தனிநபர் ஒருவர் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் பொழுது அவர் நடப்பு ஆண்டில் பெற்ற வட்டி, மூலதன ஆதாயம், பங்குககளுக்கான ஈவுத் தொகை போன்ற வருமானங்கள் கணக்கீடு செய்யப்பட்டு, வருமான வரி செலுத்துவதற்கான படிவத்தில் தானாகவே அந்தத் தொகைகள் பதிவு செய்யப்படும் என்று 2021-22ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வீடு வாங்குவது முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது வரை என்ன நடவடிக்கை மேற்கொண்டாலும் சோசியல் செக்யூரிட்டி எண் (SSN – சுருக்கமாக) கொடுக்க வேண்டும். அந்த நம்பரை வைத்து தனிநபர் செய்யும் அனைத்து வகையான பரிவர்த்தனைகளையும் (டிரன்சாக்சன்களையும்) கண்காணிக்க முடியும். தனிநபர் மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனைகளையும் இதன் மூலம் நடைமுறைப்படுத்த முடியும்.
ஆனால் நமது நாட்டில் அதிக மக்கள் தொகை காரணமாகவும், முறைசாரா பொருளாதாரம் காரணமாகவும் தனிநபர்களின் பரிவர்த்தனைகளை முறைப்படுத்துவது முடியாத காரியமாக இருந்து வந்தது. செல்வந்தர்கள் பலர் அதிக வருமானம் ஈட்டினாலும் அதற்கு ஈடான வருமானவரி செலுத்தாமல் தப்பித்து வந்தனர். இதனை முறைப்படுத்த, கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வருமான வரி தொடர்பான பிரத்தியோகமான நிரந்தர கணக்கு எண் (PAN)ணையும், ஆதார் எண்ணையும் கொண்டு வந்தது, அரசு.
வங்கிக் கணக்குகள் தொடங்கும் பொழுது வாடிக்கையாளர்களின் அடிப்படை தகவல்களை வங்கியானது சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் know your customer (KYC) என்ற தலைப்பில் அத்தகைய தகவல்களை வங்கிகள் பெற்று சேகரிக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது. மேலும், ஒரு வாடிக்கையாளர் அதிக தொகையிலான பண பரிவர்த்தனைகள் செய்தால் PAN எண் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக பணப் பரிவர்த்தனைகள் முறைப்படுத்தப்பட்டன.
இது போன்ற அடிப்படை தகவல்களை வங்கிகளும் தனியார் நிறுவனங்களுஉம் பெறுவதில் சில சிக்கல்கள் எழாமல் இல்லை. ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட ஆதார் எண் பிரத்தியோக தகவல்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு தமது ஏர்டெல் மணி வங்கிக் கணக்கில், அவர்களுக்கு தெரியாமலேயே, கணக்கு தொடங்கியது. வாடிக்கையாளரின் விருப்பம் இல்லாமலே அப்படி வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது.
மக்களின் அடிப்படை தகவல்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது இத்தகைய பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று பலர் கண்டனம் தெரிவித்தனர்.
என்றாலும் மானிய விலை சிலிண்டர் வேண்டும் போதும், வீடு, நிலம் போன்ற ரியல் எஸ்டேட் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனையின் போதும், பங்குச் சந்தையில் பங்கு பரிவர்த்தனைக்கான கணக்கு (டிமேட் அக்கவுண்ட்) தொடங்கும் போதும், வங்கிக் கணக்குகளில் அதிக தொகை டெபாசிட் செய்யப்படும் பொழுதும் PAN எண் அல்லது ஆதார் எண் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.
இதன் மூலம் ஒரு தனிநபருக்கு பல்வேறு வழிகளில் வரும் வருமானத்தை எளிதாக கணக்கீடு செய்ய முடிந்தது. தனிநபர் பல வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்திருப்பார். அதற்கு வட்டி கிடைக்கலாம். சொத்து விற்று வாங்கி லாபம் பெற்றிருப்பார். இதுவரை, இதுபோன்ற வருமானங்களை நம்பகமாக, முழுமையாக கணக்கீடு செய்வதற்கு வழி இல்லாத காரணத்தினால் பலர் வருமான வரி ஏய்ப்பு செய்தனர்.
இப்பொழுது இந்தப் பரிவர்த்தனைகளின் போது PAN எண் கட்டாயமாக்கப்பட்டு விட்டதால், முறையான பரிவர்த்தனைகள் அனைத்தையும் எளிதாக கண்காணிக்க முடிகிறது. அதன் காரணமாக ஒரு தனிநபர் பெரும் பெறும் பல்வேறு வருமானங்களை எளிமையாக கணக்கீடு செய்ய முடிகிறது. மேலும், அவர் வேலைக்கு செல்பவராக இருந்தால் அவருக்கு வழங்கப்படும் ஊதியமும் இதே வழியில் எளிதாக கணக்கீடு செய்யப்படுகிறது.
அதனால் ஒரு தனிநபர் பெறுகின்ற மொத்த வருமானத்தை எளிதாக கணக்கீடு செய்ய முடிகிறது. இதன் காரணமாக ஒட்டு மொத்த வருமானத்திற்கு சட்டப்படியான, சரியான வரியை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு திட்டமிட்டபடி, வருவாய் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக வருமான வரி செலுத்தும் படிவத்திலேயே ஆண்டில் பெற்ற பல்வேறு வருவாய்கள் பற்றிய தகவல்களை இடம்பெறச் செய்வது வரி வசூலிப்பதை மேலும் எளிதாக்குகிறது. ஒரு தனிநபர் வருமானத்தை மறந்து விடக் கூடிய வாய்ப்புகளையும் இது தவிர்க்கிறது. இந்த வகையில் சரியான விவரங்களை வருமான வரித் துறையே கணக்கீடு செய்வது வரி செலுத்துபவர்களுக்கும் உதவிகரமாக இருக்கும். அதனால், திட்டமிட்டபடி வரி வருவாய் கிடைப்பதற்கு அரசுக்கு நல்ல வாய்ப்பு ஏற்படும்.
ஆனால், மாதச் சம்பளம் வாங்குபவர்களிடமிருந்தும், நேர்மையாக வரி கட்டுபவர்களிடமிருந்தும்தான் அரசு மேலும் மேலும் அதிக வரி வசூல் செய்கிறது என்ற உண்மையும் உள்ளது. நாட்டில் என்ன சட்டம் போட்டாலும் பெரும் செல்வந்தர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி வரி ஏய்ப்பு செய்வதையும், வரி கட்டாமல் தவிர்த்த வருவாயை கருப்புப் பணமாக புழங்க விடுவதையும் தடுக்க முடியவில்லை. இவ்வாறு ஆண்டு தோறும் அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் தனிநபர் வருமான வரியும், நிறுவன வருமான வரியும் இழப்பு ஏற்படுகிறது.
தனிநபர் வருமான வரிக்கான உச்சவரம்பு கடந்த பல ஆண்டுகளாக உயர்த்த படாமலேயே இருக்கிறது. மாதம் 20,000 ரூபாய் சம்பளம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அடிப்படையான ஊதியமாக உள்ளது. சரியாக வரி செலுத்துபவர்களுக்கு இந்த உச்ச வரம்பை உயர்த்த வேண்டும், தனிநபர் வருமான வரி சலுகைகள் வழங்க வேண்டும் என்பது நேர்மையாக வரி செலுத்துபவர்களின் கோரிக்கையாக உள்ளது. அனைத்து வகை வருமானங்களையும் கண்காணித்து, வரி வசூலிக்கும் அரசின் இந்த நடவடிக்கையால் மேலும் அதிக வரி ஏற்கனவே நேர்மையாக வரி கட்டும் மக்களிடம் இருந்துதான் வசூலிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
தனிநபர் வருமான வரியையும், கார்ப்பரேட் வருமான வரியையும் கட்டாமல் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கருப்புப் பணத்தை புழங்க விடுபவர்கள், சட்டத்திற்குப் புறம்பாக ஊழல் செய்து பணம் சேர்ப்பவர்கள் போன்றவர்களிடமிருந்து பணத்தை திரும்பப் பெறுவதற்கோ அல்லது அவர்களின் வருமானத்தை முறைப்படுத்துவதற்கோ முடியாத நிலையே தொடர்ந்து நிலவி வருகிறது. வெளிநாட்டில் இருந்து கருப்புப் பணத்தை மீட்போம் என்று கூறிய அரசு உள்நாட்டில் உள்ள கருப்புப் பணத்தைக் கூட இன்னும் முழுமையாக மீட்க முடியாத சூழ்நிலையே நிலவுகிறது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் அரசு கொண்டுவந்துள்ள மாறுதல் அரசுக்கு வரி வருவாயை அதிகரிக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அரசு வரி வருவாயை அதிகரிப்பதற்கு தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்யும் நபர்கள் மீதும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான சட்ட ஓட்டைகளை சரி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் வருமான வரித்துறையின் நடவடிக்கைகளுக்கு முழு பலன் அரசுக்கு கிடைக்கும், திட்டமிட்டபடி அரசின் வரவு செலவுகளை நடத்த முடியும்.
– கட்டுரையாளர் ஐ.டி துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.