Aran Sei

மது விற்பனையில் புது சாதனையும் பால் விற்பனையில் வீழ்ச்சியும் – தமிழகம்

தீபாவளி பண்டிகையின் போது பல கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மதுபானம்  விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் பால் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது.

டாஸ்மாக் எனப்படும் தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகத்தின் சில்லறை மதுபான விற்பனை மூலம் இரண்டு நாட்களில் 465.79 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. தீபாவளி நாளில் மட்டும் 237.91 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தீபாவளிக்கு முந்தைய நாள் (நவம்பர் 13) 227.88 கோடி மதிப்புள்ள மதுபானம்  விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பல்வேறு மதுபானக் கடைகளில் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி, இந்த ஆண்டு மதுரை மண்டலம் அதிகபட்ச விற்பனையைத் தொட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் திருச்சி உள்ளது என்று ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

மதுரை மண்டலத்தில் உள்ள மது பிரியர்கள் 103.82 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை வாங்கியுள்ளனர். அதே நேரத்தில், திருச்சி மண்டலத்தில் 95.47 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. சென்னை மண்டலத்தின் மதுபான விற்பனை ரூபாய் 94.36 கோடியாகவும், சேலம் மண்டலத்தில் 87.58 கோடியாகவும், கோயம்புத்தூர் மண்டலத்தில் 84.56 கோடியாகவும் விற்பனை இருந்துள்ளது.

“கடந்த ஆண்டை விட வருவாய் அதிகமாக இருப்பதற்குக் காரணம், இந்த ஆண்டு இருமுறை மதுபானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் கொண்டாடுவதற்கான ஒரு தருணத்திற்கு மக்கள் காத்திருந்தனர். அதனால் விற்பனையும் நன்றாக இருந்தது.” என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில்,  இரண்டு நாட்களில் மது விற்பனை ரூ. 355 கோடியைத் தொட்டது. 2018 ஆம் ஆண்டில், தீபாவளி நாளில் 180 கோடியும், அதற்கு முந்தைய நாள் 148 கோடியுமாக மொத்தம் ரூ. 328 கோடி வருவாய் வந்தது.

விலை உயர்வு

டாஸ்மாக் மதுபானங்களின் விலை இந்த ஆண்டு இரண்டு முறை உயர்த்தப்பட்டது. பிப்ரவரி மாதம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களுக்கு (ஐஎம்எஃப்எஸ்) ஒரு குவாட்டர் பாட்டில் (180 மில்லி) விலை ரூ. 10 உயர்த்தப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு முழு பீர் பாட்டில் விலையும் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் (ஐஎம்எஃப்எல்) மீதான கலால் வரியை மத்திய அரசு 15 சதவீதம் உயர்த்தியது. இதன் விளைவாக, மதுபானங்களின் விலை ரூ. 10 முதல் 20 வரை அதிகரித்தது. டாஸ்மாக்கின் கீழ் மாநிலத்தில் 5,338 கடைகள் இயங்கி வருகின்றன. ஒரு நாளைக்கு ரூபாய் 130 கோடி முதல் 140 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனை ஆகின்றன.

ஆவின் விற்பனை

அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனை, சென்ற வார சனிக்கிழமையுடன் ஒப்பிட்டால், தீபாவளி (நவம்பர் 14, சனிக்கிழமை) அன்று 97,000 லிட்டர் சரிந்துள்ளது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 

மாநிலத்தின் தினசரி பால் விற்பனை சராசரியாக 24.15 லட்சம் லிட்டர் என்றும் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதால், இந்த விற்பனை வீழ்ச்சி எற்பட்டுள்ளதாக   ‘டைம்ஸ் ஆப் இந்தியா’  குறிப்பிட்டுள்ளது. 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்