Aran Sei

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்: கிடைக்குமா நிதி உதவி?

credit: saurenergy.com

கொரோனா காலத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகங்கள் சந்தித்து வரும் நெருக்கடியை சமாளிப்பதற்கு மத்திய நிதி அமைச்சர் சென்ற மே மாதம் ரூ. 90,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் ரூ. 30,000 கோடி நிதி உதவியை கோரியுள்ளது.

மத்திய மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனங்களுக்கும் தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கும் மின் சக்தி போன்ற இயற்கை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் பணம் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கு மொத்தம் ரூ. 30,000 கோடி தேவைப்படுகிறது என்று மதிப்பீடு செய்துள்ளது.

மத்திய அரசு இன்னும் இந்த நிதி உதவிக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில் வெகு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தி இந்து நாளேடு குறிப்பிடுகிறது.

இது குறித்து அரண் செய் தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் சா.காந்தியுடன் பேசிய போது, ”பொது முடக்கம் காரணமாக மின் பகிர்மான கழகங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட மத்திய அரசு ரூ. 90,000 கோடி கடன் உதவி வழங்குவதாக முடிவெடுத்துள்ளது. அந்த தொகையிலிருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் ரூ. 39,000 கோடியை உதவியாக கோரியுள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்துக்கு மின்சாரம் உற்பத்தி செய்து விற்றுள்ள நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக இந்தக் கடன் உதவி கேட்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 85 மின் பகிர்மான கழகங்கள் உள்ளன. அவற்றுக்கு மொத்தமாகவே ரூ. 90,000 கோடிதான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்க, மத்திய அரசு  தமிழ்நாட்டு மின் கழகத்துக்கு எவ்வளவு நிதி உதவியை வழங்கும் என்பது இனிதான் தெரியும்”

“தமிழ்நாடு உதய் (UDHAY) திட்டத்தில் இணைத்திருப்பதால் மின் பகிர்மான கழகம் இந்த உதவியை கோரியுள்ளதா என்ற கேள்விக்கு, “உதய் திட்டம் என்பது வேறு. அதற்கும் இதற்கும் தொடர்பில்லை” என்று அவர் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்