கொரோனாவால் ஏற்பட்ட இடையூறு காரணமாக 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலகளாவிய தீவிர வறுமை இந்த தலைமுறையினருக்கு முதன்முறையாக ஏற்படவுள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. மோதல்கள் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆகியவை ஏற்கனவே வறுமையை அதிகரித்துள்ளன என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது .
கொரானா வைரஸ் தொற்றுநோய், மேலும், 8.8 கோடியிலிருந்து 11.5 கோடி மக்களை தீவிர வறுமையில் தள்ளக்கூடும் அல்லது ஒரு நாளைக்கு 1.50 டாலருக்கும் (ரூ.110) குறைவான வருவாயில் வாழ வேண்டியிருக்கும். மொத்தமாக 15 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி தனது இருபது ஆண்டு வறுமை மற்றும் பகிரப்பட்ட செல்வம் என்ற அறிக்கையில் (biennial Poverty and Shared Prosperity Report) தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2020-ம் ஆண்டில் உலகின் 9.1% முதல் 9.4% வரையான மக்கள் கடுமையான வறுமையால் பாதிக்கப்படுவார்கள். இது தொற்றுநோய்யால் பாதிக்கப்படாத பகுதிகளில் 7.9% ஆக உள்ளது.
புதிதாக ஏழை ஆகும் அபாயம் உள்ளவர்கள் அதிக வறுமை விகிதங்களைக் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் (middle income countries – எம்ஐசி) பலர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வருவார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படுபவர்களில் 82% நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
2.7 கோடி – 4 கோடி புதிய ஏழைகளை கொண்ட துணை-சஹாரா ஆப்பிரிக்காவும், 4.9 கோடி – 57 கோடி புதிய ஏழைகளை கொண்ட தெற்காசியாவும் உலக வங்கியின் கணிப்புகளின்படி மோசமாக பாதிக்கப்படும்.
“தொற்றுநோய் மற்றும் உலகளாவிய மந்தநிலை காரணமாக உலக மக்கள் தொகையில் 1.4% க்கும் அதிகமானோர் தீவிர வறுமையில் விழக்கூடும்,” என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.
“அபிவிருத்தி முன்னேற்றம் மற்றும் வறுமைக் குறைப்பின் மூலம் இந்த கடுமையான பின்னடைவை மாற்றியமைக்க மூலதனம், தொழிலாளர், திறன்கள் மற்றும் புதுமைகளை புதிய தொழில்கள் மற்றும் துறைகளில் செல்ல அனுமதிப்பதன் மூலம் அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு பின் வேறுபட்ட பொருளாதாரத்திற்குத் தயாராக வேண்டும். வளரும் நாடுகளுக்கு மீண்டும் வளர்ச்சியைத் தொடங்கவும், கொரோனாவின் சுகாதாரம், சமூக மற்றும் பொருளாதார தாக்கத்திலிருந்து மீளவும் உலக வங்கி குழு உதவும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் தரவுகளின் பற்றாக்குறை
75 வது சுற்றிலிருந்து 2017-18 அகில இந்திய வீட்டு நுகர்வோர் செலவுக் கணக்கெடுப்பு தரவை வெளியிட வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளதால், “தெற்காசியாவில் வறுமையைப் புரிந்து கொள்வதில் இடைவெளி உள்ளது” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
ஆகையால், ‘வலுவான அனுமானங்களின்’ அடிப்படையில் 2017-ம் ஆண்டிற்கான இந்தியாவின் வறுமை எணிக்கையை உலக வங்கி மதிப்பிட்டுள்ளது, அதன்படி இந்தியாவில் “கணிசமான நிச்சயமற்ற நிலை” ஏற்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
உண்மையில், இந்த அறிக்கையில் பல முடிவுகள் முழுமையடையாதவை, அல்லது இந்தியாவிலிருந்து தரவு இல்லாததால் நிச்சயமற்றவையாக உள்ளது. இந்த அறிக்கையின்படி, 68.9 கோடியில் 13.9 கோடி பேர் வறுமையில் வாடியுள்ளார்கள்.
இது குறித்து ‘அரண்செய் ’யுடன்’ பேசிய சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் “உலக வங்கி இதை பற்றி கவலை படுவது போல் கட்டிக்கொள்ளும் ஆனால் அது குறித்து ஒன்றும் செய்யது. உலகம் முழுவதும் உலக வங்கி கொடுத்த ஆலோசனை தான் இன்று அமலாகி வருகிறது. ஏற்கனவே வறுமையில் உள்ள மக்கள் கொரோனா சூழ்நிலை காரணமாக மீண்டும் வறுமையில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்,” என்று கூறினார்.
“உலக வங்கி எப்போது தொழில் செய்வதற்கான எளிமையான வழியை (ease of doing business) குறித்து யோசிக்கிறதே தவிர வாழ்வதற்கான எளிய வழி (ease of living) குறித்து யோசிப்பதில்லை. பொது துறையின் செலவினங்களை குறைக்க வேண்டும் என்று கூறியது அவர்கள் தான். தனியாருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறியது அவர்கள் தான். அணைத்து விதமான மானியங்களையும் ரத்து செய்தது அவர்கள் தான்,” என்றும் மேலும் “உலகமயமாக்கல் கொள்கையை அமல்படுத்துவதின் மூலம் மலர்ச்சி ஏற்படும் என்று கூறினார்கள். ஆனால் தனி மனித வருமானம் குறைந்துள்ளது. அணைத்து வகையிலுமான தனி நபர் நுகர்வும் குறைந்து உள்ளது. இது வளர்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளையும் காலி செய்தது , WTO, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி ஆகியவை தான்,” என்றும் கூறினார்.
கடந்த 30 ஆண்டுகளாகவே இந்தியாவும் உலக வங்கி ,IMF ஆகிய சர்வதேச நிறுவனங்களிடம் கடன்களைப் பெற்று அவற்றின் ஆலோசனைகளை பின்பற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.