Aran Sei

மத்திய அரசு கடன்: 100 நூறு லட்சம் கோடியை கடந்தது

credit: blog.blominvestbank.com

த்திய அரசின் கடன் 100 லட்சம் கோடியை கடந்துள்ளது என்று நிதி அமைச்சகத்தின் கீழுள்ள பொருளாதார விவகார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட ’பொது கடன் மேலாண்மை’ பற்றிய காலாண்டு அறிக்கையில், இந்த ஆண்டு மத்திய அரசு கடன் வாங்குவதாக திட்டமிட்டிருந்த தொகையில் 83.2 விழுக்காட்டை ஏப்ரல்-ஜூன் மாதத்தில் மத்திய அரசு கடனாக வாங்கிவிட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது. 2019-ம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதத்தில் மத்திய அரசு 61.4 விழுக்காடு அளவுக்கு கடன் வாங்கியது.

இந்த ஆண்டு மத்திய் அரசின் வரி வருவாய் ரூ 20.20 லட்சம் கோடியாக இருக்கும் என்று இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஜூன்-ஏப்ரல் காலாண்டில் ரூ 1.50 லட்சம் கோடியை மட்டுமே வரியாக மத்திய அரசு வசூல் செய்துள்ளது.

இந்த ஆண்டு மத்திய அரசின் வரி அல்லாத வருவாய்கள் ரூ 3.85 லட்ச  கோடியாக இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.  ஜூன்-ஏப்ரல் காலாண்டில் ரூ 15.18 ஆயிரம் கோடி வரி அல்லாத வருவாய் வசூலாகியுள்ளது.

மூலம்: பொது கடன் மேலாண்மையின் காலாண்டு அறிக்கை-செப்டம்பர் 2020

பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளிலிருந்து ஈட்டப்படும் கடன் அல்லாத மூலதன பற்றுகள் நடப்பு ஆண்டில் ரூ 2.24 லட்சம் கோடியாக இருக்கும் என்று நிதிநிலை அறிக்கை மதிப்பீடு செய்துள்ளது. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ 3,500 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது.

இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் செலவினம் ரூ 30.42 லட்சம் கோடியாக இருக்கும் என்று 2020-21 நிதிநிலை அறிக்கை மதிப்பிட்டுள்ளது. ஜூன்-ஏப்ரல் காலாண்டில் மத்திய அரசு ரூ 8.15 லட்சம் கோடியை செலவிட்டுள்ளது. இதில் உள்கட்டமைப்பு வசதி போன்ற மூலதன செலவுகள் மீது வெறும் ரூ 88 ஆயிரம் கோடி மட்டுமே செலவிட்டுள்ளது.

மத்திய அரசின் மொத்தக் கடன் இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் ரூ 94 இலட்சம் கோடியாக இருந்தது. இது ஜூன் மாத இறுதியில் ரூ 101 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2020-21-ம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 7.1 விழுக்காடு அளவுக்கு மத்திய அரசின் கடன் அதிகரித்திருப்பதாக பொது கடன் மேலாண்மை அறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய அரசின் மொத்த கடனில் உள்நாட்டில் பெற்ற கடன் மட்டுமே ரூ 86 லட்சம் கோடியாகும். மத்திய அரசின் மொத்த கடனில் வெளிநாட்டு கடன் ரூ 6.25 லட்சம் கோடியாகும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

மத்திய அரசின் கடன் ரூ 100 லட்சம் கோடியை கடந்ததை எப்படி புரிந்து கொள்வது என்ற கேள்வியை சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவர் ஜோதி சிவஞானத்திடம் அரண் செய் சார்பாகக் கேட்டோம். அவர்நிதி நிர்வாகப் பொறுப்புடமைச் சட்டம் (Fiscal Responsibility and Budget Management Act) மத்திய அரசின் பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 விழுக்காடு அளவுக்கு இருக்க வேண்டும் வரையறை செய்துள்ளது. தற்போதுள்ள அரசு இந்த வரம்பை மீறியுள்ளதை பொதுக் கடன் அதிகரிப்பு காண்பிக்கிறது” என்று கூறினார்.

“கடன் அதிகரித்துக் கொண்டே செல்வது நீண்ட கால ஓட்டத்தில் என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்கும்?” என்று கேள்விக்கு,

“நீண்ட கால ஓட்டத்தில் மத்திய அரசினால் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போகும்” என்று தெரிவித்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்