Aran Sei

பொருளாதார வளர்ச்சி படலம்: தொடருமா? கானல்நீராகுமா?

credit:ft.com

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதன்மை இடத்தில் உள்ள தமிழ்நாடு, மகாராஷ்ரா ஆகிய மாநிலங்கள் செப்டம்பர் மாதத்தில் வளர்ச்சியை கண்டுள்ளன.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பொது முடக்கத்தை அறிவித்தது. பொது முடக்கம் காரணமாக இந்தியப் பொருளாதாரம் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 23.9 விழுக்காடு அளவுக்கு வீழ்ச்சியடைந்து.

வளர்ந்துவரும் மாநிலங்களைக் காட்டிலும் வளர்ந்த மாநிலங்கள் மீது பொது முடக்கம் மிக மோசமான தாக்கத்தை செலுத்தியது என்றும் தற்போது அந்த போக்கில் மாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது என்றும் மிண்ட் நாளேட்டில் வெளியாகியுள்ள மாநில மீட்சி அளவீடு (State Recovery Tracker) குறிப்பிடுகிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிபாதி அளவுக்கு மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், கர்நாடகம், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய ஆறு மாநிலங்கள் பங்களிப்பு செய்கின்றன. இம்மாநிலங்களில், பணியிடங்களுக்கு 69 விழுக்காடு பணியாளர்கள் மீண்டும் வேலைகளுக்கு திரும்பியுள்ளனர் என்று கூகுல் தரவு கூறுகிறது. இதன் அளவு இதர மாநிலங்களில் 78 விழுக்காடாக பதிவாகியுள்ளதாகவும் கூகுல் தரவு கூறுகிறது.

மாநில மீட்சி அளவீட்டில், பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவதற்கு பதிலிகளாக (proxies) மின்சார நுகர்வு, சரக்கு மற்றும் சேவை வரி வசூல் மற்றும் வாகன விற்பனைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சி பதிலிகளை கணக்கிடுவதற்கு இந்தியாவின் 12 பெரும் பொருளாதாரங்களை கொண்டுள்ள மாநிலங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அம்மாநிலங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 4 விழுக்காடு அளவுக்கு பங்களிப்பு செய்கிறது.

பெரும் பொருளாதாரத்தை கொண்ட மாநிலங்கள் செப்டம்பர் மாதத்தில் ஏனைய மாநிலங்களைக் காட்டிலும் அதிகமாக வளர்ச்சியை கண்டுள்ளன. இந்த மாநிலங்களில் கொரோனா தொற்று 54 விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளது. இது மே மாதத்துடன் ஒப்பிடும்போது நல்ல முன்னேற்றம் ஆகும். மே மாதத்தில் குறைவான தொற்றுபதிவான மாநிலங்களில் தற்போது நோய் பரவல் அதிகமாக உள்ளது. இது அம்மாநிலங்களில் பொருளாதார நடவடிக்கைகளை பாதிக்கிறது என்று மிண்ட் நாளேடு தெரிவிக்கிறது.

கடந்த ஆறு மாதங்களில் முதல்முறையாக மின்சார நுகர்வு சென்ற ஆண்டில் நுகரப்பட்ட அளவைக் காட்டிலும் 5 விழுக்காடு அதிகமாக செப்டம்பர் மாதத்தில் நுகரப்பட்டுள்ளது என்று தேசிய மின்னோட்ட அளவு பகிர்வு மையம் (National Load Despatch Centre) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன..

சென்ற ஆண்டைக் காட்டிலும் நடப்பு ஆண்டில் மத்திய பிரதேசம் 23 விழுக்காடும் மத்திய பிரதேசம் 19 விழுக்காடும் அதிகமாக மின்சாரத்தை நுகர்ந்துள்ளன. ஆனால், கர்நாடகாவில் மின்சார நுகர்வு சென்ற ஆண்டைக் காட்டிலும் 12 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் 10 லட்சத்து 34 ஆயிரம் புதிய வாகணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்ற ஆண்டைக் காட்டிலும் இது 11 விழுக்காடு அதிகம் என சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் தரவுகள் காண்பிக்கின்றன. சென்ற ஆண்டைக் காட்டிலும் தமிழ்நாட்டில் வாகன பதிவுகளின் எண்ணிக்கை 17 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் நடுத்தர பொருளாதார வளர்ச்சியை கொண்ட மாநிலங்களில் வாகன விற்பனை 18 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி வசூலிலும் பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட 12 மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. சென்ற மாதம் வரையில் இம்மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி வசூல் பூஜியம் விழுக்காட்டுக்கும் கீழே இருந்தது. ஆனால், செப்டம்பர் மாதத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் 15 விழுக்காடும் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் 18 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

கார்ப்ரேட் துறை தனது தொழில்களையும் பொருளாதார நடவடிக்கைகளையும் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் இந்தியப் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடையும் அதேவேளையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதில் கவனம் குவிக்க வேண்டும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்