Aran Sei

தமிழ்நாடு – `முதலீடுகளை ஈர்ப்பதில் 2வது இடம். செயல்படுத்துவதில் 14வது இடம்’

credit : twitter

மிழக அரசு 14 நிறுவனங்களுடன் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 10,000 கோடி மதிப்பிலான இந்த முதலீடு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 7000 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் அதிகபட்சமாக 6,300 கோடி மதிப்பில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முறையில் 810 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்ய தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியிலும், 50 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலும் முதலீடு செய்ய உள்ளது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மந்த்ரா நிறுவனம் தகவல் தரவு மையம் அமைக்க 750 கோடி முதலீடு செய்ய உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த டிபிஐ கம்போசைட்ஸ் நிறுவனம் 300 கோடி மதிப்பில் காற்றாலைத் தகடுகள் உற்பத்தி செய்ய முதலீடு செய்துள்ளது.

ஆட்டோமொபைல் துறையில் அப்போல்லோ டயர்ஸ், 505 கோடி மதிப்பில் ஒரகடத்தில் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யக் கையொப்பமிட்டுள்ளது.

லை- எனர்ஜி 300 கோடி மதிப்பில் பேட்டரி தயாரிக்கவும், தென்கொரியாவைச் சேர்ந்த எல்எஸ் ஆட்டோமோட்டிவ் 250 கோடி மதிப்பில் ஆட்டோ சுவிட்சுகள் தயாரிக்க கையொப்பமிட்டுள்ளது.

ஹுண்டாய் நிறுவனம் 109 கோடியில் உதிரிப் பாகங்கள் உற்பத்தி விரிவாக்கப் பணிக்காகவும், க்ரீண்டேக் மோட்டார்ஸ் 90 கோடி மதிப்பில் பேட்டரி தயாரிக்கவும் புரிந்துணர்வு செய்துள்ளது.

ஓஷங்க் ஹைடெக் நிறுவனம் ரூ.200 கோடி முதலீட்டில் கார்பன் ஃபைபா் தகடுகள் உற்பத்தி செய்யும் திட்டத்துக்கான ஒப்பந்தமும், சிங்கப்பூரைச் சோ்ந்த வேன்ஸ் கெமிஸ்ட்ரி நிறுவனம் ரூ.50 கோடி முதலீட்டில் மின்கழிவு மறுசுழற்சி செய்ய ஒப்பந்தமும் கையொப்பமானது.

இனாக்ஸ் ஏயர் நிறுவனம் 50 கோடியில் திரவ ஆக்சிஜன் தயாரிக்கவும், கவுண்டர் மெஷர் 51 கோடியில் உதிரிப் பாகம் தயாரிக்கவும் ஒப்பந்தம் கையொப்பமானது.

பிரிட்டானியா நிறுவனம் பிஸ்கட் தயாரிக்க 250 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யக் கையொப்பமிட்டுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனமான கிரீன்பேஸ் 750 கோடி மதிப்பில் தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையொப்பமானது.

“இந்தியாவிலேயே முதலீடுகளை ஈா்க்கும் மாநிலங்களில் 2-வது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 23,332 கோடி முதலீடுகளை ஈா்த்துள்ளது. கரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் எங்களது அரசின் மீது நம்பிக்கை வைத்து முதலீடுகளைச் செய்யும் முதலீட்டாளா்களுக்கு நன்றிகள்” என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து நிதி ஆலோசகர் உப்பிலியிடம் அரண்செய் பேசியபோது, “முதலீட்டாளர்களிடம் கையெழுத்திடும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதில் தமிழக அரசு 14 ஆவது இடத்தில் உள்ளதாக” அவர் கூறுகின்றார்.

ஒரே துறையை நம்பாமல் பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்த்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும், ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம்  ரூ 2 லட்சம் கோடிக்கு திரட்டிய முதலீட்டில் கணிசமான சதவிகிதம் நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

“முதலீடு திரட்டுவதோடு நின்றுவிடாமல் முதலீட்டாளர்களை தொழில் துவங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த முதலீடுகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டுமே பயன்படும்” என்று உப்பிலி தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்