Aran Sei

GMM Pfaudler OFS : பங்கு விற்பனையில் முறைகேடு நடந்ததா?

https://www.business-standard.com

எஃப்எஸ் (OFS) முறையில் கடந்த வாரத்தில் பங்குகளை விற்க முயன்ற ஜிஎம்எம் ஃபாட்லர் (GMM Pfaudler) என்ற நிறுவனம் பங்குச் சந்தையில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பங்கு விற்பனை மூலம் நிதி திரட்டுவதற்காக ஒரு நிறுவனம் புதிய பங்கு வெளியீடு (IPO) செய்யும். அதன் மூலம் நிறுவனம் தனது மூலதனத்தை பங்குகளாக பிரித்து அதில் ஒரு பகுதியை சிறு முதலீட்டாளர்களுக்கும், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பெரிய முதலீட்டாளர்களுக்கும் விற்பதன் மூலம் நிறுவனத்துக்குத் தேவையான நிதி திரட்டப்படும்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு வேறு காரணங்களுக்காக நிதி திரட்ட வேண்டும் என்றால் முதல் வெளியீட்டுக்கு பிந்தைய விற்பனை (Follow on Public offer – FPO) என்ற முறையில் நிறுவனம் நிதி திரட்டும்.

பங்குகளை பொது முதலீட்டாளர்களுக்கு வெளியிட்ட பிறகும் நிறுவனத்தின் முன்னணி நிர்வாகிகள் பொதுவாக அதிக பங்கினை வைத்திருப்பார்கள். அவர்கள் தமது பங்குகளை விற்கவேண்டும் என்றால் நேரடியாக பங்குச் சந்தைகள் மூலமாகவோ அல்லது விற்பனைக்கான அறிவிப்பு (Offer for Sale – OFS) என்ற முறையிலோ அதைச் செய்ய முடியும்.

பங்குச் சந்தை மூலம் நிர்வாகிகள் அதிக அளவு பங்கினை விற்க முடியாது. மேலும் நிர்வாகி இதுபோல பங்குச் சந்தையில் தமது பங்குகளை விற்பது பெரும்பாலும் எதிர்மறையாக பார்க்கப்படும். அது சந்தையில் பங்கு விலையிலும் எதிரொலிக்கும். அதனால் அதிக எண்ணிக்கையிலான பங்குகளை விற்க வேண்டுமென்றால் ஒரு நிறுவனம் OFS முறையில் மட்டுமே தனது பங்கினை விற்பனை செய்யும். இவ்வாறு OFS முறையில் பங்கினை விற்பதற்கு நிறுவனம் இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியிடம் அனுமதி பெற வேண்டும்.

அவ்வாறு விற்பனைக்கான அறிவிப்பு (OFS) முறையில் பங்குகளை விற்கும் பொழுது எவ்வளவு பங்குகளை விற்கப் போகிறோம் என்ற அடிப்படை அளவு (base size)வையும், அவ்வாறு விற்கப்படும் ஒவ்வொரு பங்கின் விலை எவ்வளவு என்பதையும் குறிப்பிடுவார்கள். இந்தப் பங்கு விற்பனைக்கு முதலீட்டாளர்களிடம் பெரிய அளவு ஆதரவு கிடைத்தால் இன்னும் அதிக பங்குகளை விற்பனை செய்வதை கிரீன் ஷூ (green shoe) முறையில் குறிப்பிடுவார்கள்.

உதாரணமாக 10 லட்சம் பங்குகள் அடிப்படை அளவு கொண்ட விற்பனையில், கிரீன் ஷூ ஆப்ஷனில் 8 லட்சம் பங்குகள் என்று குறிப்பிட்டால் மொத்தம் 18 லட்சம் பங்குகள் வரை விற்பனை செய்ய முடியும்.

பொதுவாக ஓஎஃப்எஸ் (OFS) மூலம் பங்கு விற்பனை செய்வது 2 நாட்கள் நடைபெறும். முதல் நாளில் இரண்டு லட்சத்திற்கும் குறைவாக பங்குகளை வேண்டும் சில்லரை வர்த்தகர்களிடம் பங்குகளை விற்பனை செய்வார்கள். இதற்கு மொத்த பங்குகளில் குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கப்படும். இரண்டாவது நாளில் இரண்டு லட்சத்திற்கும் மேல் முதலீடு செய்யும் இந்தியா மற்றும் அயல்நாட்டு வர்த்தகர்களிடம் பங்குகளை விற்பனை செய்வார்கள்.

ஜி.எம்.எம் ஃபாட்லர் (GMM Pfaudler) நிறுவனத்தின் பங்கு கடந்த ஒரு வருடமாக ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அந்தப் பங்கின் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ 1,500-க்கு வர்த்தகம் ஆனது. ஆகஸ்ட் மாதத்தில் அதன் உச்ச விலையான ரூ 6,900 என்ற விலையில் வர்த்தகம் ஆனது. இது ஏறக்குறைய நான்கு மடங்கு வளர்ச்சி ஆகும். இதன் நிறுவனர்கள் 75 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார்கள்.

இந்த நிறுவன நிர்வாகிகள் கடந்த வாரத்தில் OFS மூலம் தனது பங்குகளை விற்பனை செய்தனர். OFS முறையில் விற்பனை செய்யும்போது பொதுவாக சந்தை விலையில் இருந்து 5 முதல் 10 சதவீதம் குறைவான விலையில் விற்பனை நடக்கும். இதுதான் நடைமுறை.

ஆனால் ஜி.எம்.எம் ஃபாட்லர் (GMM Pfaudler) நிர்வாகிகள் சந்தையில் நடப்பு பங்கு விலையில் இருந்து 30% தள்ளுபடி விலையில் விலை நிர்ணயம் செய்தனர். அதுவும் மிக அதிகமாக 17 சதவீதம் அடிப்படை அளவு (base option) முறையிலும் 11 சதவீதம் கிரீன் ஷூ (green shoe) ஆப்ஷன் முறையிலும் பங்குகளை விற்க முயன்றனர்.

இவ்வளவு அதிக பங்குகளை இவ்வளவு குறைவான விலைக்கு விற்க முன் வருவதால் அதன் பங்கு விலை தடாலடியாக விழத் தொடங்கியது. ரூ 6,900-க்கு விற்பனையாகும் பங்கினை வாங்குவதற்கு யாரும் தயாராகவில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் பங்கின் விலை லோயர் சர்க்யூட்-ல் சென்று முடிகிறது. ஒவ்வொரு நாளும் பங்கின் விலை அதிக பட்சமாக எவ்வளவு உயரலாம்/ குறையலாம் என்று ஒவ்வொரு பங்கிற்கும் ஒரு வரம்பு செபியால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக இந்த சர்க்யூட் 10% என்று வைத்துக் கொண்டால் 100 ரூபாய் கொண்ட ஒரு பங்கு அதிகபட்சம் 110 ரூபாய் வரை மட்டுமே உயர முடியும் (Upper circuit). குறைந்தபட்சம் 90 ரூபாய் வரை மட்டுமே குறைய முடியும் (Lower circuit)

ரூ 6,900-க்கு விற்பனையான ஜி.எம்.எம் ஃபாட்லர் (GMM Pfaudler)-ன் பங்கு ஒரே வாரத்தில் இன்றைய நிலவரப்படி ரூ 3,600 விலையில் விற்பனையாகிறது. இன்றும் ரூ 3,600 ரூபாய் கொடுத்து பங்குகளை வாங்குவதற்கு பலர் தயாரில்லை. அதிக விலை கொடுத்து இந்தப் பங்கினை வாங்கியவர்கள் ஒரே வாரத்தில் மிகப்பெரிய நஷ்டத்தை எதிர் கொண்டிருக்கிறார்கள்.

ரூ 3,500-க்கு வெளியிடப்பட்ட பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. அதற்கு 119 சதவிகித வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதன் மூலம் அதன் நிறுவனர்கள் தமது பங்கை விற்று லாபம் அடைந்து விட்டனர்.

நிறுவனர்கள் மிகக் குறைந்த விலைக்கு பங்கினை விற்றதே இவ்வளவு விலை வீழ்ச்சிக்குக் காரணம். இது ஒரு திட்டமிட்ட ஏமாற்று வேலை. அந்த நிறுவனத்தின் மீது பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. செபி தங்களிடம் விளக்கம் கேட்டால் தருவதற்கு தயாராக இருப்பதாக நிறுவனர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் பணத்தை இழந்த முதலீட்டாளர்கள் இந்த விளக்கத்தை ஏற்கவில்லை.

பங்குச் சந்தை வர்த்தகம் என்பது இது போன்ற பல ஏற்ற இறக்கங்களை கொண்டதாக இருக்கிறது. இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா பங்குச் சந்தை முதலீடு மூலம்தான் தான் முதலீடு செய்த 5 ஆயிரம் ரூபாயை பல ஆயிரம் கோடிகளாக உயர்த்தி உள்ளார். ஆனால் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யும் புதியவர்கள் ஜி.எம்.எம் ஃபாட்லர் (GMM Pfaudler) போன்று சந்தையிலுள்ள ரிஸ்க்கை தெரிந்துகொண்டு முதலீடு செய்யத் தவறினால் இழப்பை சந்திக்க நேரிடும்.

ஷியாம் சுந்தர்
(கட்டுரையாளர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஐ.டி துறையில் பணியாற்றி வருபவர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்