Aran Sei

கொரோனா காலத்தில் மத்திய அரசின் செலவுகள் போதுமானதுதானா?

credit: scroll.in

கொரோனா காலத்தில் 1 லட்சத்தி 35 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை ‘பிரதமர் ஏழைகள் நல திட்டம்’ (PMGKY) மூலமாக பெண்களுக்கும் ஏழைகளும் விவசாயிகளும் வங்கி கணக்கு வழியாக மத்திய அரசு  செலுத்தியிருப்பதாக தி மிண்ட் நாளேடு தெரிவித்துள்ளது.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு நாடு தழுவிய பொது முடக்கத்தை மார்ச் 25-ம் தேதி அறிவித்தது. பொது முடக்கம் ஏழை எளிய மக்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளை குறைக்க நிதி அமைச்சர் மார்ச் மாத இறுதியில் 1 லட்சத்தில் 70 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்தார். அதை தொடர்ந்து, மே மாதம் 20 லட்சம் கோடி பொருளாதார மீட்பு நிதி தொகுப்பும் அறிவிக்கப்பட்டது.

இந்த மீட்பு நிதி தொகுப்பில், ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு தானியங்கள், பருப்புகள், சமையல் எரிவாயுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த பொருளாதார மீட்பு தொகுப்பில், ரூ.68,921 கோடி நிதி 42 கோடி ஏழைகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் 20 கோடி பெண்களுக்கு இரண்டு தவனையாக ரூ.30,952 கோடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 8.7 கோடி விவசாயிகளுக்கு ரூ.17,891 கோடி நிதி வழங்கப்படும் என்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.4,987 கோடி வழங்கப்படும் என்று உறுதிபட தெரிவிக்கப்பட்டது.

பொது முடக்க காலத்தில் மீண்டும் சொந்த மாநிலத்துக்கு திரும்பிய குடிப்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் 27,000 கோடி செலவிடப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரி மிண்ட் நாளேட்டுக்கு தெரிவித்துள்ளர்.

கடந்த ஐந்து மாதங்களில் மத்திய அரசு, மாநிலங்களுக்கு 2 லட்சத்தி 17 ஆயிரம் கோடி நிதியை மத்திய நிதி தொகுப்பிலிருந்து பிரித்து வழங்கியுள்ளது. சென்ற ஆண்டில் இதே ஐந்து மாதங்களில் வழங்கப்பட்டதைவிட இது ரூ.37,629 கோடி குறைவாகும். இந்த நிதி ஆண்டில் மத்திய அரசு மாநிலங்களுக்கு 7 லட்சத்தி 80 ஆயிரம் கோடிகளை மத்திய நிதி தொகுப்பிலிருந்து வழங்கும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இருபது லட்சம் கோடி பொருளாதார மீட்பு நிதி தொகுப்பில் ‘பிரதமர் ஏழைகள் நல திட்டத்துக்கு’ 0.5 விழுக்காடு நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் சுஷந்த் ஹெக்டே தி வையர் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 20 லட்சம் கோடி நிதி தொகுப்பில் வெறும் 3.22 லட்சம் கோடி ரூபாயை மட்டுமே அரசு நேரடியாகச் செலவிடுகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது இந்த நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியது.

இந்த பொருளாதார மீட்பு நிதி தொகுப்பில் நான்கில் மூன்று பங்கு கடன் பெறும் வசதிகளுடன் (liquidity) தொடர்புடையது என்றும் சுஷந்த் ஹெக்டே தி வையர் இணையத்தில் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளார்

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்