Aran Sei

`பஞ்சத்தின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்’- நோபல் பரிசு பெற்றவர் கோரிக்கை

Credits Reuters

உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லி, பஞ்சத்திலிருந்து பலகோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்ற உதவ வேண்டுமென உலகின் கோடீஸ்வரர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ள ஐக்கிய நாடுகளின் ‘உலக உணவு திட்டம்’ என்ற அமைப்பின் தலைவர், கோடிக்கணக்கிலான உலக மக்களைப் பசியின் கொடுமையில் இருந்து காப்பதற்காக உலகப் பணக்காரர்கள் சில நூறு கோடிகள் நன்கொடை வழங்க முன்வர வேண்டும் என்று கோரியுள்ளார்.

கொரோனா பேரிடர்ச் சூழலால், பட்டினியின் விளிம்பில் உள்ள மக்களின் எண்ணிக்கை 135 கோடியிலிருந்து 270 கோடியாக அதிகரித்துள்ளது எனவும் டேவிட் பீஸ்லி குறிப்பிட்டுள்ளார்.

“மனிதகுலம் உதவியை நாடி நிற்கிறது. இதுவரை அளித்திராத வகையிலான உதவியைச் செய்வதற்கு உலக கோடீஸ்வரர்கள் முன்வர வேண்டும்.” என அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் செய்தியாளர் காணொலிக் கூட்டத்தில் பேசுகையில், கொரோனா பேரிடர்ச் சூழலின்போது 2,200 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு சுமார் 2 ட்ரில்லியன் டாலர்கள் வரை அதிகரித்துள்ளதாகக் கூறியிருக்கிறார்.

கடந்த வாரம் சுவிஸ் வங்கி மற்றும் கணக்கியல் நிறுவனமான PWC வெளியிட்டுள்ள ஆய்வினை மேற்கோள் காட்டி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் 8 டிரில்லியன் டாலராக இருந்த உலக கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பு ஜூலை மாதத்தில் 10.2 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

“கோடிக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றவும், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உருவாகியுள்ள இந்த மிகப்பெரிய பேரழிவில் இருந்து மனிதகுலத்தைக் காப்பாற்றவும் சில நூறு கோடிகள் தேவைப்படுகிறது.” என்று டேவிட் கூறியுள்ளார்.

அவர் குறிப்பிடும் கோடீஸ்வரர்கள் பெயர்களைக் கேட்ட போது டேவிட், “நான் அந்தக் கூட்டத்தினரோடு பழகியது இல்லை. நான் பட்டினியால் சாவின் விளிம்பில் இருக்கும் மக்களுடன் இருப்பவன்,” என்று பதிலளித்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவைக் கணக்கில் கொள்ளாமல் பட்ஜெட் திட்டமிடப்பட்டது என்பதால் 2021-ம் ஆண்டு குறித்து உலக உணவு திட்ட அமைப்பு மிகவும் கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் 8 ட்ரில்லியன் மதிப்பிலான கடன் தொகைகள் ஜனவரி 2021 வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

”வளர்ந்து வரும் நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், சொந்த நாட்டில் உள்ள குடும்பங்களுக்குப் பணம் அனுப்புவது குறைந்துவிட்டது. பொதுமுடக்கத்தினாலும் பொருளாதாரம் மோசமடைந்துள்ளது.” என டேவிட் குறிப்பிட்டுள்ளார்.

“யெமென் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது. ஆப்பிரிக்காவில் சஹெல், காங்கோ, சிரியா போன்ற நாடுகளும் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளன. நைஜீரியா, தெற்கு சூடான், எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.” எனக் கூறியுள்ளார்.

இது மிகவும் அபாயகரமான சூழல் என்பதைக் குறிப்பிட்டுத் தேவையான ஆதரவு கிடைக்கவில்லை என்றால் பல நாடுகள் பஞ்சத்தில் உழலும் என்றும், ஆதரவு கிடைத்தால் நம்மால் பஞ்சத்தைத் தவிர்க்க முடியும் எனவும் டேவிட் பீஸ்லி எச்சரித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்