Aran Sei

நகர்ப்புறங்களிலும் நூறு நாள் வேலைத்திட்டம் : தமிழக அரசுக்கு பரிந்துரை

credit: business-standard.com

பொது முடக்க நடவடிக்கை தமிழ்நாட்டு பொருளாதாரம் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இன்று தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

தமிழக அரசு நிதியின் மீதும் மொத்த பொருளாதாரத்தின் மீதும் பொது முடக்கம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்தும் பொது முடக்க காலத்துக்கு பிறகு தமிழ்நாட்டு பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்லவதற்கான பரிந்துரைகளை வழங்க உயர்நிலை குழுவை தமிழக அரசு சென்ற மே மாதம் அமைத்தது.

தமிழக அரசு இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 20-ம் தேதி தாக்கல் செய்தது. அதன் மீது நடைபெற்ற விவாதத்தின் போது, தமிழ்நாட்டின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருவாயை பெருக்குவதற்ககான வழிவகைகளை பரிந்துரை செய்ய வல்லுநர் குழுவை நியமிக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.

அந்தக் குழுவை அமைப்பதற்குள் கொரோனா காரணமாகப் பொது முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசின் வரி வருமானத்தை பெருக்குவதற்கான வழியை வகுக்கவும் பொது முடக்கம் ஏற்படுத்தியிக்கும் பாதிப்பிலிருந்து தமிழ்நாட்டு பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்வதற்கான பரிந்துரைகளை வழங்கவும் உயர்நிலை வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

ரங்கராஜன் தலைமையிலான உயர்நிலை குழு இன்று தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு செய்தியாளரை சந்தித்த ரங்கராஜன், ”முழு அடைப்பிலிருந்து வெளியேறினால் தான் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். நோய்த்தொற்று பரவுவதை தடுப்பதற்கு முழு அடைப்புக்கு பதிலாக வேறு பல வேலைகளை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2020-21-ம் ஆண்டில் என்னவாக இருக்கும் என்பதை பற்றி பேசும்போது, “ஒரு மதிப்பீட்டின்படி, இந்த ஆண்டு தமிழ்நாட்டின் பொருளாதாரம் பொது முடக்கத்தின் தாக்கத்திலிருந்து மீட்சியடைந்து 1.71 விழுக்காடு அளவுக்கு வளர்ச்சியடையும் என்று தெரிகிறது. ஆனால், மற்றொரு மதிப்பீட்டின்படி நோய்த் தொற்று காரணமாக இந்த ஆண்டு தமிழ்நாட்டின் பொருளாதாரம் சுருங்கும் என்று தெரிய வருகிறது” என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு வரி உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு, “இந்த ஆண்டில் வரி உயர்த்துவதற்கு வழியில்லை. இடைக்காலத்தில் அரசின் செலவுகள் அதிகரிக்கும் போது, அதற்கு ஏற்றவகையில் வரி விகிதம் மாற்றியமைக்கப்படும்” என்று ரங்கராஜன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பரிந்துரைகளை இரு பிரிவுகளாக பிரிக்கலாம் என்று கூறும் ரங்கராஜன், “ஒரு பிரிவு, நிவாரணம் மற்றும் புதுப்பித்தல், அதாவது குறுகிய காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியது. எடுத்துக்காட்டாக: நவம்பர் மாதம் வரையில் ரேசன் கடைகளில் கூடுதலாக அரிசி வழங்கப்படுகிற திட்டம் நீட்டிக்கப்பட வேண்டும். இந்த அறிக்கையின் இரண்டாவது பகுதி நீண்ட கால நோக்கு என்ன செய்ய வேண்டும் என்பதுடன் தொடர்புடையது” என்று தெரிவித்தார்.

”ஏற்கெனவே, கிராமப்புறங்களில் செயல்படுத்தபடும் நூறு நாள் வேலைத்திட்டம் போல் நகர்ப்புறங்களிலும் செயல்படுத்த வேண்டும்” என்ற முக்கியமான பரிந்துரையை தமிழக அரசுக்கு வழங்கியிருப்பதாக ரங்கராஜன் கூறினார்.

கடன் சுமை பற்றி ரங்கராஜன் பேசியபோது, “இந்த ஆண்டு கடன் சுமை அதிகரிக்கவே செய்யும். ஏனென்றால், வருமானம் குறைந்துள்ளது. மருத்துவம், சுகாதாரம் போன்ற செலவுகள் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவ செலவுகளை அதிகரிக்க வேண்டும்” என்று பரிந்துரைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்