Aran Sei

ரூ 7,926 கோடி வங்கி மோசடி – ஆந்திர அரசியல்வாதி மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை

ராயப்பட்டி சாம்பசிவ ராவ் - Image Credit : Indian Express

ந்திய வங்கித் துறையில் நீரவ் மோடி சுமார் ரூ 6,000 கோடி அளவுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியை ஏமாற்றி தப்பித்து ஓடிய நிகழ்வுதான் மிகப்பெரிய ஊழல் ஆக இதுவரை இருந்து வருகிறது.

அதற்கு சவால் விடும் வகையில் 7,926 கோடி ரூபாய் அளவிலான புதிய ஊழல் இந்த வாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஹைதராபாதைத் தலைமையிடமாகக் கொண்ட டிரான்ஸ்டிராய் நிறுவனம் கனரா வங்கியை தலைமையாகக் கொண்ட 12 வங்கிகள் கொண்ட குழுமத்திடம் இருந்து இந்தத் தொகையை கடனாகப் பெற்று உள்ளது. டிரான்ஸ்டிராய் நிறுவனம் சாலை கட்டமைப்பு உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளது.

வங்கிக் கடனை பெற்ற இந்த நிறுவனம் பணத்தை திரும்ப செலுத்தாமல் இருந்து வந்துள்ளது. இது தொடர்பான புகார் 2018-ம் ஆண்டு பதியப்பட்டு வாராக் கடனாக சேர்க்கப்பட்டது.

இந்த வங்கிக்கடன் வாங்கியதில் பல பித்தலாட்டங்களை நிறுவனம் செய்துள்ளதாக கனரா வங்கி அறிவித்துள்ளது. இந்த மோசடி வங்கியின் செகந்திராபாதில் உள்ள முதன்மை கார்ப்பரேட் கிளையில் நடந்துள்ளதாக கனரா வங்கி தெரிவித்துள்ளது.

இது புகாராக சிபிஐ இடம் பதியப்பட்டது. தற்போது அதன் விசாரணை தொடங்கியுள்ளது.

டிரான்ஸ்டிராய் நிறவனத்தின் சேர்மனும் நிர்வாக இயக்குனருமான செருக்குரி ஶ்ரீதர் மீதும் கூடுதல் இய்க்குனர்கள் ராயப்பட்டி சாம்பசிவ ராவ், அக்கினேனி சதீஷ் ஆகியோரின் பெயர் சிபிஐ-ன் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ஆசியாநெட் செய்தி தெரிவிக்கிறது.

டிரான்ஸ்டிராய் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் முக்கிய உறுப்பினராக உள்ள ராயப்பட்டி சாம்பசிவ ராவ் பிரபல அரசியல் கட்சியான தெலுங்கு தேசத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவர். அவருடைய வீட்டையும் சேர்த்து நிர்வாகக் குழுவில் உள்ள அனைத்து முக்கிய உறுப்பினர்களின் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளது.

“மோசடி குறித்து சிபிஐ தவறான தகவலை வெளியிடுகிறது. மோசடி செய்யப்பட்ட தொகை ரூ 700 கோடி என்றுதான் கனரா வங்கி கூறியுள்ளது” என்று சாம்பசிவ ராவ் கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் மோசடி, ஜனவரி 2020-ல் கேபிஎம்ஜி நிறுவனம் நடத்திய தடயவியல் ஆய்வின் போது தெரிய வந்தது என்று முதல் தகவல் அறிக்கை குறிப்பிடுகிறது.

டிரான்ஸ்ட்ராய்-ன் வங்கி அறிக்கைகளின்படி,வதெரிய வந்துள்ளதாக ஆசியாநெட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தப் போலி நிறுவனங்களில், வேலையாட்கள், பணிப் பெண்கள், துப்புரவு தொழிலாளர்கள், ஓட்டுனர்கள் கூட இயக்குனர்களாகவும், பங்குதாரர்களாகவும் காட்டப்பட்டிருப்பதாக சிபிஐ-ன் முதல் தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது.

  • டிரான்ஸ்டிராய் ஊழியர் சுதாகர் பாபுவின் பெயரில் பத்மாவதி என்டர்பிரைசஸூக்கு ரூ 2172.4 கோடி
  • டிரான்ஸ்டிராய் முன்னாள் இயக்குனர் சாம்பசிவ ராவ் மலினேனி பெயரில் யுனீக் எஞ்சினியர்ஸ் நிறுவனத்துக்கு ரூ 679.12 கோடி
  • டிரான்ஸ்டிராய் துணை நிறுவனத்தின் இயக்குனர் ஹரிஷ்பாபு வேமுலபள்ளி பெயரில் பாலாஜி என்டர்பிரைசசுக்கு ரூ 1,865.47 கோடி
  • டிரான்ஸ்டிராய் முன்னாள் மூத்த நிதி மேலாளர் ஷிவகுமார் கொரிவி பெயரில் ருத்விக் என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு ரூ 1925.86 கோடி

என மொத்தம் ரூ 6,643.19 கோடி முக்கியமான 4 நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

கனரா வங்கி தனது அறிக்கையில், “இந்த வங்கிக்கடன் 2018-ம் ஆண்டிற்கு முன்பு பெறப்பட்டது. இந்தக் கடனில் கனரா வங்கியின் பங்காக 678 கோடி மட்டுமே உள்ளது. அந்தக் பணமும் வாராக்கடன் வரிசையில் 2018-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. இதுபோன்ற வாராக் கடன்களை எதிர் கொள்வதற்கு போதுமான கையிருப்பை (provision) கனரா வங்கி செய்துள்ளது. அதனால் இந்த வாராக் கடன் வங்கியை பாதிக்காது. சிபிஐ விசாரணையில் பணத்தை திருப்ப கிடைக்கப் பெறச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிவித்துள்ளது.

சிறிய அளவு கடனை கட்ட முடியாமல் போன ஏழை விவசாயியின் டிராக்டரை கையகப்படுத்தும் வங்கிகள் பெருநிறுவனங்களிடம் அதிக தொகையை ஏமாறுவது தொடர்கதையாகவே உள்ளது. கனரா வங்கி குழுமத்தில் நடைபெற்ற இந்த ஊழலும் இதற்கு விதிவிலக்கல்ல.

பஞ்சாப் நேஷனல் வங்கியை ஏமாற்றிச் சென்ற நீரவ் மோடியையோ, கிங்பிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா போன்றோர்களை இதுவரை இந்தியாவிற்கு கொண்டு வர முடியாதது இதுபோன்ற குற்றங்களை துணிந்து நடத்துவதை ஊக்குவிக்கிறது.

வங்கிகளை ஏமாற்றி தப்பிச் செல்லும் பெருநிறுவன அதிபர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வங்கிக் கடனை மீட்பதே வங்கிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

சிபிஐ விசாரணை சரியான திசையில் சென்று கனரா வங்கி குழுமத்தில் நடைபெற்ற பண மோசடியில் பணத்தை திரும்ப கொண்டு சேர்ப்பது, ஏமாற்றிய நிறுவனர் களை கைதுசெய்து தக்க நடவடிக்கை எடுப்பது ஆகியவை எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கையாக அமையும்.

– சியாம் சுந்தர்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்