செப்டம்பர் மாத இறுதியில், இந்திய வங்கிகளின் மொத்த கடனில், வாரா கடனின் விகிதம் 14.8 சதவீதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை, வாராக்கடனின் விகிதம் 7.5 சதவீதமாக இருந்தது.
குறைந்தபட்சம் 13.5 சதவீதத்திலிருந்து அதிகபட்சமாக 14.8 சதவீதம் வரை, வாராக்கடனின் விகிதம் உயரும் என்று திங்கட்கிழமையன்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதி நிலைத்தன்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணிப்பு சரியாக இருக்குமானால், கடந்த 20 ஆண்டுகளில் வாராக்கடனின் விகிதத்தில் இதுவே அதிகமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1996ஆம் ஆண்டு, இந்திய வங்கிகளில் வாராக்கடனின் விகிதம் 16 சதவீதமாக உயர்ந்திருந்தது. அதுவே இதுவரை அதிகமான உயர்வாக இருந்துவரும் நிலையில், வரும் செப்டம்பர் மாதம் அதற்கு நெருக்கமாக வாராக்கடன் விகிதம் உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த வாராக்கடன் விகிதம், பொதுத்துறை வங்கிகளில் அதிகமாகவும், தனியார் வங்கிகளில் குறைவாகவும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் கடந்த செப்டம்பர் மாதம், மொத்த வாராக்கடனின் (Gross NPA) விகிதம் 9.7 சதவீதமாக இருந்தது. அது அடுத்த செப்டம்பரில் 16.2 சதவீதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதேபோல், தனியார் வங்கிகளில் 4.6 சதவீதத்திலிருந்து 7.9 சதவீதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
இருந்தபோதும், மாறி வரும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப, இந்தக் கணிப்பில் மாற்றம் இருக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.