Aran Sei

ரிலையன்ஸ் ஃபியூச்சர் ஒப்பந்தம் – அமேசானுக்கு ஆதரவாக இடைக்கால உத்தரவு

Image Credit : ndtv.com

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தனது சில்லறை விற்பனை கடைகளை கை மாற்றுவதை நிறுத்தி வைக்கும்படி பிக் பஜார் முதலான சில்லறை விற்பனைக் கடைகளை நடத்தி வரும் ஃபியூச்சர் ரிடெய்ல் நிறுவனத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு மூலமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுக் கடன் வெள்ளத்தில் மூழ்கிய ஃபியூச்சர் குழுமம் தனது சில்லறை விற்பனை, மொத்த விற்பனை, போக்குவரத்து, சேமிப்புக் கிடங்குகள் ஆகிய நிறுவனங்களை ரூ.24,713 கோடிக்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்க்கு விற்பதற்கு ஒப்பந்தம் போட்டிருந்தது.

ஃபியூச்சர் குழுமம், தனது சில்லறை வணிக நிறுவனங்களை ரிலையன்ஸ்க்கு விற்றிருப்பதற்கு, உலகின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனமான அமேசான், கடந்த அக்டோபர் மாதம், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நடுவர் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றது. மேலும், அந்தத் தடையை அமல்படுத்துவதற்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

பிக் பஜார் – ரிலையன்ஸ்க்கு முட்டுக்கட்டை போடும் அமேசான்

ஃபியூச்சர் ரிடெய்ல் நிறுவனமே அதன் ஒரே சில்லறை விற்பனை தொழிலாக இருக்கும் என்ற அடிப்படையிலும் அதன் சில்லறை விற்பனை சொத்துக்கள் அமேசானின் ஒப்புதல் இல்லாமல் விற்கப்படக் கூடாது என்ற அடிப்படையிலும், முகேஷ் திருபாய் அம்பானி குழுமம் உள்ளிட்ட தடுக்கப்பட்ட நபருக்கு விற்கப்படக் கூடாது என்ற அடிப்படையிலும், தான் ஃபியூச்சர் குழுமத்தின், ஃபியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தின் 49% பங்குகளை வாங்குவதற்கு ரூ 1,431 கோடி முதலீடு செய்ததாக அமேசான் கூறுவதாக தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

இந்த வழக்கில், அமேசானுக்கு இடைக்கால நிவாரணம் அளிக்கும் வகையில், ஃபியூச்சர் ரிடெய்ல் தனது சொத்துக்களை ரிலையன்சுக்கு மாற்றுவதில், இருக்கிற நிலைமை தொடர்வதை உறுதி செய்யும்படி, டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றம் இது தொடர்பாக பிறப்பித்த ஆணை இந்தியாவில் செல்லுபடியாகத் தக்கது என்று ‘முதல் பார்வையில்’ கருதுவதாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜே ஆர் மிதா கூறியிருக்கிறார்.

சிங்கப்பூர் நடுவர் மன்றத்தின் “அக்டோபர் 25 தேதியிட்ட உத்தரவு, இந்த நீதிமன்றத்தின் ஆணையைப் போலவே அமல்படுத்தத் தக்கது” என்ற நீதிபதி ஜே ஆர் மிதா தனது இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளார்.

நடுவர் மன்ற உத்தரவுக்கு முரணாக, ஃபியூச்சர் ரிடெய்ல் நிறுவனம் தனது சில்லறை விற்பனை சொத்துக்களை தடுக்கப்பட்ட நபருக்கு மாற்றுவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவற்றை தொடர்வதாகவும் அமேசான் கூறியிருந்தது.

ஃபியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனமும், ஃபியூச்சர் ரிடெய்ல் நிறுவனமும் பிற நிறுவனங்களும் அக்டோபர் 25-க்குப் பிறகு இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளையும் அந்த அனைத்து நடவடிக்கைகளின் இப்போதைய நிலையையும் 10 நாட்களுக்குள் ஒரு உறுதிமொழிப் பத்திரமாக சமர்ப்பிக்குமாறு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரிலையன்சுக்கும் அமேசானுக்கும் சண்டை – வேடிக்கை பார்க்க மட்டும் நாம் – ஷியாம் சுந்தர்

இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி, இது தொடர்பான அமேசானின் கடிதத்தை ஏற்றுக் கொள்ளாமல், சென்ற வாரம், ரிலையன்ஸ் – ஃபியூச்சர் குழுமம் இடையேயான ஒப்பந்தம் நிறைவேறுவதற்கான தடை இல்லா சான்றினை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதில், இறுதி வெற்றி ரிலையன்சுக்கா, அமேசானுக்கா என்பது சிங்கப்பூரில் நடைபெறும் வழக்கில் இறுதித் தீர்ப்பு வந்த பிறகே முடிவாகும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்