Aran Sei

`பாஜக அரசின் தொழிலாளர் எதிர்ப்பு நடவடிக்கை’ – சிஐடியு கண்டனம்

Image Credits: Patrika

தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தொழிலாளர் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணின் அடிப்படை ஆண்டை 2001-ல் இருந்து 2016 ஆக மாற்றி அறிவித்துள்ளார். இது விலை உயர்வின் உண்மையான தாக்கத்தை மறைக்க வழிவகுக்கும் என்றும் தொழிலாளர் நலனுக்கு எதிரானது என்றும் சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது.

`தொழிலாளர் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் அரசு ஊழியர்களுக்கான கிராக்கிப்படி தொகையை நிர்ணயிக்க உதவும். ஓய்வூதியத்துக்கான கிராக்கிப்படி தொகை மற்றும் சில துறைகளில் தொழிலாளர்களுக்கான ஊதியம் இதன் மூலம் நிர்ணயிக்கப்படும். இது தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கிராக்கிப்படி தொகையை உடனடியாகப் பாதிக்காது என்றாலும், சம்பளம், கிராக்கிப்படி தொகை மற்றும் ஓய்வூதியத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும்.’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்த விஷயத்தில் தொழிலாளர் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் பணியகம் செய்த அனைத்தும் முற்றிலும் தன்னிச்சையானது. இது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏற்பட்ட தாக்கத்தை நசுக்கும் செயல். முறையான கிராக்கிப்படி தொகையை ரத்து செய்வது தொழிலாளர்களின் உரிமையைப் பறிப்பதாகும்,” என்று சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

`அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், குறிப்பாக உணவுப் பொருட்களில் உயர்ந்து கொண்டிருக்கின்றன என்ற உண்மையைப் பணியகம் புறக்கணிக்கிறது. அதே நேரத்தில், நுகர்வில் உள்ள உணவுப் பொருட்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பு 46.2 சதவீதத்தில் இருந்து 39% ஆக குறைக்கப்பட்டுள்ளது.’ என்று சிஐடியு கூறியுள்ளது.

“இந்தத் தன்னிச்சையான குறைப்பை நியாயப்படுத்தும் வகையில், ‘உழைக்கும் மக்கள் உணவுப் பொருட்களிலிருந்து விலகி உள்ளார்கள். அவர்களின் நுகர்வு முறை மாறியுள்ளது’, எனும் அமைச்சரின் கருத்து கேலிக்குரியது மற்றும் மனிதாபிமானமற்ற ஒன்று,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மந்தநிலையின் போது தொழிலாளர்களுக்கு நிவாரணமாகக் கிராக்கிப்படி தொகையை  நிர்ணையிக்குமாறு முதலாளிகள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அடிப்படை ஆண்டுத் திருத்தம் முதலாளிகளுக்குச் சாதகமாக அமைந்துள்ளதாகவும் சிஐடியு கூறியுள்ளது.

“பாஜக அரசின் அத்தகைய தொழிலாளர் எதிர்ப்பு, கார்ப்பரேட் சார்பு நடவடிக்கையை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது. கார்ப்பரேட் வர்க்கத்தின் நலனுக்காகத் தொழிலாளர்களையும் மக்களையும் கொள்ளையடிக்கும் மோசமான வடிவமைப்பை எதிர்த்துப் போராட அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது,” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்