Aran Sei

`பொருளாதாரச் சீரழிவு; நோய்த்தொற்றின் பேரழிவு’ – ராகுல் சாடல்

Credits Indian Express

`இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.3% குறைந்துள்ள நிலையில், மத்திய அரசு நிகழ்ந்துள்ள தவறை ஒப்புக்கொண்டு மேற்படி திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும்’ என மத்திய நிதித்துறையின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் எச்சரித்துள்ளார்.

11 நாடுகளின் 2020-ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அந்த நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்துள்ள மக்களின் எண்ணிக்கை கொண்ட அட்டவணையைப் பொருளாதார நிபுணரும், நிதித்துறை முன்னாள் ஆலோசகருமான கௌஷிக் பாசு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து இந்தத் தரவுகள் திரட்டப்பட்டுள்ளன.

கௌஷிக் பாசு ட்விட்டரில், “தற்போது இந்தியாவின் பொருளாதாரம் உள்ள நிலையைச் சில ஆண்டுகளுக்கு முன் யாராலும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியாது.”

 

“இதற்குக் கொரோனாவும் ஒரு காரணம். ஆனால் கொரோனா மட்டுமே காரணம் இல்லை. தரவுகளைக் கவனியுங்கள். தரவுகளை மறுக்க வேண்டாம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“தவறுகள் நிகழும். அதை ஒப்புக்கொண்டு திருத்துவதற்கான செயல்களை மேற்கொள்ளுங்கள். நாட்டில் உள்ள திறமையையும் நிபுணத்துவத்தையும் பயன்படுத்துங்கள்.” என்று கௌஷிக் பாசு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள தரவுகள்படி, 2020-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.3% குறைந்துள்ளது. வங்கதேசம், சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இந்தாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து உள்ளது.

நேபாளத்தில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் பாகிஸ்தான், இந்தோனேசியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்திருந்தாலும், இந்தியா இந்த நாடுகளை விட பின்தங்கிய நிலையில் உள்ளது எனத் தரவுகள் சுட்டுகின்றன. அண்டை நாடான பாகிஸ்தானுடைய மொத்தக் கொள்முதல் உற்பத்தி 0% மட்டுமே குறைந்துள்ளது.

அதே சமயம், கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 10 லட்சத்துக்கு 83 பேர் உயிரிழந்துள்ளதாக அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது நிலையில் உள்ள இந்தோனேசியாவில் 10 லட்சத்துக்கு 46 பேர் உயிரிழந்துள்ளார்கள். மக்கள் தொகையில் 10 லட்சத்துக்குப் பாகிஸ்தானில் 30 பேரும் சீனாவில் 3 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்கள்.

காங்கிரசஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி பொருளாதார வல்லுநர் கௌஷிக் பாசு இயற்றியுள்ள அட்டவணையைப் பகிர்ந்து ட்விட்டரில்,

`எப்படி ஒரு பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பதும், அதிக எண்ணிக்கையிலான மக்களை நோய்த்தொற்றுக்கு உள்ளாக்குவதும்’ என மத்திய அரசை விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்