Aran Sei

சேவைத் துறை: தொடர்ந்து ஏழு மாதங்களாக சரிவு

credit: indianexpress.com

ந்தியாவில் சேவைத் துறையின் வளர்ச்சி செப்டம்பர் மாதத்திலும் பூஜியத்துக்கு கீழே இருக்கிறது என்று இந்திய சேவை துறை நடவடிக்கை குறியீடு (India services business activity index) தெரிவிக்கிறது.

ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் செப்டம்பர் மாதத்தில் சேவைத் துறை செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் சேவை துறையின் நடவடிக்கை குறியீடு 41.8 விழுக்காடாக இருந்தது. அது செப்டம்பர் மாதத்தில் 49.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

சேவைத் துறை நடவடிக்கை குறியீட்டின்படி, 50 விழுக்காட்டு புள்ளிகளுக்கு மேல் பதிவாகியிருந்தால் சேவைத் துறை வளர்ச்சி என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. 50 விழுக்காட்டு புள்ளிகளுக்கு கீழ் பதிவாகிற பட்சத்தில் சேவைத் துறை வளரவில்லை சுருங்குகிறது என்று அர்த்தமாகும் என்று தி வையர் இணையதளம் தெரிவித்துள்ளது.

பொது முடக்கம் காரணமாக பொருளாதாரம் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 23.9 விழுக்காடு அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல், வாகன பதிவுகள், மின்சார நுகர்வு ஆகியவை அதிகரித்துள்ளன என்றும் இது பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதற்கான அறிகுறியாக மின்ட் நாளேடு குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56 விழுக்காடு இடத்தை பிடித்துள்ள சேவைத் துறை செப்டம்பரிலும் சுருங்கியுள்ளது என்று தி வையர் இணையதளம் தெரிவித்துள்ளது. ஆனால், ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்ட வளர்ச்சிக்கு பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதே காரணம் என்று ஐஎச்எஸ் மார்கிட் இந்தியா நிறுவனத்தின் பொருளாதார இணை இயக்குநர் பாலியானா தே லிமா கூறியுள்ளார்.

சேவைத் துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் போக்கு தொடர்ந்து சரிவையே சந்திக்கிறது என்றும் இந்த போக்கு கடந்த ஏழு மாதங்களாக நிலவுகிறது என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

சேவைத் துறையில், சம்பளம் வழங்கப்படுவது குறைந்துள்ளது. தொழிலாளர் பற்றாகுறை நிலவுகின்ற காரணத்தினால் பல நிறுவனங்கள் கூடுதலாக தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதில் சிரமம் நிலவுகிறதாக பாலியானா தே லிமா தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதத்தில் எரிபொருள், காய்கறி, இறைச்சி ஆகிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது என்றும் கடந்த ஏழு மாதங்களைக் காட்டிலும் அதிகமாக விலைவாசி அதிகரித்துள்ளது என்று ஐஎச்எஸ் மார்கிட் இந்தியா நிறுவனத்தின் பொருளாதார இணை இயக்குநர் பாலியானா தே லிமா குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்