Aran Sei

மத்திய அரசின் கடன்: வரலாறு காணாத அதிகரிப்பு

credit: tavaga.com

த்திய அரசு இந்த ஆண்டில் கூடுதலாக ரூ.4.34 லட்சம் கோடி கடன் பெற திட்டமிட்டுள்ளதாக நேற்று (செப்டம்பர் 30) நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 2020-21-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு இந்த ஆண்டில், மொத்தமாக ரூ.7.80 லட்சம் கோடி கடன் பெறும் என்று கூறியிருந்தார்.

மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக மத்திய அரசுக்கு ஏற்படவிருக்கும் வருமான இழப்புகளை சமாளிப்பதற்கு இந்த ஆண்டு மத்திய அரசு மொத்தமாக ரூ.12 லட்சம் கோடி கடன் பெறும் என்று நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது.

அதன்படி, இந்த ஆண்டு மொத்தமாக ரூ.12 லட்சம் கோடி கடன் பெறும் திட்டத்தில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக பொருளாதார விவகார செயலாளர் தருண் பஜாஜ் குறிப்பிட்டுள்ளார்.

வருவாய் பற்றி எங்களிடம் உள்ள மதிப்பீடுகளின்படி, வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். மொத்தமாக செய்ய வேண்டிய செலவீனம் மற்றும் எதிர்ப்பாராத செலவுகளை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்ட பார்த்தோம் என்றால் இந்த ஆண்டு ரூ.12 லட்சம் கோடி போதுமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு செப்டம்பர் மாதம் வரையில் ரூ.7.66 லட்சம் கோடி கடனாக பெற்றுள்ளது என்றும் அடுத்த ஆறு மாதங்கள் ரூ.4.34 லட்சம் கோடி கடனை திரட்ட உள்ளதாக தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது வரி வருமானம் 30 விழுக்காடு இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் குறைந்துள்ளது. மத்திய அரசின் வருவாயில் ஏற்பட்டிருக்கும் சுருக்கத்தினால் அரசு கடன் பெறும் தொகை அதிகரித்துள்ளது.

மத்திய அரசு கூடுதலாக செலவீனத்தை அதிகப்படுத்தவில்லை என்றாலும் கூட இந்த ஆண்டு குறைந்தபட்சம் ரூ.1.1 லட்சம் கோடி அதிகமாக கடன் பெற வேண்டி வரும் என்று ஐசிஆர்ஏ நிறுவனத்தின் முதன்மை பொருளியளாளர் அதிதி நாயர் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு இந்த ஆண்டு நிதி பற்றாகுறை இலக்கை அடைய முடியாது என்று கேர் ரேட்டிங்கிஸின் தலைமை பொருளியளாளர் மதன் சப்நவீஸ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மத்திய அரசின் நிதி பற்றாகுறை 9 விழுக்காடு அளவுக்கு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்