Aran Sei

‘வெங்காயத்திலும் ஊழல் வேண்டாம்’ – மு.க.ஸ்டாலின் ட்வீட்

Image Credits: Mashed

விலை ஏற்றம் காரணமாக மீண்டும் எகிப்தில் இருந்து 135 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர, கா்நாடக, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தொடா்ந்து மழை பொழிந்து வருவதால் அங்கிருந்து தமிழகத்துக்குக் கொண்டுவரப்படும் பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் அதன் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.130 க்கு விற்கப்படுகிறது. செவ்வாய் அன்று வெங்காயத்தின் விலை டெல்லியில் ஒரு கிலோவுக்கு ரூ.51 ஆகவும், கொல்கத்தாவில் ஒரு கிலோ ரூ.65 ஆகவும், மும்பையில் ஒரு கிலோ ரூ.67 ஆகவும் இருந்தது என மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் வெங்காய விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சா் செல்லூா் ராஜு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

இறக்குமதி செய்யப்பட்டு இருக்கும் எகிப்து வெங்காயம் மொத்தச் சந்தையில் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை ஆகிறது. பல்லாரி வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்துவதற்காகத் தமிழ்நாடு முழுவதும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இருப்பினும், சென்னையில் மற்ற மெட்ரோ நகரங்களை ஒப்பிடும்போது வெங்காயத்தின் விலை அதிகரித்திருந்ததாக ‘பிரஸ்ட் போஸ்ட்’ செய்தி குறிப்பிடுகிறது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “வெங்காயம் கிலோ ரூ.130! நெல்மணிகள் நனைந்து விவசாயிகளும் வெங்காய விலையால் தாய்மார்களும் கண்ணீர் விட களிநடம் போடுகிறது அதிமுக அரசு! வேளாண் சட்டங்களால் பதுக்கல் அதிகமாகும்; விலை ஏறும்!” என்றும் “வெங்காயத்திலும் ஊழல் வேண்டாம்! அனைவருக்கும், நியாய விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை தேவை!” எனக் கூறியுள்ளார்.

மத்திய அரசு, உள்நாட்டில் வெங்காயத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்காகவும் கடந்த மாதம் வெங்காய ஏற்றுமதியைத் தடை செய்த நிலையிலும் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சென்ற மாதம் மத்திய அரசு நிறைவேற்றிய அத்தியாவசிய பொருட்கள் சட்டத் திருத்தத்தின் படி வெங்காயம் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்