Aran Sei

பெட்ரோல், டீசல் விலை – ” ஜிஎஸ்டி தொடர்பான கேள்விகள் நிதி அமைச்சகத்துடன் தொடர்பில்லாதவை” : நிர்மலா சீதாராமன்

image credit : thehindu.com

த்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-ம் ஆண்டுக்கான நிதி மசோதா மீது 127 திருத்தங்களைக் கொண்டு வந்தார் என்றும் அவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டன என்றும் தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சென்ற பிப்ரவரி 1-ம் தேதி, 2021-22-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர், நிதி மசோதா 2021-ஐயும் மக்களவையில் தாக்கல் செய்திருந்தார். அதன் மீதான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றன.

நிதி மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தின் மக்களவை மட்டும் ஒப்புதல் அளித்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களவையில் விவாதங்கள் நடைபெற்றாலும் அதன் ஒப்புதல் நிதி மசோதாக்களுக்கு அவசியமில்லை.

மத்திய அரசின் பட்ஜட்: இந்திய மக்களுக்கு சொல்லும் சேதி என்ன?

இப்போது அறிமுகப்படுத்திய திருத்தங்களில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்காக உருவாக்கப்படவிருக்கும் நிதி நிறுவனத்துக்கு வருமான வரி விலக்கு அளிப்பது ஊழியர்களின் சேமநல நிதி சேமிப்பின் மீதான வரி விதிப்பு தொடர்பான திருத்தம் ஆகியவை அடங்கும்.

பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் மற்றும் சில பொருட்கள் மீது “விவசாய உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதிக்கான கூடுதல் வரி” விதிக்கப்பட்டதை அவர் நியாயப்படுத்தியுள்ளார். இந்த நிதி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாது என்றாலும், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாய மண்டிகள் முதலானவற்றை மேம்படுத்தத்தான் அந்த நிதி பயன்படும் என்பதால், அந்த கூடுதல் வரி மாநில அரசுகளுக்குத்தான் சென்று சேரும் என்று கூறியுள்ளார்.

மத்திய அரசு விதிக்கும் கலால் வரி, வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றில் மாநில அரசுகளுக்கான பகுதி பிரித்து அனுப்பப்படும். ஆனால், கூடுதல் வரியாக விதிக்கும் தொகை அப்படி பிரிக்கப்படாமல் மத்திய அரசின் கணக்கிலேயே முழுவதுமாக சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுக்கு ரூ 2.5 லட்சத்துக்கு மேல் சேமநிதியத்தில் சேமிக்கப்படும் தொகைக்கு வரி விதிக்கப்படும் என்பதில் ஒரு சிறு திருத்தம் செய்து, சேமநிதி கணக்கில் நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாத நிலையில் மட்டும் இந்த வரம்பு ரூ 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு அதிகமாக இருப்பது குறித்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளைப் பற்றி கூறுகையில், மாநிலங்கள் அடுத்த ஜிஎஸ்டி மன்றத்தில் இந்தக் கேள்வியை எழுப்பினால் அது பற்றி விவாதிக்க தான் தயாராக இருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை – அரசுக்கு வருவாய் இழப்பில்லாமல் லிட்டருக்கு ரூ 8.5 வரி குறைக்க முடியும்

“நிதி அமைச்சரின் முன் வைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான கேள்விகள் நிதி அமைச்சகத்தோடு தொடர்பில்லாதவை. அவை மாநிலங்களும் உறுப்பினர்களாக இருக்கும் ஜிஎஸ்டி மன்றம் தொடர்பானவை. அது ஒரு கூட்டு முடிவு, மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் நடக்காது”

என்று நிர்மலா சீதாராமன் சுட்டிக் காட்டியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்