள் மீது விமர்சனம்

Image Credit : usnews.com

ரு மணி நேர வேலைக்கு $7.3 (சுமார் ரூ 550) என்ற அளவில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, மாறாமல் இருக்கும் குறைந்த பட்ச ஊதியத்தை, $15 (சுமார் ரூ 1100) ஆக உயர்த்துவதற்கான போராட்டம் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதற்கிடையில், கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் பெறும் பெரும் தொகை சம்பளம் கண்டனத்தை எதிர் கொள்கிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஒன்றிய அளவிலான குறைந்தபட்ச கூலியை தற்போதைய $7.3லிருந்து படிப்படியாக உயர்த்தி, 2025-ல் $15 ஆக்குவது அமெரிக்க பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கான ஜனநாயகக் கட்சியின் திட்டத்தில் ஒரு பகுதியாக உள்ளது.

கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்பதற்கான, ஜோ பைடன் அரசின் $1.9 லட்சம் கோடி (சுமார் ரூ 138 லட்சம் கோடி) திட்டத்தில் குறைந்தபட்ச கூலியை $15 ஆக உயர்த்துவதும் அடங்கும் என்று தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

இந்த உயர்வு 2.7 கோடி அமெரிக்கர்களின் வருமானத்தை அதிகரிக்கும் என்றும், 10 லட்சம் பேரை ஏழ்மையிலிருந்து மீட்கும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிதிநிலை அலுவலகம் மதிப்பிட்டுள்ளது.

கலிஃபோர்னியா, ஃபுளோரிடா, மசாச்சுசெட்ஸ், இல்லினாய் போன்ற மாநிலங்கள் குறைந்தபட்ச கூலியை உயர்த்துவதற்கான திட்டங்களை ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நியூயார்க் நகரில் குறைந்தபட்ச ஊதியம் $15 ஆக உள்ளது.

ஒன்றிய அளவிலான குறைந்தபட்ச கூலியை மணிக்கு $15 ஆக உயர்த்துவது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மை உறுப்பினர்கள் இந்த கூலி உயர்வை எதிர்க்கின்றனர். இதன் மூலம் 14 லட்சம் வேலை வாய்ப்புகள் இல்லாமல் போகும் என்ற அவர்களது வாதத்தை முற்போக்காளர்கள் மறுக்கின்றனர்.

1968 முதல் ஏற்பட்டுள்ள உற்பத்தித் திறனுடன் ஒப்பிட்டால், குறைந்த பட்ச கூலி மணிக்கு $24 ஆக உயர வேண்டும், ஆனால் அது 2009 முதல் $7.3 ஆகவே உள்ளது என்று ராபர்ட் ரெய்ஷ் என்ற முன்னாள் தொழிலாளர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“67% அமெரிக்கர்கள் குறைந்தபட்ச கூலியை மணிக்கு $15 ஆக உயர்த்துவதை ஆதரிக்கிறார்கள்.” என்று கூறியுள்ள அவர், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அரசாங்கம், “பணக்காரர்கள் மீது வரி விதிக்க வேண்டும், கூலியை உயர்த்த வேண்டும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

“கூகிளின் தலைமை நிறுவனமான ஆல்ஃபபெட் தலைமை நிர்வாகி சென்ற ஆண்டு $28 கோடி ஊதியம் (சுமார் ரூ 20,440 கோடி) பெற்றுள்ளார். ஆனால், குறைந்தபட்ச ஊதியம் இன்னும் மணிக்கு $7.3 ஆகவே உள்ளது” என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

$28 கோடி சம்பளம் பெறும் கூகிளின் தலைமை நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகிய சுந்தர் பிச்சை, அதிக ஊதியம் பெறும் 100 தலைமை நிர்வாகிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லா $4.2 கோடி ஆண்டு ஊதியம் பெறுகிறார்.

சுந்தர் பிச்சை, ஒரு சராசரி கூகிள் ஊழியரை விட 1,085 மடங்கு அதிகம் ஈட்டுகிறார் என்றும், அவரது ஊதியத்தில் சுமார் 95% மிகையானது என்றும் தலைமை நிர்வாகிகள் ஊதியம் பற்றிய ஆய்வு தெரிவிக்கிறது.

குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அதே நேரம், தலைமை நிர்வாகிகளின் சம்பளம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்று அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

1940-களில் அது தொடர்பான தரவுகள் திரட்டப்பட ஆரம்பித்ததில் இருந்து, தொழிலாளர்கள் பெறும் கூலி, இப்போது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகக் குறைந்த பங்கை கொண்டுள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லறை விற்பனை நிறுவனமான வால்மார்ட், 4.25 லட்சம் ஊழியர்களுக்கு சராசரி ஊதியத்தை மணிக்கு $15-க்கு உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. வால்மார்ட்டில் 15 லட்சம் ஊழியர்கள் வேலை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக சேரும் ஊழியர்களுக்கு $11 ஊதியம் மட்டுமே தொடரும் என்றும் வால்மார்ட் கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்