Aran Sei

சுவாமிநாதன் குழு அறிக்கையை செயல்படுத்தியதா மோடி அரசு? – உண்மை நிலவரம்

Image Credit : thewire.in

ரேந்திர மோடி அரசு நிறைவேற்றிய சர்ச்சைக்குரிய மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய விவசாயிகளின் போராட்டங்களுக்கு நடுவில் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகள் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சுவாமிநாதன் ஆணையம் என்றழைக்கப்படும் சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரைகளை எட்டு ஆண்டுகளாக செயல்படுத்தத் தவறிவிட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவர்கள் கட்சி இறுதியாக அவற்றை நடைமுறைப் படுத்தியதாகவும், மோடியும் ஒன்றிய விவசாய அமைச்சர் தோமரும் சமீபத்தில் மீண்டும் ஒரு முறை கூறியுள்ளனர்.

டிசம்பர் 18-ம் தேதி ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய மோடி, “விவசாயிகள் என்ற பெயரில் இந்த இயக்கத்தைத் தொடங்கியவர்கள், எவ்வளவு இரக்கமற்றவர்களாக இருக்க முடியும் என்பதற்கு சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கை மிகப் பெரிய சான்றாகும். இவர்கள் (காங்கிரஸ்காரர்கள்) எட்டு ஆண்டுகளாக சுவாமிநாதன் குழு அறிக்கையை செயல்படுத்தாமல் உட்கார்ந்திருந்தனர்.

விவசாயிகள் அப்போதும் கிளர்ச்சி செய்தனர். ஆனால் அது அவர்களை அசைக்கவில்லை. தங்கள் அரசு விவசாயிகளுக்காக அதிகம் செலவழிக்க வேண்டியதில்லை என்று உறுதியுடன் அறிக்கையை புதைத்து விட்டார்கள்‌.” என்று கூறினார்.

Image Credit : thewire.in
Image Credit : thewire.in

மேலும் அவர்,” இந்த அரசு விவசாயிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. விவசாயிகளை ‘அன்னதாதாக்களாக (உணவளிப்பவர்கள்)’ கருதுகிறது. சுவாமிநாதன் குழு அறிக்கைகள் இந்த அரசால் செயல்படுத்தப்பட்டன. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக உற்பத்தி விலையை விட ஒன்றரை மடங்கு அதிகம் கொடுத்தது இந்த அரசு.” என்றும் கூறி உள்ளார்.

இருப்பினும், இந்தக் கூற்றுக்கள் வேளாண் அமைச்சகம் மற்றும் வேளாண் நலத்துறை பதிவு செய்துள்ள உண்மைகளுக்கு பொருந்துவதாக இல்லை. அமைச்சகம் மொத்த பரிந்துரைகளில் 201 பரிந்துரைகளை அமல்படுத்த திட்டமிட்டது. எனினும் தி வயர் பெற்ற அரசு ஆவணங்கள், அரசு நடைமுறைபடுத்தியதாகக் கூறிய 201 பரிந்துரைகளில் 25 மட்டுமே மோடி அரசு ஆட்சியில் அமலாக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன. மீதமுள்ள 175 பரிந்துரைகள் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (காங்கிரஸ்) அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ஒன்றிய அரசு சொல்லும் சாதனைகள் மிகவும் சர்ச்சைக்குரியவை. இந்த பரிந்துரைகள் கோட்பாட்டளவில் செயல்படுத்தப்பட்டனவா அல்லது நடைமுறையில் செயல்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை மதிப்பிடும் விரிவான அறிக்கைகளின் தொடரை ‘தி வயர்’ விரைவில் வெளியிடும்.

சுவாமிநாதன் ஆணையமும் அதற்குப் பிறகும்

2004, நவம்பர் 19 அன்று சுவாமிநாதன் ஆணையம் என்றழைக்கப்படும் தேசிய விவசாயிகள் ஆணையம் பிரபல வேளாண் அறிவியலாளர் எம். எஸ். சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது ஐந்தாவதும் கடைசியுமான அறிக்கையை 2006, அக்டோபர் 4-ல் அரசிடம் அளித்தது. இந்த அறிக்கை, விவசாய நடைமுறைகளில் விரிவான நீடித்த மாற்றத்தைக் கொண்டு வருவதோடு வேளாண்மையை வருவாய்க்கும் வேலைவாய்ப்பிற்கும் ஆதாரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்த அறிக்கை, ஆணையத்தின் முக்கிய பரிந்துரைகளை உள்ளடக்கிய தேசிய வேளாண் கொள்கையையும் உருவாக்கி இருந்தது. மொத்தமாக 201 செயல் திட்டங்கள் அதில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தன. அவை செயல்படுத்தப் படுவதை மேற்பார்வை செய்ய அமைச்சகங்களுக்கு இடையேயான குழு ( Inter ministerial Committee- IMC) ஒன்றும் அமைக்கப்பட்டது.

ஆவணங்களின்படி இதுவரை மொத்தம் எட்டு கூட்டங்களைக் ஐஎம்சி கூட்டியுள்ளது. அவற்றில் மூன்று மட்டுமே மோடி அரசின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றுள்ளன.

Image Credit : thewire.in
Image Credit : thewire.in

அதன் முதல் கூட்டம் 2009, அக்டோபர் 14-ம் நாள் நடைபெற்றது. இதில் 201 பரிந்துரைகளை அமல்படுத்த வரைவு முன்மொழியப்பட்டது. அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவின் இரண்டாவது கூட்டம் 2010, ஜூன் 3-ம் நாள் கூடியது. அதற்குள் 42 பரிந்துரைகள் செயலாக்கப்பட்டிருந்தன. 159 பரிந்துரைகள் நிலுவையில் இருந்தன.

குழுவின் மூன்றாவது கூட்டம் 2012 ஜூன் மாதம் நடந்தது. அதுவரை 152 பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்ட நிலையில் 49 நிலுவையில் இருந்தன.

அதன் நான்காவது மற்றும் ஐந்தாவது கூட்டங்கள் முறையே செப்டம்பர் 2013 மற்றும் ஜனவரி 2014 ல் நடைபெற்றன. ஆவணங்களின்படி, இந்த காலகட்டத்தில் 25 பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

ஆக, 2014 ல் மோடி ஆட்சிக்கு வந்த போது 201 செயல் திட்டங்களில் 26 மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டி இருந்தன. அவற்றில் இதுவரை 25 செயல்படுத்தப்பட்டு ஒன்று நிலுவையில் உள்ளது.

2015, ஆகஸ்ட் மாதம் குழுவின் ஆறாவது கூட்டம் நடைபெற்றது. அதற்குள் மேலும் 17 பரிந்துரைகள் செயலாக்கப்பட்டதாக கருதப்பட்டது. ஒன்பது நிலுவையில் இருந்தன. அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவின் கடைசி கூட்டம் ஏப்ரல் 8 அன்று நடைபெற்றது.

இந்தப் புள்ளிவிவரங்களும் கூட ஒன்றிய வேளாண் அமைச்சரின் கூற்றுகள் குறித்து கேள்விகளை எழுப்புகின்றன. தைனிக் பாஸ்கர் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர தோமர், சுவாமிநாதன் ஆணையத்தின் 201 பரிந்துரைகளில் 200 மோடி தலைமையிலான ஆட்சியில்தான் செயல்படுத்தப்பட்டது எனக் கூறினார்.

எவ்வாறாயினும், மேற்சொன்ன தரவுகள் மோடி ஆட்சியில் 25 பரிந்துரைகளே செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. மேலும், புதிய சட்டங்களும் கூட அந்த தேசிய விவசாயிகள் ஆணைய பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இயற்றப்பட்டதாக நரேந்திர சிங் தோமர் கூறுகிறார்.

எனினும், 2020-ம் ஆண்டின் புதிய விவசாயிகள் உற்பத்தி வர்த்தக மற்றும் வணிக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் ஏபிஎம்சி (APMC- தமிழக ஒழுங்குமுறை விற்பனை கூடம் போன்றது) க்கு வெளியே விவசாய விளை பொருட்களை வாங்கவும் விற்கவும் அனுமதிக்கிறது. ஏபிஎம்சி அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான அவசரத் தேவை இருப்பதாக சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைத்துள்ளது உண்மைதான். ஆனால் இதுகுறித்து ஒன்றிய அரசு ஒரு சட்டத்தை வகுக்க முடியும் என்று எங்கும் அறிக்கை கூறவில்லை. மாறாக அந்த ஏபிஎம்சி சட்டங்களில் தேவையான மாற்றங்களைச் செய்ய மாநிலங்களுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

மொத்தமுள்ள 201 பரிந்துரைகளில் கொள்முதல் நிலையங்களில் வரி விதிக்கும், ஏபிஎம்சி தொடர்பான ஒரே ஒரு பரிந்துரை மட்டுமே இந்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது‌. ஆணையம் அதனை ‘கட்டாய வரியாக’ அன்றி ‘சேவை வரியாக’ வசூலிக்க பரிந்துரைத்து இருந்தது. அதன்மூலம் எந்த வசதியை பயன்படுத்துகிறோமோ அதற்கு உரிய வரியை செலுத்தலாம்.

புதிய சட்டத்திற்கு மக்களிடம் ஆதரவைப் பெற பிரதமர், ஒன்றிய வேளான் அமைச்சர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இதனை தவறான வரிவிதிப்பு என்றும் புதிய சட்டத்தில் அப்படிப்பட்ட வரியே இல்லை என்றும் கூறி வருகின்றனர்.

எப்படி பார்த்தாலும், ஒன்றிய நிதி அமைச்சகம், மண்டிகளில் வசூலிக்கப்படும் பணம் வரி அல்ல, ஏனெனில் சம்மந்தப்பட்ட ஏபிஎம்சிகள் மக்களுக்கு அதற்கு ஈடாக சேவைகளை வழங்கி விடுகிறது என்று கூறி அதை நியாயப்படுத்தி இருப்பதை தி வயர் க்கு கிடைத்துள்ள ஆவணங்கள் வெளிப்படுத்தி உள்ளன. நிதி அமைச்சகம் நாடு முழுவதும் ஒரே சீரான பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்க முன்மொழிந்துள்ளது. வேளாண் அமைச்சகமும் அதனை ஆதரித்துள்ளது.

தற்போது நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் மற்றொரு கோரிக்கை என்னவென்றால், சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகள் முழுமையாக, குறிப்பாக உற்பத்தி விலையைவிட ஒன்றரை மடங்கு அதிகமான குறைந்த பட்ச ஆதார விலை குறித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அரசு இதனை தாங்கள் நடைமுறைப்படுத்தி விட்டதாகக் கூறினாலும் புள்ளிவிவரங்கள் அதன் செயலாக்கம் குறித்து தீவிரமானன கேள்விகளை எழுப்பி உள்ளது‌

கூடுதலாக, நீர்ப்பாசனம், நிலச் சீர்திருத்தம், விவசாய உற்பத்தித் திறன், கடன் மற்றும் காப்பீடு, உணவுப் பாதுகாப்பு, விவசாயிகள் தற்கொலையைத் தடுப்பது, விவசாய சந்தை மற்றும் விவசாயத்தில் வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு கூறுகள் குறித்து ஆணைக்குழு விரிவான பரிந்துரைகளை வழங்கி உள்ளது.

இந்த மூன்று புதிய சட்டங்களும் குறைந்தபட்ச ஆதார விலையைத் தரும் நடப்பில் உள்ள நிறுவன கட்டமைப்பை அழித்துவிடும் எனவும், இந்தச் சட்டங்கள் அமலுக்கு வந்தால் விவசாயிகள், வியாபாரிகளின் கருணையில் இருக்க வேண்டி வரும் எனவும் விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

மறுபுறம் மோடி அரசு இந்த குற்றச் சாட்டுக்களை மீண்டும் மீண்டும் மறுத்து வருகிறது. அத்துடன் இவற்றை ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க விவசாய சீர்திருத்தங்கள்” என வருணித்து வருகிறது. மேலும் வேளாண் உற்பத்திப் பொருட்களை விற்க மாற்று அமைப்பை உருவாக்கித் தருவதாகவும் கூறி வருகிறது.

– தீரஜ் மிஷ்ரா

thewire.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்