Aran Sei

தனியார் ஆம்னி பேருந்துகள் – முழு எண்ணிக்கையில் இயங்கவில்லை

மிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள் வெள்ளிக் கிழமை முதல் இயங்கத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் ஏறக்குறைய 2000 ஆம்னி பேருந்துகள் இருந்தாலும் முதல்கட்டமாக 500 பேருந்துகள் மட்டுமே இயங்கத் தொடங்கியுள்ளன.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பேருந்துகளும் தமிழகத்தில் இயங்கவில்லை. ஜூன் மாதம் முதல் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு பல தளர்வுகளை வழங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாநிலத்தில் பேருந்துகள் இயங்குவதற்கு பல கட்டங்களாக அனுமதி அளித்தது. ஜூன் மாதத்தில் தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரித்து அந்தந்த மண்டலத்திற்குள் பேருந்துகளை இயக்க அனுமதி அளித்தது. அப்போது சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

பிறகு நோய்த் தொற்று அதிகம் இருந்ததால் பேருந்து இயக்கம் தடை செய்யப்பட்டது. பிறகு மீண்டும் செப்டம்பர் மாதத்திலிருந்து பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. என்றாலும் பேருந்துகளை இயக்குவதற்கு பல கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. அதன்படி ஒரு இருக்கையை விட்டு ஒருவர் மட்டுமே பயணிகள் பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்தது.

தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அவ்வாறு பேருந்துகளை இயக்குவது தமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறி பேருந்துகளை இயக்கவில்லை.

அரசு பல கட்டுப்பாடுகள் விதித்து இருந்தாலும் இந்தக் கட்டுப்பாடுகள் இப்பொழுது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. காலை நேரத்தில் பேருந்தில் பயணிகள் படிக்கட்டில் பயணம் செய்யும் காட்சி இப்பொழுது தினமும் காணக் கிடைக்கிறது. மக்களும் அதிக அளவில் பேருந்துகளில் பயணம் செய்ய தொடங்கிவிட்டனர்.

இப்பொழுது தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளை இயக்க ஆரம்பித்துள்ளனர்.

அனைத்து தனியார் பேருந்துகள் சங்கத்தைச் சேர்ந்த A அன்பழகன் “தமிழ்நாட்டில் பதிவாகியுள்ள சுமார் 500 பேருந்துகள் சென்னையிலிருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன” என்று கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகஅரசு ஆம்னி பேருந்து இயங்காத கொரனோ காலத்திற்கும் சாலை வரி விதித்துள்ளது. இந்த சாலை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் சாலை வரியை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடுத்துள்ளனர்.

“சாலை வரி தொடர்பாக உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்பார்த்து இருப்பதால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று தமிழ்நாடு பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அப்சல் கூறியிருக்கிறார் என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

பிரபல இணையதளமான ரெட்பஸ் மற்றும் பிற பயணச் சீட்டு முன்பதிவு தளங்கள் மூலமாக டிக்கெட் பெற்று பேருந்துகளில் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இணையதளங்களில் முன்பதிவு பல பேருந்துகளில் குறைவாகவே உள்ளது.

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு பிரயாணத்தின் முடிவில் பேருந்து சுத்தமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுவதாகவும் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மக்கள் பயப்படாமல் நிம்மதியாக பயணம் செய்யலாம். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.

இப்பொழுது தமிழகத்தில் பண்டிகை காலங்கள் தொடங்கிவிட்டன. நவராத்திரி பண்டிகை ஆரம்பிக்க உள்ளது. நவம்பர் 14 அன்று தீபாவளி பண்டிகை வரவுள்ளது. அதனால் மக்கள் அதிக அளவில் பயணம் செய்ய தேவை உள்ளது.

கொரோனா நோய்த் தொற்று அதிக அளவில் இருந்தாலும் பல நாட்கள் அனைவராலும் முடங்கிக் கிடக்க முடியாது. பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கொரோனா நோய்த்தொற்றுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். அதனால் அவசியத் தேவைகளுக்கு தனியார் ஆம்னி பேருந்துகளை மக்கள் மீண்டும் நாடத் தொடங்குவார்கள். இதனால் தனியார் ஆம்னி பேருந்துகளை சார்நதுள்ள தொழிலாளர்களும் தொழில்களும் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்