Aran Sei

பஞ்சாப் சட்டப் பேரவை – வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டம் இயற்றம்

ஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் மின்சாரச் சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தங்களுக்கு எதிராகவும் சட்டத்தை முன் மொழிந்திருக்கிறார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களும் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்று கூறி பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் மாநில சட்டப் பேரவையில் மூன்று மசோதாக்களை முன் மொழிந்துள்ளார்.

அந்த மசோதாக்கள் பின்வருமாறு

  • விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பஞ்சாப் திருத்த மசோதா 2020
  • விலை உறுதி மற்றும் சேவைகள் தொடர்பான விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் (சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பஞ்சாப் திருத்த மசோதா 2020)
  • அத்தியாவசியப் பொருட்கள் மசோதா (சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பஞ்சாப் திருத்த மசோதா 2020)

 

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயச் சட்டங்களுக்கு எதிரான சட்டத்தைச் சட்டப் பேரவையில் முன்மொழிந்தார்.

பஞ்சாப் சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயச் சட்டங்களை நிராகரிக்கும் வரைவுச் சட்டத்தை முன் வைத்து இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்றும் முன்மொழியப்பட்டுள்ள மின்சார ( திருத்தம் ) மசோதா 2020 ஆகிய இரண்டும் நீக்கப்பட வேண்டியவை என்று கூறினார் கேப்டன் அமரீந்தர் சிங்.

இந்த வரைவுச் சட்டம் விவசாயச் சட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட மின்சார மசோதாவை ரத்து செய்ய முயல்கிறது. மேலும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் உணவு தானியங்களைக் கொள்முதல் செய்வது விவசாயிகளின் சட்டரீதியான உரிமை என்றும் இந்தக் கொள்முதலைச் சாத்தியப்படுத்த இந்திய அரசு இந்திய உணவுக் கழகம் போன்ற இதர நிறுவனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.

மேலும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கீழே விவசாயப் பொருட்களான கோதுமை நெல் போன்றவற்றை வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் அவர்களுக்கு மூன்று வருடங்களுக்குள்ளான சிறைத் தண்டனை வழங்குவதற்கு இம்மசோதா வழி செய்கிறது.

விவசாயச் சட்டங்களுக்கு எதிரான மசோதாவின் நகல்கள் தங்கள் கையில் கிடைக்காததைப் பயன்படுத்திக்கொண்ட சில எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மிக அற்பமான செயல்களில் ஈடுபட்டதாக அமரீந்தர் சிங் கூறினார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி, அகாலி தள் எம்எல்ஏக்கள் மசோதா நகல்கள் தரப்படவில்லை என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்.

மத்திய அரசின் விவசாயச் சட்டங்கள் : ‘முறியடிக்கக் கூடுகிறது’ பஞ்சாப் சட்டப்பேரவை

டிராக்டரில் சட்டமன்றத்துக்கு வருவது இரவு முழுவதும் சட்டமன்றத்தில் தங்கி போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற செயல்கள் மூலம் அவர்கள் அரசியல் ஆதாயம் தேட முயன்றதாகவும் குற்றம் சாட்டினார், முதலமைச்சர் அமரீந்தர் சிங்.

நிபுணர்கள் குழுவுடன் நடத்திய நீண்ட நேர ஆலோசனைக்குப்பின் விவசாயச் சட்டங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட சட்டத்தில் அவர் கையொப்பம்  இட்டதாகவும் இது போன்ற நெருக்கடியான காலகட்டத்தில் அந்தச் சட்டத்தின் நகலை மற்ற உறுப்பினர்களுக்குத் தருவதில் கால தாமதம் ஏற்படுவது இயல்பானது என்றும் கூறினார்.

முதலமைச்சர் அமரீந்தர் சிங் இன்று முன்வைக்கப்படும் மசோதாக்கள் அனைத்தும் மாநிலத்தின் சட்டப் போராட்டத்துக்கு அடிப்படையாக அமையும் என்றும் இதன் மூலம் இந்த விவசாயச் சட்டத்திற்கு எதிரான போரை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த மசோதாக்கள் தயாரிக்கப்படுவதற்கு முன்பு கடுமையாக ஆய்வு செய்ய வேண்டியிருந்தது என்றும் கூறியுள்ளார்.

வரைவுச் சட்டத்தில் விவசாயச் சட்டங்கள் தொடர்பாக சட்டமன்றம் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், இந்திய அரசால் இயற்றப்பட்டுள்ள விவசாயச் சட்டங்கள் விவசாயிகளின் நலனில் சிறிதும் சிந்தனையற்ற அணுகுமுறையையும் அலட்சியப்போக்கையும் கடைப்பிடிப்பதாகக் கூறியுள்ளது.

இந்த மூன்று விவசாயச் சட்டங்களும் இதனுடன் சேர்த்து முன்மொழியப்பட்ட மின்சார (திருத்தம்) மசோதாவும் நிலமற்ற தொழிலாளர்கள் மற்றும் விவசாய நலன்களுக்கு எதிரானவை என்றும் பஞ்சாப் மட்டுமல்லாமல் அசல் பசுமைப் புரட்சி நடந்த இடங்களான ஹரியானா மேற்கு உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் விவசாயச் சந்தைப்படுத்துதலை சோதனை செய்வதற்வே உதவும் எனக் குற்றம்சாட்டுகிறது. இது விவசாயத் திட்டம் இல்லை வர்த்தகத் திட்டம் எனவும் வரைவு கூறுகிறது.

வரைவுச் சட்டத்தை வாசித்த சபாநாயகர் ராணா கே.பி. சிங் ”இந்தச் சட்டங்கள் அரசியலமைப்பிற்கு (நுழைவு 14 பட்டியல் 2) எதிரானவை என்றும் பஞ்சாப் மாநிலத்தின் முகமே விவசாயம்தான் என்றும் கூறினார். இது மாநிலத்தின் மீதான ஒரு நேரடித் தாக்குதல் என்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதற்கு எதிராக மாநிலங்களின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை ஆக்கிரமிக்கும் செயல் என்று கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்