Aran Sei

‘ஜிஎஸ்டியால் மாநிலத்திற்கு நிரந்தர வருமானம் என்று நம்பியது பொய்யாய் போனது’ – ஓ.பன்னீர்செல்வம்

மிழகத்துக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.19 ஆயிரத்து 591 கோடியே 63 லட்சத்தை விரைவாக வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (ஜனவரி 18) மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்படுவதை முன்னிட்டு, மாநில நிதியமைச்சர்களுடன் காணொலி வாயிலாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு : பொருளாதார மறுமலர்ச்சியல்ல – பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்

அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், “2021-22-ம் ஆண்டில் நிதி சீர்திருத்தத்துக்கு இதுவரை சரியான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிதிநிலை படிப்படியாக சரியும் என்பதால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் வரை கடன் வாங்க மாநில அரசுகளுக்கு அனுமதியளிக்க வேண்டும். இதுதவிர, கொரோனா தடுப்புநடவடிக்கைக்கான செலவினங்களை மேற்கொள்ளவும் அனுமதியளிக்க வேண்டும்.” என்று கோரியுள்ளதாக இந்து தமிழ் விசை செய்தி வெளியிட்டுள்ளது.

“ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட முதல் 5 ஆண்டு இழப்பீடு காலம்2021-22 நிதியாண்டுடன் முடிவடைகிறது. ஜிஎஸ்டியால் நீண்ட காலத்துக்கு நிலையான வருவாய் கிடைக்கும் என்ற அடிப்படையில் தான் மாநிலங்கள் ஜிஎஸ்டியில் இணைந்தன. ஆனால், அந்த எதிர்பார்ப்பு பொய்யானது. தெளிவான வருவாய் வளர்ச்சிக்கான காரணங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இழப்பீடு குளறுபடியில் ஜிஎஸ்டி கவுன்சில் – கூட்டாட்சி தத்துவத்துக்கு பின்னடைவு

இதுபோன்ற சிக்கலான காலத்தில் மாநில அரசுகளின் வருவாய் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் இழப்பீட்டை தொடர்வது உள்ளிட்ட மாற்று வழிமுறைகள், கூடுதல்வரிவிதிப்பு அதிகாரம் அளித்தல் ஆகியவை ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிக்கப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளதாக இந்து தமிழ் விசை தெரிவித்துள்ளது.

மேலும், “செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களை அடிப்படை வரியில் இணைப்பதன் மூலம், மாநிலங்களும் கூடுதல்வருவாய் பங்கை பெற முடியும். வரும் 2021-22-ம் ஆண்டில் 15-வது நிதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ள மானியங்களை விரைவாக எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி வழங்க வேண்டும். முந்தைய 14-ம் நிதி ஆணையம் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிந்துரைத்த ரூ.2 ஆயிரத்து 577 கோடியே 98 லட்சம் மானிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.” என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

ஜிஎஸ்டி இழப்பீடு: மாநிலங்களின் அரசமைப்புச் சட்ட உரிமை

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை பற்றி குறிப்பிடுகையில், “காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு நிதி கோரப்பட்டுள்ளது. நடந்தாய் வாழி காவிரி திட்டத்துக்கு விரைவில் அனுமதியளிக்க வேண்டும். கிருஷ்ணகிரி நீர்த்தேக்க கால்வாய், வைகை ஆறு, கோதையாறு திட்டங்களுக்கு ரூ.730 கோடியே 5 லட்சம் நிதி தேவைப்படுகிறது. இத்திட்டத்துக்கு அனுமதியளிப்பதுடன், மத்திய நிதிநிலை அறிக்கையில் தேவையான நிதியும் ஒதுக்கவேண்டும்.” என்று ஓ.பன்னீர்செல்வம் கோரியுள்ளார்.

ஜிஎஸ்டி இழப்பீடு: தணிக்கை அமைப்பு கூறுவதென்ன?

மேலும், ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா, ஊரக கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, வேளாண் விற்பனை கட்டமைப்பு நிதி, பால்பதப்படுத்தல், கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, மீன்வள கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ஆகியவற்றுக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளதாக இந்து தமிழ் விசை தெரிவித்துள்ளது.

“தமிழகத்துக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.19 ஆயிரத்து591 கோடியே 63 லட்சத்தை விரைவாக வழங்க வேண்டும். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கான நிதியை ரூ.4 லட்சமாக உயர்த்தவேண்டும். முதியோர் உதவித்தொகையை மாதம் ரூ.1,000 என உயர்த்தி, அதற்கு போதிய நிதியைபட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்.” என்று ஓ.பன்னீர்செல்வம் கோரியுள்ளார்.

சுவாமிநாதன் குழு அறிக்கையை செயல்படுத்தியதா மோடி அரசு? – உண்மை நிலவரம்

மத்திய அரசிடம் இருந்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகை பெறுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் ஜிஎஸ்டி தொகை நமக்கு வந்துவிட்டது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்