Aran Sei

கொரோனா பரவல் : தள்ளாடும் உலக எரிபொருள் சந்தை

photo credit: uwidata.com

கொரோனா தொற்று உருவாக்கிய நெருக்கடியிலிருந்து உலகப் பொருளாதாரம் முழுமையாக மீட்சி அடையாததால் கச்சா எண்ணெயின் வேண்டல் 2021-ம் ஆண்டு வரையில் மந்தமாக இருக்கும் என்று பன்னாட்டு ஆற்றல் முகமை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

உலக எரிபொருள் சந்தை பற்றிய தரவுகளையும் பகுப்பாய்வுகளையும் எண்ணெய் சந்தை அறிக்கை (Oil Market Report) ஆதாரப்பூர்வமாக வழங்குகிறது. பாரிசை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு எரிசக்தி முகமை (International Energy Agency) இந்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

இந்த மாதம் வெளியாகியுள்ள அறிக்கை, உலகம் முழுவதிலும் எரிபொருளுக்கான தேவை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று தெரிவிக்கிறது.

பல நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகமாக பரவுதல், அதைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ளூர் மட்டங்களில் மேற்கொள்ளப்படுகிற பொது முடக்க நடவடிக்கை, வீட்டிலிருந்தே அலுவலக பணிகள் செய்தல் மற்றும் விமானப் போக்குவரத்து துறையில் நிலவும் மந்தமான தேவை ஆகிய காரணங்களினால் இந்த ஆண்டு எரிபொருளின் தேவை மந்தமாக இருக்கும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

எரிபொருளுக்கான தேவை 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020-ம் ஆண்டில் நாளொன்றுக்கு 84 லட்சம் பீப்பாய்கள் குறைந்துள்ளது என்றும் இது 2020-ம் ஆண்டில் எரிபொருள் தேவை நாளொன்றுக்கு 81 லட்சம் பீப்பாய்களக இருக்கும் என்ற பழைய கணிப்பை காட்டிலும் அதிகமாகும்.

எரிபொருளுக்கான தேவை 2021-ம் ஆண்டில் நாளொன்றுக்கு 55 லட்சம் பீப்பாய்கள் அளவுக்கு அதிகரிக்கும் என்றும் சீனாவில் எரிபொருளுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருவதாகவும் இந்தியாவில் இந்தப் போக்கின் வேகம் குறைவாக இருப்பதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

அமெரிக்காவில் சூறாவளி காரணத்தினால் சுத்திகரிப்பு ஆலைகள் தற்காலிகமாக மூடப்படுதல், வளைகுடா மற்றும் பிற நாடுகளில் பராமரிப்பு பணிகளுக்காக சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்படுதல் போன்ற காரணங்களினால் உலகளவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்ய்படுகின்ற அளவு 2020-ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலத்தில் குறைந்துள்ளது என்று அறிக்கை  குறிப்பிடுகிறது.

கொரோனா தொற்று உருவாக்கியுள்ள நிச்சயமற்றதன்மை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் தொற்றினால் புதிதாக பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் நிலைமையில் சற்றே முன்னேற்றம் இருந்தாலும் எரிபொருளுக்கான தேவை உடனடியாக அதிகரிக்காது என்று அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஏப்ரல் மாதத்திலிருந்தே எரிப்பொருளுக்கான தேவை வீழ்ச்சியடைந்து வந்தாலும் ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றினால் மேற்கொள்ளப்பட்ட பொது முடக்கம் காரணமாக 2020-ம் ஆண்டில் எரிபொருளின் தேவை நாளொன்றுக்கு 91.7 லட்சமாக குறைந்துள்ளது. இது 2013-ம் ஆண்டில் இருந்த அளவுக்கு சமமாகும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

மேற்கத்திய நாடுகளில் விரைவில் குளிர்காலம் வரவிருக்கின்ற நிலையில் கச்சா எண்ணெய்க்கான தேவை என்னவாக மாறும் என்பது தெளிவாக தெரியவில்லை என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்