Aran Sei

ஐடி சேவை நிறுவனங்கள் – சந்தை மதிப்பில் டிசிஎஸ் உலகில் முதலிடம்

Credit : https://www.moneycontrol.com

ந்தியாவின் மிகப்பெரிய ஐடி (தகவல் தொழில்நுட்ப) நிறுவனமான டிசிஎஸ் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, முதலீட்டாளர்களிடம் இருந்து தனது பங்குகளைத் திரும்பி வாங்கிக்கொள்ள முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய உச்சத்தை அடைந்து வருகின்றன. கொரோனா நோய்த்தொற்று காரணமாகப் பல நிறுவனங்கள் முடங்கிக் கிடந்தாலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஊழியர்கள் தமது  வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதற்கு நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதனால் நிர்வாகச் செலவு பெருமளவில் குறைந்துவிட்டது. அதனால் பல நிறுவனங்களில் லாபங்கள் அதிகரித்துள்ளன.

டிசிஎஸ் இந்த வாரம் 10 லட்சம் கோடி ரூபாய் அளவு சந்தை மதிப்பு உடைய நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்தச் சாதனை மதிப்பை டிசிஎஸ் நிறுவனம் முதல் முறையாக அடைந்துள்ளது. இந்திய அளவில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக சந்தை மதிப்புடைய  நிறுவனமாக டிசிஎஸ் இருக்கிறது. உலக அளவில் மிக அதிக சந்தை மதிப்புடைய ஐடி சேவை நிறுவனம் என்ற இடத்தையும் பிடித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த 6 மாதங்களில் 80 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. அந்த நிறுவனத்திடம் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உபரிப் பணம் உள்ளது. அதைப் பயன்படுத்தி முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.3,000 விலை கொடுத்து பங்குகளை வாங்கப் போவதாக டிசிஎஸ் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வருகிறது. இன்றைய நாள் முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு ரூ.2811-க்கு வர்த்தகம் ஆகிறது.

சந்தையைப் பொறுத்தவரை டிசிஎஸ் இன்னும் அதிக அளவிற்குப் பங்குகளைத் திரும்ப வாங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. 50 ஆயிரம் கோடி ரூபாய் உபரிப் பணம் இருப்பதால் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிறுவனம் பங்குகளைத் திரும்பப் பெறும் என்று எனது எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ஆனால், பங்குகளின் விலை உச்சத்தில் இருப்பதால் இந்த நடவடிக்கை முதலீட்டாளர்களுக்கு எந்த அளவிற்கு லாபத்தைப் பெற்றுத் தரும் என்று கணிக்க முடியாத நிலையே உள்ளது.

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி ஒரு நிறுவனத்தின் நிறுவனர் குழுவினர் 75 சதவீதம் அளவிற்கு மட்டுமே பங்குகளை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை 72 சதவீதப் பங்குகள் அதன் நிறுவனர் குழுவினர் வசம் உள்ளன. அதனால் அவர்கள் கூடுதலாக, அதிகபட்சம் 3 சதவீதம் பங்குகளை மட்டுமே வாங்க முடியும்.

அதனால் முதலீட்டாளர்களிடம் இருந்து குறைவான பங்குகளை மட்டுமே வாங்குவார்கள். இதற்கு ஏற்பு விகிதம் (acceptance ratio) என்று பெயர். ஒரு முதலீட்டாளர் 100 பங்குகளை வைத்திருந்தால் அதில் எத்தனை பங்குகளை நிறுவனம் திரும்பப் பெறும் என்பதே ஏற்பு விகிதம் ஆகும். டிசிஎஸ் நிறுவனத்தில் இந்த அளவு குறைவாகவே இருக்கக்கூடும் என்று பங்குச் சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

என்றாலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் டார்லிங் நிறுவனங்கள் என்று அறியப்படுகின்றன. பல வருடங்களாக முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்து வருவதே அதற்குக் காரணம். அதனால் டிசிஎஸ் நிறுவனப் பங்குகளை நீண்ட கால முதலீட்டாளர்கள் எப்பொழுதும் தங்கள் முதலீட்டுத் தொகுப்பில் சேர்த்து வரலாம்.

டிசிஎஸ் நிறுவனத்தை அடுத்து விப்ரோ நிறுவனமும் தனது பங்குகளைத் திரும்பப் பெறுவதாக இன்று அறிவித்துள்ளது. ஆனால் எவ்வளவு பங்குகளைத் திரும்பப் பெறப் போகிறது என்று எந்த அறிவிப்பையும் விப்ரோ நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து விப்ரோ நிறுவனப் பங்கு 8 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

விப்ரோ நிறுவனத்திடமும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உபரிப் பணம் இருக்கிறது. அதனால் அந்த நிறுவனமும் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தனது பங்குகளைத் திரும்பப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பு காரணமாக இன்று அந்த நிறுவனத்தின் பங்கு உயர்ந்தது.

இதனைத் தொடர்ந்து இன்போசிஸ் மற்றும் HCL நிறுவனங்களும் பங்குகளைத் திரும்பப் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பங்குகளைத் திரும்பப் பெறும் இந்த நடவடிக்கை லாபமாக அமையுமா என்பதைக் கணக்கிட்டுப் பங்குகளை வாங்கும்படி முதலீட்டாளர்கள் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர் ஷியாம் ஐடி துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிபவர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்