Aran Sei

கொரோனா பொருளாதார நெருக்கடி – ‘ஒருமித்த கருத்து ஜனநாயகத்துக்கு முக்கியம்’ : ரகுராம் ராஜன்

Image Credits: Scroll

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ முயற்சியின் கீழ் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளளார். நாடு கடந்த காலத்தில் இந்தப் பாதையில் சென்றுள்ளதாகவும் ஆனால் அதில் வெற்றிபெற முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பவன்’ஸ் எஸ்பிஜெஐஎம்ஆர் கல்லூரியின் நிதி ஆய்வு மையம் ஏற்பாடு செய்த ஒரு வெபினாரில் (காணொளி உரையாடலில்) அவர் உரையாற்றினார்.

அதில் பேசிய ரகுராம் ராஜன், “இறக்குமதியைக் குறைப்பதற்காக (ஆத்மநிர்பர் பாரத் முன்முயற்சியின் கீழ்), இதர நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்குச் சுங்கவரியை உயர்த்துவது நமது நோக்கமாக இருந்தால், அது நாம் கடந்த காலத்தில் முயற்சித்த ஒன்றுதான், அம்முயற்சி தோல்வியுற்றது. அந்தத் திசையில் செல்வது குறித்து நான் எச்சரிக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

“ஒரு நாடு அதிக அளவில் ஏற்றுமதி செய்ய வேண்டுமானால்,  ஏற்றுமதியாகும் பொருட்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உள்ளீட்டுப் பொருட்களை முடிந்தவரை மலிவான விலைக்கு இறக்குமதி செய்ய முடிய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

“ஏற்றுமதி சக்தியாக சீனாவின் சாதித்த வளர்ச்சிப் பொருட்களைச் சேர்த்து இறுதிப் படுத்துவது (assembly) மூலம் நடந்தது. அது அதற்கு வெளியில் இருந்து நடந்த ஒன்று. அது வெளிநாடுகளில் இருந்து பொருட்களைக் கொண்டு வந்து, அவற்றை ஒன்றாக இணைத்து இறுதியான உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்தது. ஏற்றுமதி செய்ய வேண்டுமானால், நீங்கள் இறக்குமதி செய்ய வேண்டும். பெரிய சுங்கக் கட்டணங்களை விதிப்பதற்குப் பதிலாக, இந்தியாவில் தொழில் துறை உற்பத்திக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

திட்டமிட்ட அரசு செலவினங்கள் நீண்ட காலத்திற்குப் பலனளிக்கும் என்றார் அவர்.

“ஒட்டுமொத்தச் செலவினங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன். வரம்பில்லாமல் செலவு செய்வதற்கான நேரம் இதுவல்ல. ஆனால் இலக்கு வைத்து, புத்திசாலித்தனமாகவும் கவனமாகவும் செலவு செய்தால், அது நிறைய பலன்களைத் தரும்,” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொருளாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள மந்தநிலைக்கான காரணங்களைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

“மீண்டும் திறக்கப் போவதில்லை என்ற முடிவோடு பல நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தால், அது பொருளாதாரத்தின் வழங்கல் (உற்பத்தி) பக்கத்தைப் பாதிக்கும். செலவு செய்ய முடியாமல் பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டால், அவர்களுக்குத் தரமான கல்வியோ வேலையோ கிடைக்காது. இது எதிர்காலத்திற்கான நமது வளர்ச்சித் திறனைப் பாதிக்கும்,” என ரகுராம் ராஜன் சுட்டிக் காட்டியுள்ளார்.

உண்மையான பிரச்சினைகளை அடையாளம் கண்ட பிறகு மேற்கொள்ளப்படும் சீர்த்திருத்தங்கள் தேவையானவை. ஆனால், சீர்த்திருத்த செயல்முறை சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும் என்றார்.

“பொதுமக்களிடமும் விமர்சகர்களிடமும் எதிர்க்கட்சிகளிடமும் பல யோசனைகள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் ஒருமித்த கருத்தை உருவாக்க முடிந்தால் அவை மிகவும் பயனுள்ள வழியில் செல்வது உறுதிப்படுத்தப்பட வேண்டும். நாம் என்றென்றும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் அந்த ஒருமித்த கருத்தை உருவாக்குவது ஜனநாயகத்தில் முக்கியமானது,” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

“உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஒரு பெரிய தடை நிலம் கையகப்படுத்தும் செயல்முறையாகும். இதற்கு நிலத்தை இன்னும் சிறப்பாக வகைப்படுத்துவது, நிலவுடைமை குறித்த தெளிவு உள்ளிட்ட சில தொழில்நுட்ப மாற்றங்கள் தேவை” என்று அவர் கூறியுள்ளார்.

“சில மாநிலங்கள் இதில் முன்னேறியுள்ளன. ஆனால், நாம் ஒட்டுமொத்தமாக இதில் முன்னேற வேண்டும்,” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

நிதித் துறையைச் சீர் செய்வதில் நாடு கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்தத் துறையைச் சீரமைப்பதற்கான ஒரு திடமான செயல்முறை திட்டம் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% அளவு கடன் என்ற நிலையிலும் நம்மிடம் ஆரோக்கியமான நிதித் துறை கட்டமைப்பு என்பது பரிதாபகரமானது. நாம் அளவு ரீதியாகவும் தரத்திலும் பின் தங்கியுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

ரகுராம் ராஜன், செப்டம்பர் மாதத்தில் சில்லறை விற்பனைப் பணவீக்க வீதம் 7.34% ஆக இருப்பது பற்றியும் கருத்து கூறினார்.

“இந்தப் பணவீக்கத்தில் எவ்வளவு தற்காலிகமானது, எவ்வளவு காலம் நீண்டது என்பதைப் புரிந்துகொள்வது கடினம். அதனால்தான் ரிசர்வ் வங்கி காத்திருந்து கவனிக்கிறது என்று நான் நினைக்கிறேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.

நிதிக் கொள்கை குறித்து கேட்டதற்கு, எதிர்கால ரிசர்வ் வங்கிக் கொள்கையைக் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், அது பொருளாதார நடவடிக்கையை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்