Aran Sei

விவசாயச் சட்டங்களுக்கு 50% விவசாயிகள் எதிர்ப்பு : ஆய்வில் முடிவு

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும், செப்டம்பர் 27 அன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையடுத்து, வேளாண் விளைபொருள் மற்றும் வர்த்தகச் சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம்  ஆகிய மூன்றும் சட்டமாக்கப்பட்டுள்ளன.

இம்மூன்று விவசாய சீர்திருத்த சட்டங்களை, பாதிக்கும் மேலான இந்திய விவசாயிகள் எதிர்க்கின்றனர், 35 சதவீத விவசாயிகள் மட்டுமே அதற்கு ஆதரவளிக்கிறார்கள் என்று கோன் கனெக்டிங் இன்ஸைட் நிறுவனம் 16 மாநிலங்களில் நடத்திய புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தால், அரசாங்கம் நடத்தும் சந்தைகள் மற்றும் அரசாங்க கொள்முதல் முறை ஆகியவற்றில் கிடைக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை ஒழித்துக் கட்டப்பட்டு விடும் என்று தங்களது பயத்தை கிட்டத்தட்ட 40 சதவீத  விவசாயிகள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.  அதேநேரம், கிட்டத்தட்ட 60 சதவீத விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு இந்த சட்டம் உத்தரவாதம் தருவதாக கூறி ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சட்டத்திற்கு நாடு முழுதும் பெரிய எதிர்ப்புகள்  இருந்தபோதிலும், இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட 44 சதவீதமானோர், பிரதமர் நரேந்திர மோடியின் அரசு விவசாயிகளுக்கு ஆதரவான அரசு என்றும், 28 சதவீதமானோர் உழவர் எதிர்ப்பு என்றும் கூறியுள்ளனர்.

மோடி தலைமையிலான அரசு யாரை ஆதரிக்கிறது என்ற கேள்விக்கு, ​​ சுமார் 35 சதவீதம்  பேர் விவசாயிகளை ஆதரிப்பதாக கூறியுள்ளார்கள். 30 சதவீதம் பேர் தனியார் நிறுவனங்களையும் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களையும் ஆதரிப்பதாக உணர்கிறார்கள். மேலும் 15 சதவீதம் பேர் இடைத்தரகர்களையும் வர்த்தகர்களையும் ஆதரிக்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.

நன்றி : thehindu.com

கணக்கெடுப்பை பற்றி செய்தி வெளியிட்டுள்ள ‘தி இந்து’ நாளிதழ், இம்மாதம் 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையில் 16 மாநிலங்களில் உள்ள 53 மாவட்டங்களில் 5,000- க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்றும், அவர்களில் நான்கில் மூன்று பேர், ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்கள் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள விவசாய பொருள் விற்பனைகளில் 36 சதவீதம், அரசு நடத்தும் மண்டிகள் மூலமும், 26 சதவீதம் தனியார் வர்த்தகர்கள் மூலமும் நடைப்பெறுகிறது. தற்போது, ​​2 சதவீதம் மட்டுமே தனியார் நிறுவனங்கள் மூலம் விற்கப்படுகிறது.

வடமேற்கில் உள்ள பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், அரசு நடத்தும் சந்தைகளில் தான் அதிக அளவில் (78 சதவீதம்) விற்பனை நடைபெறுகிறது. அதேநேரம், இந்தச் சட்டத்திற்கு அதிக அளவு எதிர்ப்பு (77 சதவீதம்) பதிவாகியுள்ளதும் இங்கே தான்.

கிழக்கில் உள்ள அசாம், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 39 சதவீதம் மட்டுமே விவசாயச் சட்டத்தை எதிர்கின்றனர். 36 சதவீதமானோர் ஆதரிக்கிறார்கள். கிழக்கில் கால்வாசி பேர், “சொல்ல முடியாது”என்று பதிலளித்தனர். இதேபோன்றே, தென்னிந்திய மாநிலங்களிலும், 26 சதவீதம் பேர் இதே “சொல்ல முடியாது” என்ற பதிலை அளித்தனர்.

மேற்கு மாநிலங்களில், புதிய சட்டத்தை ஆதரிப்பவர்கள் 52 சதவீதமாகவும், எதிர்ப்பவர்கள் 48 சதவீதமாகவும் உள்ளனர்.  வடக்கில் உள்ள பீகார், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டத்திற்கான எதிர்ப்பு 53:47 விகிதத்தில் இருந்தது.

எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர், தங்களின் பொருட்களை  திறந்த சந்தையில் (ஓப்பன் மார்கெட்டில்) குறைந்த விலையில் விற்க இந்த சட்டம்  கட்டாயப்படுத்தும் என்று நினைக்கிறார்கள். மேலும், 38 சதவீதமானோர் தனியார் நிறுவனங்களையே நம்பியிருக்கும் படியான சூழல் அதிகரிக்கும் என்று பயப்படுகிறார்கள். மூன்றில் ஒரு பகுதியினர் குறைந்தபட்ச ஆதார விலைமுறையையே முடிவுக்கு கொண்டுவர அரசு விரும்புவதாக நினைக்கிறார்கள். மேலும், ஒப்பந்தமுறை விவசாயம் காரணமாக விவசாயிகள் ஒப்பந்த தொழிலாளர்களாக மாறுவார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளதாக ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது..

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்