Aran Sei

விவசாயிகள் நிதி உதவித் திட்டம்: தமிழகத்தில் நடந்த ரூ.110 கோடி ஊழல்

பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தில் (பிரதான் மந்திரி கிசான் சம்மான்) நடந்த ரூ.110 கோடி ஊழலை வெளியே கொண்டு வந்திருக்கிறது தமிழக அரசு. தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் தகுதியற்றோர் பலர், அரசு அதிகாரிகளின் உதவியோடு விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்றிருக்கிறார்கள்.

கடலூரில் 100-க் கும் மேற்பட்ட விவசாயிகள் அல்லாதோர் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்றதை ஒட்டி மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட்டபோது இந்த மோசடியின் மீது கவனம் குவிந்தது.

அதிகாரிகளைப் போன்று விவசாயிகளை அழைத்த மோசடியாளர்கள் “கொரோனா நிதி” அளிப்பதாகக் கூறி அவர்களின் விவரங்களை வாங்கியுள்ளார்கள். இவ்வாறாக பயனாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்கள் பெயரைப் பயன்படுத்தி மோசடி நடந்தது தெரியவில்லை.

தரகர்கள் விவசாயத் துறை அதிகாரிகளின் உள்நுழைவு விவரங்களைப் பயன்படுத்தி பயனாளிகள் பற்றிய விவரங்களை கணினியில் பதிவேற்றி இருக்கிறார்கள். இத்திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் ரூ.6000 வழங்கப்படும். அனைத்து பயனாளிகளுக்கும் இந்த ஆண்டு இதுவரை இரண்டு தவணைக்கான பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. இத்தரகர்கள் தாங்கள் பயன்படுத்திய ஒவ்வொரு பயனாளியின் கணக்கிலிருந்தும் ரூ.2000 வரை தங்கள் பங்காக பெற்றிருக்கிறார்கள்.

விவசாயிகள் நிதி உதவித் திட்ட மோசடி வழக்கை CB-CID விசாரிக்கிறது என்றும் இதுவரை இந்த வழக்கில் 16 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஊழலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து இது வரை ரூ.32 கோடி மீட்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

“இந்த ஊழல் பல கோடிகளைத் தாண்டி செல்கிறது” என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். “முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரான சேலத்தில் மட்டும் 10,700 போலி விவசாயிகள் ரூ.4 கோடி வரை பெற்றுள்ளார்கள்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்