Aran Sei

பொருளாதார நெருக்கடி, சிக்கன நடவடிக்கை கூடாது : ஐ.நா

credit: cpmmondreams.org

கொரோனா ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு வளரும் நாடுகளின் அரசுகள் இந்த ஆண்டு நிதி பற்றாக்குறையை பற்றி கவலை கொள்ளாமல் தாரளமாக செலவு செய்யும்படி ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு அமைப்பு (UNCTAD) அறிவுறுத்தியுள்ளது.

UNCTAD சென்ற திங்கள் அன்று 2020-ம் ஆண்டுக்கான வர்த்தகம் மற்றும் மேம்பாடு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

“உலகப் பொருளாதாரம் 2020-ம் ஆண்டில் 4.3 விழுக்காடு அளவுக்கு சுருங்கும் என்றும் உலக நாடுகளின் மொத்த உற்பத்தி $6 லட்சம் கோடி அளவுக்கு குறையலாம்” என்று இந்த அறிக்கை மதிப்பிடுகிறது.

“சுருக்கமாக சொல்வதென்றால், $6 லட்சம் கோடி என்பது இந்தியா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகிய நாட்டு பொருளாதாரங்களின் ஜிடிபி-களை கூட்டினால் வரக்கூடிய தொகை.”

“இந்த ஆண்டு பன்னாட்டு வர்த்தகம் ஐந்தில் ஒரு பங்கு குறையும் என்றும் அந்நிய நேரடி முதலீடுகள் 40 விழுக்காடு அளவுக்கு குறையும்” என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

“இந்தியப் பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 23.9 விழுக்காடு சுருங்கியுள்ள நிலையில், முழு ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி ஒட்டுமொத்தமாக 5.9 விழுக்காடு அளவுக்கு சுருங்கும். பொருளாதார சுருக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் வருமான இழப்புகள் நிரந்தரமான இழப்புகளாக மாறும்.”

“கொரோனா உருவாக்கியுள்ள உலகப் பொருளாதார நெருக்கடியானது, ஒன்று பழைய தவறான கொள்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளுதல் அல்லது 2030-ம் ஆண்டு அடைய வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்ட நீடித்துநிலைக்கக்கூடிய வளர்ச்சியை அதாவது நெருக்கடியை தாங்கக் கூடிய, இன்னும் சமத்துவமான மற்றும் சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்காத வளர்ச்சியை அடைதல் என்ற இரு தேர்வுகளை உலக நாடுகள் முன்வைத்துள்ளது.”

“உலக நாடுகள் இன்று சந்திக்கும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு அரசு செலவினங்களை அதிகப்படுத்த வேண்டும்” என்றும் “அனைவருக்குமான அடிப்படை வருமானம் (universal basic income) வழிமுறை நல்ல யோசனையாக இருக்கும்” என்று UNCTAD இயக்குநர் ரிச்சரட் கொசுல்-ரைட் தெரிவித்துள்ளார்.

வளர்ந்த நாடுகள் கொரோனா ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார பிரச்சனையை தீர்க்கமான முறையில் எதிர்க்கொண்டிருப்பதாகவும் ஆனால் அதே தீர்க்கத்தை பன்னாட்டளவில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை எதிர்கொள்வதில் அவை காண்பிக்கவில்லை என்று இங்கிலாந்தின் பன்னாட்டு மேம்பாட்டு துறையின் முன்னாள் உயர் அதிகாரி சர். மார்க் லோகாக் தெரிவித்துள்ளதாக தி கார்டியன் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

“உலகத்தில் உள்ள நிலைத்தன்மையற்ற நாடுகளில் பசிபிணியால் வாடுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும், மனிதர்களின் ஆயுள் காலம் குறையும், பள்ளியிலிருந்து இடைநின்று விட்ட சிறுவர்/சிறுமியர் மீண்டும் பள்ளிக்கு திரும்பவே முடியாமல் போகலாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இது உலகத்தில் நிலையற்ற தன்மையையும் மோதல்களையும் அதிகரித்து பயங்கரவாத அமைப்புகள் தலைதூக்குவதற்கு காரணமாக அமையலாம்” என்று லோகாக் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்