Aran Sei

ரிசர்வ் வங்கியின் முன்னுரிமை கடன் வழிகாட்டல் : பாதிக்கப்படும் தமிழகம்

Credits: The Print

செப்டம்பர் 4-ம் தேதி, பொதுத்துறை வங்கிகள் முன்னுரிமை துறைகளுக்கு கடனளிப்பதற்கான விதிமுறைகளைத் திருத்தியுள்ளது ரிசர்வ் வங்கி. சரியான நிதி வழங்கல் இல்லாத, மாவட்டங்களில் முன்னுரிமை துறை கடன் வழங்கலை அதிகரிக்க உதவும் வகையில் இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதன்படி, கடன்களை திருப்பிச் செலுத்துவதில் பின் தங்கியுள்ள மாவட்டங்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.

ரிசர்வ் வங்கி விதியின்படி இந்திய வணிக வங்கிகள் (SBI, HDFC, ICICI, மற்றும் பல) தாங்கள் வழங்கும் கடனில், முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கும் துறைகளுக்கு 40% கடன் வழங்க வேண்டும். இதன் மூலம் சூரிய மின்தகடுகளை நிறுவும் விவசாயிகளுக்கும், பயோகேஸ் ஆலைகளை நிறுவும் விவசாயிகளுக்கும் தொழில்முனைவோருக்கான கடன் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முன்னுரிமை துறை கடன் வழங்கலில் மாநிலங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கக் கடனை திருப்பி செலுத்துவதின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. குறைந்த கடன் வழங்கல் உள்ள மாவட்டங்களுக்குக் கடனை அதிகரிக்கும் வங்கிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்றும், அதிக கடன் வழங்கல் உள்ள மாவட்டங்களுக்குக் கடன் வழங்கும் வங்கிகளுக்கு ஊக்கத்தொகை ரத்து செய்யப்படும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

சராசரியாக ஒரு நபருக்கு ரூ.6,000க்கு கீழ் கடன் வழங்கல் உள்ள மாவட்டங்களுக்கு 125% முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், சராசரியாக ஒரு நபருக்கு ரூ.25,000க்கு மேல் கடன் வழங்கல் உள்ள மாவட்டங்களுக்கு 90% முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 184 மாவட்டங்கள் முன்னுரிமை உள்ள மாவட்டங்களாகவும், 205 மாவட்டங்கள் முன்னுரிமை இல்லாத மாவட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களுக்கான கடன் வழங்கும் முறை எவ்வித மாற்றமுமின்றி தொடரும்.

ஆந்திராவில் 13-ல் 11 மாவட்டங்கள், கர்நாடகாவில் 30-ல் 14 மாவட்டங்கள், கேரளாவில் 14-ல் 13 மாவட்டங்கள், தெலங்கானாவில் 33-ல் 9 மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களும் (மாவட்டங்கள் பிரிப்பதற்கு முந்தைய நிலை) சிறந்த கடன் வழங்கல் உள்ள மாவட்டங்களாக இருப்பதால், மாவட்டங்களுக்கான தரவரிசை பட்டியலில் இம்மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாது.

தெலுங்கானாவில் உள்ள கொம்ராம் பீமை (ஆசிபாபாத்) தவிர தென் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களும் சிறந்த கடன் வழங்கல் இருக்கும் மாவட்டங்கள் தான். ஆகையால் தென்மாநிலங்களில், கடன் வழங்கும் வங்கிகளுக்கு எவ்வித ஊக்கமும் அளிக்கப்படாது.

குறைந்த கடன் வழங்கல் கொண்ட மாவட்டங்கள் பெரும்பாலும் பீகார், உத்தர பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதால் அம்மாநிலங்களுக்கு கடன்வழங்க வங்கிகளுக்கு அதிக ஊக்கம் அளிக்கப்படும்.

தமிழகத்தின் எதிர்ப்பு

ரிசர்வ் வங்கியின் புதிய திருத்தத்தை எதிர்க்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், வேறு எந்த மாநிலத்துக்கும் தமிழகத்தின் அளவுக்கு ஊக்கத்தொகை ரத்து செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இக்கட்டான நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் முன்னுரிமை பட்டியலில் வரவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்தைத் தனிமைப் படுத்துவது போலாகும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

சிறந்த கடன் வழங்கல் உள்ள மாநிலங்களுக்கான ஊக்கத்தொகையை ரத்து செய்வது மிகக் குறுகிய பார்வை என்றும் இது எதிர்மறையாக போய் விடும் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இச்செயல் பொருளாதாரத்தை மட்டுமல்லாமல் வங்கித் துறையின் ஆரோக்கியத்தையும் சிதைக்கும் என்று முதல்வர் கூறியுள்ளார். ஆகையால் ரிசர்வ் வங்கி இம்முடிவைத் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்