Aran Sei

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு : 8 எம்.பி.க்கள் இடைநீக்கம்

Credits: Indianexpress.com

வேளாண்மை தொடர்பான மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியிலும் என நாடு முழுவதும் இம்மசோதாக்களுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் பிரதமர் மோடி இந்த மசோதாக்கள் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு உதவும் என்று பதிவிட்டுள்ளார்.

வேளாண் விளைபொருள் மற்றும் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதா ஆகிய மூன்றும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பஞ்சாபில் பா.ஜ.கவோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் பாதல் மசோதக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகியுள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மாநிலங்களவையில் வேளாண் விளைபொருள் மற்றும் வர்த்தக மசோதா இரண்டையும் தாக்கல் செய்து , “விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும்” என்று பேசினார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிங் பஜ்வா, “இப்போது இந்த சட்டங்களை உடனடியாக கொண்டுவர என்ன தேவை இருக்கிறது? விவசாயிகளின் கழுத்தை நெரிக்கும் இந்த மசோதாக்களுக்கு நாங்கள் ஒப்புதல் அளிக்க மாட்டோம்.” எனக் கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் டெரிக்.ஓ.பிரையன் “விவசாயிகளின் வருமானம் 2022-க்குள் இரட்டிப்பாகும் என்று உறுதியளித்தீர்கள், ஆனால் தற்போதைய சூழலில் 2028-ம் ஆண்டிலும் கூட அது இரட்டிப்பாகாது.” என்றார்.

விவாதத்தின்போது மசோதாக்கள் விவசாயிகள் நலனுக்கு எதிராகவும், குறைந்தபட்ச ஆதரவு விலையினை ரத்து செய்யும் வகையிலும் இருப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்பில் ஒலி முற்றிலுமாக தடைபட்டது. சில உறுப்பினர்கள் துணத்தலைவ்ர் மேசை அருகே சென்று மைக்கினை நெருங்கினர். எம்.பி. டெரிக் ஓ பிரைன் திடீரென அவைத் தலைவரின் இருக்கை பகுதிக்கு சென்று அவையின் விதிமுறையை அவர்முன் நீட்டிக் காட்டினார். அவைத்தலைவரின் உதவியாளர் அவரை தடுக்க முற்பட்டார்.

நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக துணை அவைத்தலைவர் ஹரிவன்ஸ் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுப்பரவலைத் தடுக்க அவையை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டியிருப்பதால் அவை ஒத்திவைக்கப்படுவதாகவும் ஹரிவன்ஸ் அறிவித்தார்.

தொடர்ந்து, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ’இது நாடாளுமன்றத்தின் கருப்பு நாள்.’ என முழக்கமிட்டு அவையின் மையத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

மசோதாக்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி  ட்விட்டரில் “இந்திய விவசாயிகள் பல ஆண்டுகளாக இடைத் தரகர்களின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகி வந்தார்கள். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாக்கள் விவசாயிகளை துன்பங்களில் இருந்து விடுவித்துள்ளது.” என கூறியுள்ளார்.

”விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவும், அவர்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் செழிப்பு ஏற்படவும் இந்த மசோதாக்கள் உத்வேகம் அளிக்கும்.” எனவும் மோடி பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக்.ஓ.பிரையன் ட்விட்டரில் “அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள். நாடாளுமன்றத்தில் எல்லா விதிகளையும் தகர்த்து உடைத்திருக்கிறார்கள். நேரடி ஒளிபரப்பை ரத்து செய்து இதை இருட்டடிப்பு செய்துள்ளார்கள். எங்களிடம் ஆதாரம் உள்ளது.“ என பதிவிட்டுள்ளார்.

 

தி,மு,க நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், “இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் குறைகளை காது கொடுத்து கேட்க அரசு தரப்பு தயாராக இல்லை. ஆனால், சபைக்கு உள்ளே, விவசாயிகளுக்கு உதவப் போவதாக பேசுகிறீர்கள்.” என குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக்.ஓ.பிரையன், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்ட 8 எம்.பி.க்கள் அவையில் அத்துமீறி செயல்பட்டதாக ஒருவாரம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று அறிவித்துள்ளார்.

வேளாண் தொடர்பான மசோதாக்கள் குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் இன்று நடைபெறுகிறது.

ஹரியானா, பஞ்சாப், மேற்கு உத்திரபிரதேச விவசாயிகளைத் தொடர்ந்து, தமிழக விவசாயிகளும் மசோதாக்களை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்