Aran Sei

வெங்காய ஏற்றுமதிக்குத் தடை – போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

Image Credits: Live Mint

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, இப்போது வெங்காய விலை மும்மடங்கு அதிகரித்துள்ளதால், இந்திய அரசு அனைத்து வகையான வெங்காய ஏற்றுமதிக்கும் தடை விதித்துள்ளது.

பெரும்பான்மையாக வெங்காயம் பயன்படுத்தும் வங்கதேசம், நேபாளம், மலேசியா மற்றும் இலங்கை போன்ற தெற்காசிய நாடுகள், இந்தியாவின் ஏற்றுமதியைத்தான் நம்பி இருக்கின்றன.

இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய வர்த்தக மையமான மகாராஷ்டிராவில் உள்ள லசல்கானில் ஒரு டன் வெங்காயத்தின் விலை ரூ. 30,000 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ச்சியாக வெங்காய விலை உயர்ந்துவரும் நிலையில், கடந்த ஏப்ரல்-ஜூலை மாதத்தில் வங்கதேசத்துக்கான வெங்காய ஏற்றுமதி மட்டும் 158 சதவீதம் அதிகரித்தது.

புள்ளிவிவர அமைச்சகம் வெளியிட்ட நுகர்வோர் விலை குறியீட்டு எண் (CPI) இந்த தடை விதிக்க ஒரு காரணமாக அமைந்துள்ளது. கடந்த மாதம் 6.73 சதவிகிதமாக இருந்த பணவீக்கம் சற்று குறைந்து தற்போது 6.69 சதவிகிதமாக இருந்தாலும், இது ரிசர்வ் வங்கியின் இலக்கான 6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.

விவசாயிகள் எதிர்ப்பு

தற்போது மகாராஷ்டிராவின் லாசல்கான் மற்றும் நாசிக்-ஐ சேர்ந்த விவசாயிகள் வெங்காய ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்கக் கோரி போராடி வருகிறார்கள்.

மும்பையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.35-ஐ எட்டிய போதிலும், வெங்காய உற்பத்தி மையமான லாசல்கானில் ஒரு குவிண்டால் உயர்தர வெங்காயத்தின் விலை ரூ. 3,200 ஆகவும், அதற்கு அடுத்த தர வெங்காயத்தின் விலை ரூ. 2,800 ஆகவும், கடைசி தர வெங்காயத்தின் விலை ரூ. 1,100 ஆகவும் உள்ளது. ஆகையால் இந்திய அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லாசல்கான் வெங்காய வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த ஏற்றுமதி தடையால் விலைவாசி கட்டுக்குள் வரும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இருப்பினும், உற்பத்தி தட்டுப்பாட்டால் ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் விலைவாசி அதிகரிக்கும் என்று வெங்காய வணிகர்கள் கருதுகிறார்கள்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்