Aran Sei

” உலகமயம் நாட்டின் பொருளாதாரத்தை பாதித்து விட்டது ” – வெளியுறவுத்துறை அமைச்சர்

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் - Image Credit : thehindu.com

ந்தியாவுக்குக் கிழக்கே உள்ள 15 நாடுகள் ஒரு பிராந்திய பொருளாதாரக் கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் (RCEP) கையெழுத்திட்ட பிறகு அதில் இந்தியா பங்கேற்பது பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன.

சீனா முயற்சியில் உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் – இந்தியா, அமெரிக்கா நிலை என்ன?

சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், புரூனே, கம்போடியா, மியன்மார் (பர்மா), லாவோஸ் ஆகிய 15 நாடுகள் “பிராந்திய முழுமையான பொருளாதார கூட்டமைப்பு (RCEP)” என்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் சென்ற ஞாயிற்றுக் கிழமை கையெழுத்திட்டன. இந்த கூட்டமைப்பு தொடர்பான பேச்சு வார்த்தைகளில் பங்கேற்ற இந்தியா சென்ற ஆண்டு நவம்பர் மாதம் அதிலிருந்து விலகி விட்டிருந்தது..

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், வர்த்தக ஒப்பந்தங்களையும் உலகமயமாக்கலையும் தாக்கியிருக்கிறார்.

“திறந்த பொருளாதாரம் என்ற பெயரில், நாம் வெளிநாடுகளின் விலை குறைவான பொருட்களையும், நியாயமற்ற உற்பத்தி ஆதாயங்களையும் நம் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்து விட்டோம்.” என்று அவர் பேசியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஆதரவில் நடந்த டெக்கான் உரையாடல் கருத்தரங்கில் பேசிய அவர், “இது அனைத்தும் வெளிப்படையான, உலகமயமான பொருளாதாரம் என்ற பெயரில் செய்யப்பட்டது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

“இந்திய அரசு வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து விலகிச் சென்று ‘சுயசார்பு இந்தியா’ கொள்கையை பின்பற்ற முடிவு செய்திருக்கிறது” என்றும், “அதன் மூலம் இந்தியா வர்த்த விதிகளை தானே தீர்மானித்து முழுமையான தேசிய சக்தியை வலுப்படுத்த முடியும்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

“கடந்த கால வர்த்தக ஒப்பந்தங்கள் நம் நாட்டில் தொழில்துறை நலிவுக்கு இட்டுச் சென்றன. அத்தகைய ஒப்பந்தங்களின் எதிர்கால விளைவு, நமக்கு ஆதாயம் இல்லாத சர்வதேச கடப்பாடுகளுக்கு நம்மை இட்டுச் செல்லும்” என்று கூறிய அவர், “வெளிப்படைத்தன்மை, திறன் அதிகரிப்பு ஆகியவற்றை வலியுறுத்துபவர்கள் முழுச் சித்திரத்தையும் வழங்குவதில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெய்சங்கரின் பேச்சிலிருந்து, இந்தியா RCEP கூட்டமைப்பில் சேர்வதற்கான அழைப்பை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவதாக தி ஹிந்து கருத்து தெரிவித்துள்ளது.

RCEP “சுதந்திர வர்த்தக ஒப்பந்த” நாடுகள் உலகப் பொருளாதாரத்தில் 30% பங்கையும் உலக மக்கள் தொகையில் 30%-ஐயும் கொண்டிருக்கும், இந்த வர்த்தக ஒப்பந்தம் 220 கோடி நுகர்வோரை சென்றடையும்

“இது நமது பிராந்தியத்துக்கு ஒரு மிகப்பெரிய முன்னேற்ற அடிவைப்பு” என்று கூறியுள்ளார் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங். “சர்வதேசவாதம் ஆதரவை இழந்து வரும் நிலையில், உலக பொருளாதார வளர்ச்சி குறைந்து வரும் நிலையில், RCEP ஆசிய நாடுகள் திறந்த, ஒன்றிணைக்கப்பட்ட வழங்கல் சங்கிலிகளையும், சுதந்திர வர்த்தகத்தையும், நெருக்கமான சார்புறவையும் ஆதரிக்கின்றன என்று காட்டுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

“ஆசிய நாடுகளுடனான வர்த்தக வாய்ப்புகளை பயன்படுத்த விரும்பினாலும், இந்தியா அவற்றைத் தொடர்ந்து தவற விட்டுக் கொண்டிருக்கிறது.” என்கிறார் பொருளாதாரா அறிஞர் சஞ்சய பாரு. RCEP-ல் சேராமல் இந்தியா விலகி இருப்பதை 1990-களில் ஆசியா பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்றத்தில் இணையாமல் இருந்ததுடன் அவர் ஒப்பிடுகிறார். “கிழக்கில் செயல்படுவது கொள்கையின் முக்கியமான பகுதியாகவும், தர்க்கபூர்வமான நீட்சியாகவும் RCEP உள்ளது” என்று அவர் கூறியுள்ளதாக தி ஹிந்து தெரிவிக்கிறது.

“கொரோனா நோய்த்தொற்று காரணமாகவும், அமெரிக்கா-சீனா பதற்றம் காரணமாகவும் உலக வர்த்தகக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. புதிய வழங்கல் சங்கிலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன, புதிய தொடர்புகள் ஏற்படுத்தப்படுகின்றன, சில பத்தாண்டுகள் நீடிக்கப் போகும் வர்த்தகக் கட்டமைப்புகள் எழுப்பப்படுகின்றன. இந்தக் கட்டமைப்பில் சிலவற்றை இந்தியா ஈர்க்கத் தவறினால் பல ஆண்டு வளர்ச்சியிலிருந்து இந்தியா விலக்கி வைக்கப்பட்டு விடும்” என்று புளூம்பெர்க் பொருளாதார நிபுணர் மிஹிர் ஷர்மா எகனாமிக் டைம்ஸ்-ல் எழுதிய கட்டுரையில் கருத்து தெரிவித்துள்ளார்.

“ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்ய வேண்டும். புவிசார் அரசியல் நிலைமைகள், இந்தியாவின் வரலாறு, பொருளாதார பொது அறிவு இவை அனைத்தும் அந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதை வலியுறுத்துகின்றன. இந்தியா தயங்கினால் மற்றவர்கள் பலனடைவார்கள். வியட்னாம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்த ஆண்டு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

“காப்புவாதம்தான் இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்கிறது, திறந்த தன்மை இல்லை” என்கிறார் மிகிர் ஷர்மா.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்