Aran Sei

தேசிய பங்குச் சந்தை – தரகர்களுக்கு ஆதாயம் அளித்த முன்னாள் தலைவர்கள் சித்ரா ராமகிருஷ்ணன், ரவி நரேன்

தேசிய பங்குச் சந்தை

ங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம், தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனர்கள் ரவி நரேன் மீதும், சித்ரா ராமகிருஷ்ணன் மீதும் தலா ரூ 25 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது. தேசிய பங்குச் சந்தைக்கு ரூ 1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2012-க்கும் 2014-க்கும் இடையே தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற, பங்குச்சந்தை கணினி கோ-லோ (இணை இருத்தல்) ஊழல் தொடர்பாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியின் மூலமாக தேசிய பங்குச் சந்தையின் சில தரகர்களுக்கு, மற்றவர்களை விட முன்கூட்டியே, பங்கு பரிவர்த்தனை தொடர்பான தரவுகளை கிடைக்கச் செய்தது மூலம், அவர்கள் அதிக ஆதாயம் ஈட்டியுள்ளனர்.

பங்குச் சந்தை தரகர்களின் வர்த்தக கணினியை, பங்குச் சந்தையின் மைய கணினிக்கு நெருக்கமாக இணைப்பதன் மூலம், பங்கு வர்த்தகம் தொடர்பான தகவல்கள் தரகர்களுக்கு சென்று சேரும் நேரம் குறைக்கப்படுகிறது. முன்கூட்டியே கிடைத்த இந்தத் தகவலை தமது வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பதன் மூலம் இந்த தரகர்கள் ஆதாயம் ஈட்டியுள்ளனர்.

2014-15-ம் ஆண்டில் முறைகேட்டை வெளிப்படுத்தும் ஒரு நபர், தேசிய பங்குச் சந்தை அலுவலர்களும் சில தரகர்களும் இணைந்து இந்த வசதியை தவறாக பயன்படுத்தினர் என்று பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தார்.

அப்போது தேசிய பங்குச் சந்தை “டிக்-பை-டிக்” என்ற முறையில் உறுப்பினர்களுக்கு தரவுகளை அனுப்பி வந்தது. இதன்படி, முதலில் தரவு வேண்டுகோளை அனுப்பிய கணினிக்கு முதலில் தரவு அனுப்பபட்டது. மற்ற இயல்பான முறைகளில் எல்லா உறுப்பினர்களுக்கும் ஒரே நேரத்தில் தரவுகள் அனுப்பபடும்.

எனவே, தேசிய பங்குச் சந்தையின் கணினியுடன் முதலில் இணைந்து கொள்ளும் தரகர்களுக்கு மற்றவர்களை விட வர்த்தக ஆதாயம் கிட்டியது. தேசிய பங்குச் சந்தை அலுவலர்களுடனும், இந்தத் தொழில்நுட்பத்தை வழங்கிய ஆம்னிசிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடனும் சேர்ந்து ஒரு சில தரகர்கள் இந்த வசதியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கின்றனர்.

இந்த புகாரை விசாரித்த பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம், ஓபிஜி செக்யூரிட்டீஸ், ஜிகேஎன் செக்யூரிட்டீஸ், வே2வெல்த் ஆகிய நிறுவனங்களும், இணைய இணைப்பு சேவை வழங்கும் சம்பர்க் இன்டர்நேஷனலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டறிந்தது.

சம்பர்க் இன்டர்நேஷனல், கரும் இழை இணைய இணைப்பு மூலமாக வேகமான இணைய தொடர்பை வழங்கியது. அந்த சேவை வழங்குவதற்கான அரசு அங்கீகாரத்தை அது வாங்கியிருக்கவில்லை.

இந்த நிறுவனங்கள், தேசிய பங்குச் சந்தையின் பேக்-அப் (சேம) கணினியுடன் இணைவதன் மூலம் தரவுகளை முதலில் பெற்றிருக்கிறார்கள். சேம கணினியில் சுமை குறைவாக இருப்பதால் வேகமாக இணைந்து கொள்ள முடிந்திருக்கிறது என்று எகனாமிக் டைம்ஸ் தெரிவிக்கிறது.

முறைகேட்டில் ஈடுபட்டவர்களில், தேசிய பங்குச் சந்தை முதன்மை செயல்பாட்டு அலுவலர் சித்ரா ராமகிருஷ்ணன், முன்னாள் நிர்வாக இயக்குனர் ரவி நரேன், இணை கணினி துறையின் முன்னாள் தலைமை மேலாளர் ரவி வாரணாசி, அதன் அப்போதைய வணிக வளர்ச்சி தலைமை மேலாளர் உமேஷ் ஜெயின், தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிதி அலுவலர் இன்னும் பிறரும் அடங்குவர்.

முன்னதாக 2019-ம் ஆண்டு மே மாதத்தில், பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம், தேசிய பங்குச் சந்தைக்கு ரூ 687 கோடி அபராதம் விதித்திருந்தது. இது இணை கணினி சேவைகளை தரகர்களுக்கு வழங்கியதன் மூல்ம தேசிய பங்குச் சந்தை ஈட்டிய தொகைக்கு சமம்.

தேசிய பங்குச் சந்தையும், ரவி நரேனும், சித்ரா ராமகிருஷ்ணனும் இந்த அபராதத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்ற டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்