Aran Sei

“எலியைப் பிடிக்க மலையைக் குடைவதா?” – ப.சிதம்பரம்

 “சமீபத்தில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அறிவித்திருக்கும் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள், மக்களை நம்ப வைக்கும் மற்றொரு நயவஞ்சக முயற்சி, எலியைப் பிடிக்க மலையைக் குடைவது போன்றது” என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் திங்கள் (செப்.14) அன்று,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். “மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் பண்டிகைக்கால முன்பணமாக ரூ.10 ஆயிரம் வட்டியில்லாமல், ரூபே ப்ரீபெய்ட் கார்டில் வழங்கப்படும்.

இந்த கார்டில் உள்ள தொகையை 2021, மார்ச் 31-ம் தேதி வரை செலவு செய்ய முடியும். இந்த ரூ.10 ஆயிரத்தை ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்குப் பிடித்தம் செய்யப்படும். இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.4 ஆயிரம் கோடி செலவிடுகிறது.” என்று கூறினார்.

மேலும், “நாட்டின் பொருளாதாரத்தில் தேவையைத் தூண்டும் வகையிலும், நுகர்வோரின் செலவு செய்யும் பழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்தப் பண்டிகைக்கால முன்பணம் வழங்கப்படுகிறது.” என்றார்.

இந்நிலையில், நேற்று இணையவழிப் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ப.சிதம்பரம், திங்கள் அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த திட்டங்கள் எல்லாம், ‘எலியைப் பிடிக்க மலையைக் குடைவது போலானது’, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான ஆத்ம நிர்பர் திட்டம் ஒரு ஏமாற்று வேலை என்றார். மேலும் என்ன வாங்க வேண்டும், எப்போது வாங்க வேண்டும் என்று பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சொல்வது போல, பாஜக அரசு  ஊழியர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறது” என்று கருத்து தெரிவித்தார்.

”இந்த அறிவிப்புகளில் உள்ள திட்டங்கள் எதுவுமே நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தாது. இது மக்களை ஏமாற்றுவதற்கான நயவஞ்சக முயற்சி மட்டுமே. மக்களின் தேவைகளையும் பொருளாதாரத்தையும் உயர்த்த அரசாங்கம் உழைக்கிறது என்று மக்களை நம்ப வைக்கும் வேலை. இந்த அறிவிப்புகளைக் கொடுப்பதன் மூலம், முன்னர் அறிவிக்கப்பட்ட, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான ஆத்ம நிர்பர் திட்டம் ஒரு பெரிய தோல்வி என்பதை வெளிப்படையாக மத்திய அரசு ஒத்துக்கொண்டுள்ளது. ஏனென்றால், அந்தத் திட்டமும் ஒரு ஏமாற்று வேலைதான்.” என்று கூறினார்.

”என்ன சாப்பிட வேண்டும், எதை அணிய வேண்டும், என்ன மொழி பேச வேண்டும், யாரைக் காதலிக்க வேண்டும், யாரை மணக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த பாஜக அரசு இப்போது, மக்கள் எதற்குச் செலவு செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கத் தொடங்கிவிட்டது. மக்களின் சொந்த வாழ்க்கையில் இப்படி விதிகளைப் போடுவது, பிற்போக்கான நடவடிக்கைதான்.” என்று மத்திய அரசைத் தாக்கினார்.

இந்தத் திட்டங்களால், நுகர்வோரின் செலவு செய்யும் பழக்கம் அதிகரித்து, ரூ.73,000 கோடி மதிப்பிலான பொருளாதாரத் தேவை சந்தையில் உருவாகும் என்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பைப் பற்றிப் பேசும்போது, “இந்த ரூ.73,000 கோடி கணக்கே ஒரு ஏமாற்று வேலைதான். ரூ.1 லட்சம் கோடி என்று சொல்லப்பட்ட மற்றொரு கணக்கும் ஏமாற்று வேலைதான். இந்த அறிவிப்புகளினால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.1% மட்டுமே பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளார்கள்.” என்றார்.

மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் தாக்கத்தைப் பற்றிப் பேசும் போது, “தற்போதைய சூழலில் பணத் தேவை மிகுதியாக உள்ள மக்கள் மீண்டும் நடுத்தெருவில் விடப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அடித்தட்டில் இருப்பவர்கள். அரசின் இந்தத் திட்டங்களால், 2020-21 காலகட்டத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படப்போகும் 10 சதவீத வீழ்ச்சியை, இந்த மக்கள் பார்க்கப் போகிறார்கள்.” என்கிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்