Aran Sei

வோடஃபோன் வரி வழக்கில் இந்திய அரசு தோல்வி – விளைவு என்ன?

Credit : https://www.livemint.com/

ந்திய அரசுக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல டெலிகாம் நிறுவனமான வோடபோன் நிறுவனத்திற்கும் வருமான வரி பாக்கி தொடர்பான வழக்கின் தீர்ப்பு சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 25 அன்று வெளியிடப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இந்திய அரசுக்கு எதிராகவும் வந்துள்ளது பொருளாதார வல்லுநர்களை உற்று நோக்க வைத்துள்ளது.

2007-ம் ஆண்டு வோடபோன் நிறுவனத்தின் நெதர்லாந்து கிளை கேமன் தீவில் பதிவு செய்யப்பட்ட சிஜிபி இன்வெஸ்ட்மென்ட்ஸ் (CGP Investments) என்ற நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளை $1,120 கோடி டாலருக்கு (இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.80 ஆயிரம் கோடி) வாங்கியது. இந்த வர்த்தகத்தின் மூலம் பிரபல இந்தியத் தொலைதொடர்பு நிறுவனமான ஹட்சிசன் எஸ்ஸார் நிறுவனத்தின் 67 சதவீதப் பங்குகள் வோடபோன் வசம் ஆகியது. இந்தியாவைச் சேர்ந்த ஹட்சிசன் எஸ்ஸார் நிறுவனம் ஹட்ச் (Hutch) என்ற பிராண்டில் இந்தியாவில் தொலைதொடர்பு சேவைகளை வழங்கி வந்தது.

மேலே சொன்ன மூலதனப் பரிவர்த்தனைக்கான நீண்ட கால மூலதன ஆதாய வரியை வோடபோன் நிறுவனம் செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை வரி நோட்டீஸ் அனுப்பியது. நீண்ட கால மூலதன வரியாக $150 கோடி (இந்திய மதிப்பில் ரூ.11,000 கோடி) வோடபோன் நிறுவனம் செலுத்த வேண்டும் என்று வருமானவரி ஆணையம் உத்தரவிட்டது.

வோடபோன் நிறுவனம், `தான் வாங்கியது வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனம். இந்த மூலதனப் பரிவர்த்தனை இந்தியாவில் நடைபெறவில்லை. இந்தியச் சட்டங்கள் இந்த வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இதன் காரணமாக நீண்ட கால மூலதன வரி எதுவும் தனது நிறுவனம் செலுத்த தேவையில்லை’ என இவ்வாறு அறிவித்தது. இந்திய உச்சநீதி மன்றம் வருமான வரித்துறையின் வரி விதிப்பை நிராகரித்தது.

இதன் பிறகு இந்திய அரசு 2012-ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அந்தத் திருத்தத்தின்படி வெளிநாட்டில் வர்த்தகம் நிகழ்ந்திருந்தாலும் அதற்கான மூலதன ஆதாய வரியை இந்தியாவில் கட்ட வேண்டும் என்று சட்டம் மாற்றப்பட்டது. அதன்படி வோடபோன் நிறுவனம் வரியைக் கட்டாயம் செலுத்த வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக வோடபோன் நிறுவனம் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் மாற்றியமைக்கப்பட்ட இந்தியச் சட்டம் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று வாதிட்டது.

அந்த வழக்கிற்கான தீர்ப்பு செப்டம்பர் 25 அன்று வந்துள்ளது. அந்தத் தீர்ப்பின்படி வோடபோன் நிறுவனம் இந்திய அரசிற்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை. மேலும் வழக்கிற்காக வோடபோன் நிறுவனம் செலவழித்த ரூ.75 கோடியை இந்திய அரசு வோடபோன் நிறுவனத்திற்குத் திரும்பச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பு இந்திய அரசுக்குப் பாதகமாக வந்ததால் இந்த வழக்கை சிங்கப்பூரில் உள்ள சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் அரசுக்கு ஆகப் போகும் செலவு ரூ.75 கோடி மட்டுமே என்றாலும் இதைப் போன்ற இன்னொரு வழக்கின் மீது இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தும் தாக்கம் இந்திய அரசுக்குக் கவலையளிக்கிறது. அந்த வழக்கு இங்கிலாந்தைச் (யுகே) சேர்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் தொடுத்தது. கெய்ர்ன் எனர்ஜி இந்திய வரித் துறையி்ன் உத்தரவின் பேரில் ரூ.10,247 கோடி மூலதன ஆதாய வரியைத் தனது பங்குகளை விற்றுச் செலுத்தியது.

ஏற்கனவே நஷ்டத்தில் ஓடும் தனது நிறுவனத்தை இது போல இந்திய அரசு நிர்ப்பந்தித்தது தவறு என்று அந்த நிறுவனமும் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

வோடபோன் விவகாரத்தில் இந்திய அரசு தோற்று உள்ளதால் கெய்ர்ன் வழக்கிலும் முன்தேதியிட்ட சட்டம் செல்லுபடியாகாது என்று தீர்ப்பு வந்தால் இந்திய அரசு ரூ.10,247 கோடியை கெய்ர்ன் நிறுவனத்திற்குத் திரும்பச் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

இந்தத் தீர்ப்பு இது போன்ற பிற வர்த்தகங்களில் இந்திய அரசுக்கு வரி கிடைப்பதில் பாதகமாக முடியலாம்.

ஒரு வழக்கில் தோல்வியுற்ற எவரும் மேல்முறையீடு செய்வதற்கு உரிய உரிமை உள்ளது. அதனால் இந்திய அரசு சிறந்த முறையில் மேல் முறையீடு செய்து தீர்ப்பினை சாதகமாக வாங்குவதே, நிறுவனங்கள் வர்த்தக விதிமுறைகளில் உள்ள ஓட்டைகளில் புகுந்து வரி கட்டாமல் தப்பிக்கும் யுத்தியை வீழ்த்தும். எனவே, மேல்முறையீடு மூலம் தனக்குச் சாதகமான முடிவைப் பெறுவதற்கு இந்திய அரசு முயற்சி செய்யும் என்றே தெரிகிறது.

(கட்டுரையாளர் ஷியாம் சுந்தர் ஐடி துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்