”சிக்னலைப் பயன்படுத்துங்கள்” என்று எலான் மஸ்க், ட்விட்டரில் செய்த பதிவு, சந்தையில் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியான வாட்ஸ் ஆப், அதன் தனியுரிமை (Privacy) கொள்கைகைளையும், பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாக அறிவித்தது. இந்த கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்காதவரின் வாட்ஸ்ஆப் கணக்கு முடக்கப்படும் என்று தெரிவித்தது. இது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. எனவே மக்கள், மற்றொரு குறுஞ்செய்தி செயலியை பயன்படுத்துவது குறித்து விவாதங்களைத் தொடங்கினர்.
இந்நிலையில், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரியகவும் (CEO) உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான எலான் மஸ்க், கடந்த ஜனவரி 7 ஆம் தேதி, தன் ட்விட்டர் பக்கத்தில் ”சிக்னலைப் பயன்படுத்துங்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.
Use Signal
— Elon Musk (@elonmusk) January 7, 2021
வாட்சேப் செயலிக்கு மாற்றாக, தனியுரிமைக்கு அதீத முக்கியத்துவம் அளித்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள ‘சிக்னல்’ செயலியை பயன்படுத்துவதை குறிப்பிட்டு, அவர் ட்வீட் செய்துள்ளார்.
ஆனால், எலான் மஸ்க் சிக்னல் செயலி குறித்து கூறியதை தவறாக புரிந்துகொண்டவர்கள், மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான ‘சிக்னல் அட்வான்ஸ்’ எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து, சிக்னல் அட்வான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 11,708 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிசினஸ் இன்சைடர் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், எலான் மஸ்க்கின் ட்விட்டர் பதிவுக்கு முன்னால், 43 ரூபாயாக இருந்த சிக்னல் அட்வான்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு, அவருடைய பதிவுக்குப் பின்னர் 5,188 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக, சிக்னல் அட்வான்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கிறிஸ் ஹய்மல், “மக்கள் தீர விசாரித்து விட்டு ஒரு துறையில் முதலீடு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார். சிக்னல் குறுஞ்செய்தி செயலிக்கும், தங்கள் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
Is this what stock analysts mean when they say that the market is giving mixed Signals?
It's understandable that people want to invest in Signal's record growth, but this isn't us. We're an independent 501c3 and our only investment is in your privacy. pic.twitter.com/9EgMUZiEZf
— Signal (@signalapp) January 8, 2021
இந்த சம்பவம் தொடர்பாக லாப நோக்கற்ற அமைப்பான சிக்னல், தன் ட்விட்டர் பக்கத்தில், “சிக்னலின் சாதனை வளர்ச்சியில் மக்கள் முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என்பது புரிந்துகொள்ளத்தக்கது, ஆனால் இது நாங்கள் அல்ல” என்று சிக்னல் அட்வான்ஸ் நிறுவனம் குறித்து தெரிவித்துள்ளது. மேலும் ”எங்கள் ஒரே முதலீடு உங்கள் தனியுரிமையில் உள்ளது” என்றும் கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.