ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் இணைய மற்றும் மொபைல் சேவைகளில் கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்ட பல தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, அந்த வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி கடுமையான விதிமுறைகளை விதித்திருப்பதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 2 ஆம் தேதி ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்கு அனுப்பிய உத்தரவில், வாடிக்கையாளர்களுக்கு புது கிரெடிட் கார்டுகளை வழங்கக் கூடாது, டிஜிட்டல் 2.0 எனும் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தவிருந்த டிஜிட்டல் வணிக-வளர்ச்சி நடவடிக்கைகளை இப்போது தொடங்கக் கூடாது, பிற வணிக-வளர்ச்சி தகவல் தொழில்நுட்ப செயலிகளையும் அறிமுகப்படுத்தக் கூடாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நவம்பர் 21 முதல் நவம்பர் 22 வரை, 12 மணி நேரம் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் டிஜிட்டல் சேவைகள் முடங்கியிருந்தது குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் கேட்டதற்கு பிறகு தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அளித்துள்ள பரிந்துரைகளை வைத்து, ஹெச்.டி.எஃப்.சி வங்கி தவறுகளை திருத்திக் கொள்வது திருப்திகரமாக இருந்தால், மேற்சொன்ன தடைகள் நீக்கப்படும் என்று அறிவிக்கப்ப்பட்டிருக்கிறது.
நவம்பர் 21 ஆம் தேதி, வாடிக்கையாளர்கள் கட்டண வாயில்கள் ( payment stack) இயங்கவில்லை என்று சொன்ன போது, தங்களுடைய தகவல் மையங்கள் ஒன்றில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக ஹெச்.டி.எஃப்.சி வங்கி பதிலளித்திருந்தது. இது குறித்து மணி கண்ட்ரோல் (Moneycontrol) தளத்திடம் பேசிய ஹெச்.டி.எஃப்.சி ஊழியர் ஒருவர், “மும்பையின் டி.ஏ.கே.சி (DAKC) எனும் தகவல் மையத்தில் தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டது” என்று கூறியிருக்கிறார். இந்த தகவல் மையத்திற்கு பல வங்கிகள் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டு, டிசம்பர் 3 ஆம் தேதி, இதேபோல் வங்கியின் டிஜிட்டல் சேவைகள் முடங்கியது. மாத தவணைகளையும், கிரெடிட் கார்ட் கட்டணத்தையும் செலுத்த முடியவில்லை என வாடிக்கையாளர்கள் புகாரளித்தனர். சமூக வலைதளங்களில் வங்கியை மக்கள் விமர்சித்தபோது, “தொழில்நுட்ப கோளாறு” ஏற்பட்டதாக வங்கி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
“மக்கள் பணப் பரிமாற்றம் செய்ய முடியாதது பெரிய பிரச்சினையாக இருந்த போது, ஹெச்.டி.எஃப்.சி வங்கி வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை.வங்கியின் பொதுத் தொடர்புதுறை மௌனம் சாதித்தது. ட்விட்டர் வழியே பேசிக்கொண்டிருந்தது” என்று ஆய்வாளர் ஹேமிந்திரா ஹஸாரி ஹெச்.டி.எஃப்.சி-யின் நடத்தை குறித்து அப்போது எழுதியிருந்தார்.
இப்போது, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளினால் வங்கியின் செயல்பாட்டிற்கு எந்த இடையூறும் ஏற்படாது என ஹெச்.டி.எஃப்.சி வங்கி, வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்திருக்கிறது.
“பயன்பாட்டில் இருக்கும் கிரெடிட் கார்டுகளுக்கோ, டிஜிட்டல் வங்கி சேவைகளுக்கோ ஆர்.பி.ஐ-யின் மேற்பார்வை நடவடிக்கைகளால் எந்த பாதிப்பும் வராது. சமீபகாலமாக ஏற்படும் திடீர் முடக்கங்களை சரி செய்ய கவனமாக, தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன” என வங்கி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.