Aran Sei

‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ வரவேற்கப்பட வேண்டிய திட்டம்

‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை அக் 1-ம் தேதி தமிழ்நாட்டில் துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி. வேலை நிமித்தமாக வேறு மாநிலங்களுக்கு இடம் பெயரும் தொழிலாளர்கள் இந்திய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்தந்த மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்பதே இத்திட்டம். ஏற்கனவே குஜராத், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களைச் சேர்ந்த ஒருவர் திட்டம் நடைமுறையில் உள்ள எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். இது போன்று வேற்று மாநிலத்தைச் சேர்ந்த பயனாளி, மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மட்டுமே உணவுப் பொருட்களைப் பெற முடியும். அதன்படி, அரிசி கிலோ மூன்று ரூபாய்க்கும், கோதுமை கிலோ ஐந்து ரூபாய்க்கும் பெற முடியும். அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநில மக்களுக்கு வழங்கும் நலத்திட்டங்களையோ, இலவச உணவுப் பொருட்களையோ பெற முடியாது.

அந்தந்த மாநிலங்களில் வசிப்பவர்கள், எந்த மாறுதலும் இல்லாமல் மாநில அரசின் திட்டப்படி உணவுப்பொருட்களை, மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். இது போன்ற பல அம்சங்களைக் கொண்ட திட்டமாக ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் இருக்கிறது.

“உண்மையில் இது நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டால் அருமையான திட்டம். கடைநிலை மக்கள்தான் பிழைப்புத்தேடி புலம் பெயர்ந்து போகிறார்கள். அப்படி அவர்கள் போகிற மாநிலத்திலேயே அவர்களுக்கான உணவுப் பொருட்களை வழங்குவது நல்ல திட்டம். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் மிகவும் பயனடைவார்கள். யாரைத்தொட வேண்டுமோ அவர்களைத் தொடும் திட்டமாக இது இருப்பதில் எந்த சந்தேகமுமில்லை.” என்கிறார் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்.

நல்ல திட்டம் என்றாலும் இதன் நடைமுறைச் சாத்தியங்கள் குறித்து பல கேள்விகளும் இருக்கின்றன என்கிறார் ஜெயரஞ்சன்.

“இத்திட்டத்தை பொறுத்தவரை பிஓஎஸ் இயந்திரம் மிக முக்கியம். இணையம் மூலம் இயங்கும் அந்த இயந்திரத்துக்கு முறையாக நெட்வொர்க் வேலை செய்ய வேண்டும். வேற்று மாநிலங்களிலிருந்து குடும்பத்தோடு வருகிறவர்களுக்குதான் இது கிடைக்குமா? தனி நபராக வந்தவர் எவ்வகையில் பெறலாம் என்பது போன்ற பல கேள்விகள் இருக்கின்றன. இது போன்ற நடைமுறைச் சிக்கல்களையெல்லாம் களைந்து விட்டால் இது ஆகச்சிறந்த திட்டம்” என்கிறார் ஜெயரஞ்சன்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்