Aran Sei

வங்கி யூனியன்களில் பிளவும் வங்கித் துறையின் எதிர்காலமும் – தாமஸ் ஃபிராங்கோ

தாமஸ் ஃபிராங்கோ - photo credit : facebook page

கில இந்திய வங்கி அலுவலர்கள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் ஃபிராங்கோ வங்கி நிர்வாகங்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே போடப்பட்டுள்ள இரு தரப்பு ஒப்பந்தம் பற்றியும் வங்கித் துறையின் எதிர்காலம் பற்றியும் தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

“3 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த பேச்சுவார்த்தைகளின் இறுதியில், 2017 முதலான வங்கி ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் நவம்பர் 11-ம் தேதி கையெழுத்தாகியுள்ளது. தொழில் தாவா சட்டத்தின் கீழ் வரும் ஊழியர்களுக்கு இது இருதரப்பு ஒப்பந்தம் எனவும், அலுவலர்களுக்கு இது கூட்டுக் குறிப்பு என்றும் அழைக்கப்படுகிறது” என்று “நிதித்துறை பொறுப்புணர்வுக்கான மையத்தின்” இணையதளத்தில் வெளியான கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நேரத்தில் “இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு” (BEFI) பேச்சு வார்த்தையிலிருந்து விலகிக் கொண்டது என்றும் பிற யூனியன்களும், சங்கங்களும் இதை ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் என்று கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

15% ஊதிய உயர்வு, விடுப்பு சலுகைகள், ஓய்வூதியம் உள்ளிட்டு ஊழியர்களுக்கு கிடைத்துள்ள பலன்களை பட்டியலிட்டுள்ள அவர், இந்த ஒப்பந்ததை போற்றுவதற்கு 100 காரணங்கள் உள்ளன என்று ஊழியர்கள் சங்கம் கூறும் நிலையில், அலுவலர்கள் சங்கம் விடுபட்டுப் போன 18 கோரிக்கைகள் தொடர்பாக வங்கிகளின் கூட்டமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இருதரப்பு ஒப்பந்தத்தின் காரணமாக வங்கிகளுக்கு ஆண்டு தோறும் ரூ 7,898 கோடி கூடுதல் செலவு பிடிக்கும் என்று ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது. “செயல்பாட்டோடு இணைந்த ஊதியம்” என்ற முறை முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவர் சுனில் மேத்தா தெரிவித்துள்ளார்.

சர்வதேச வங்கிகள், ரிசர்வ் வங்கி, மத்திய அரசு அலுவலகங்கள், பல மாநில அரசு அலுவலகங்கள், ஐடி நிறுவனங்கள் போல வாரத்துக்கு 5 நாட்கள் வேலையை அமல்படுத்துவது, ஓய்வூதியங்களில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை சரி செய்வது ஆகிய முக்கிய கோரிக்கைகள் விடுபட்டுள்ளதாக தாமஸ் ஃபிராங்கோ கூறுகிறார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு தொழிற்சங்கங்களிடையே ஏற்பட்ட பிளவு என்று அவர் கூறியுள்ளார். அலுவலர்களும் ஊழியர்களும் “வங்கி சங்கங்களின் ஒருமித்த மன்றம்”(UFBU) மூலமாக ஒற்றுமையாக செயல்பட்டு வந்தன. UFBU-ல் 4 தொழிலாளர் சங்கங்களும், 4 அலுவலர்கள் சங்கங்களும் இணைந்துள்ளன.

சென்ற பேச்சுவார்த்தையின் போது UFBU-வைச் சேராத, சிவசேனாவுடன் இணைந்த யூனியனை பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க அரசு அனுமதித்தது என்றும் இந்த முறையும் அது தொடர்கிறது என்றும் சுட்டிக் காட்டும் தாமஸ் ஃபிராங்கோ, இது UFBU-ன் பலத்தை குறைப்பதற்கான நடவடிக்கை என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

வங்கி யூனியன்களிடையே ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாக பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்பது அரசுக்கு எளிதாகி விடும் என்று தாமஸ் ஃபிராங்கோ கவலை தெரிவிக்கிறார்.

லட்சுமி விலாஸ் வங்கி முடக்கம் – வெளிநாட்டு வங்கிக்கு விற்க திட்டம்

மேலும், மோடி அரசு அதிகாரத்துக்கு வந்த பிறகு, அலுவலர்/ஊழியர் சார்பாக வங்கிகளின் இயக்குநர் குழுவில் பிரதிநிதி நியமிக்கப்படுவதில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார். டெல்லி உயர்நீதிமன்றம் இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்த பிறகும் தொழிற்சங்கங்கள் தமது பிரநிதிகளை இயக்குநர் குழுக்களில் நியமிக்க முடியவில்லை.

தொழில்தகராறு சட்டமும் தொழிற்சங்க சட்டமும் தொழில் உறவுகள் 4 தொகுப்பு விதிகளாக மாற்றப்பட்ட பிறகு ஏற்பட்டுள்ள பின்னடைவுகளையும் தாமஸ் ஃபிராங்கோ பட்டியலிடுகிறார்.

  1. 10%-க்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வங்கி நிர்வாகம் மறுத்து விடும்.
  2. ரூ 18,000-க்கும் அதிகமான மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள் ஊழியர்கள்/மேற்பார்வை ஊழியர் என்று அழைக்கப்படுவார்கள்.
  3. வேலை நிறுத்தங்களுக்கு 60 நாட்கள் முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும். இது முன்பு இருந்த 15 நாட்களை விட 4 மடங்கு அதிகம். இந்த முன் அறிவிப்பு தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்படும். தீர்ப்பாயத்தில் அது தீர்க்கப்படவில்லை என்றால், மீண்டும் 60 நாட்கள் முன் அறிவிப்பு வழங்க வேண்டும். இதன் மூலம், நிர்வாகத்துக்கு எதிராக போராடுவதற்கு தொழிலாளர்கள் கையில் இருக்கும் ஒரு முக்கியமான கருவி பறிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 தொழிலாளர் சட்ட தொகுப்பு விதிகளை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் நவம்பர் 26 அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. ஆனால், வங்கித் துறையிலிருந்து “அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம்” (AIBEA), “இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு” (BEFI) என்ற இரண்டு சங்கங்கள் மட்டுமே பங்கேற்கின்றன என்று தாமஸ் ஃபிராங்கோ தெரிவித்துள்ளார்.

ஊழியர் பற்றாக்குறை, வங்கிக் கட்டணங்கள், மோசமான சேவை இவற்றின் காரணமாக யூனியன்களும், கூட்டமைப்புகளும் பொதுமக்களிடமிருந்தும், வாடிக்கையாளரிடமிருந்தும் அன்னியமாகிக் கொண்டிருக்கின்றனர் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்களுக்கு இடையேயான ஒற்றுமையின்மை எதிர்காலத்தில் மோசமான நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றும் வங்கித் துறையின் எதிர்காலம் தொழிற்சங்க தலைவர்களின் கையில்தான் உள்ளது என்றும் தாமஸ் ஃபிராங்கோ முடிக்கிறார்.

நன்றி : www.cenfa.org

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்