Aran Sei

‘ரூ.28,200 மதிப்புள்ள ஒரேயொரு ஸ்கூட்டர்’ – நிர்மலா சீதாராமன்

credit : scroll.in

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பை பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் மோடியின் நிகரச் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மோடியின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களும் தங்களது சொத்து மதிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

ஜூன் 30 வரை, பிரதமர் மோடியின் நிகரச் சொத்து மதிப்பு ரூபாய் 36 லட்சம் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு ரூபாய் 2.49 கோடியிலிருந்து ரூபாய் 2.85 கோடிக்கு உயர்ந்துள்ளது

வங்கியில் ரூபாய் 3.3 லட்சம் பணம் செலுத்தியதாலும் நிலை வைப்பு(fixed draft) முதலீட்டில் இருந்து கிடைத்த ரூபாய் 33 லட்சம் வட்டியினாலும், சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் மாத இறுதியில் மோடி ரூபாய் 31,450 கையிருப்பும், ரூபாய் 3,38,173 எஸ்பிஐ காந்தி நகர் என்எஸ்சி கிளையில் வங்கி இருப்பும், எம்ஓடி இருப்பு 60,28,939 ரூபாயும் உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

ரூபாய் 8,43,124 மதிப்புள்ள தேசியச் சேமிப்புச் சான்றிதழ்கள், ரூபாய் 1,50,957 மதிப்புள்ள ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மற்றும் ரூபாய் 20,000 மதிப்புள்ள வரி சேமிப்பு இன்ஃப்ரா பத்திரங்கள் உள்ளன. அசையும் சொத்துகள் சுமார் ரூபாய் 1.75 கோடி என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பிரதமர் தனது பெயரில் எந்த வாகனங்களும் பதிவு செய்யவில்லை. நான்கு தங்க மோதிரங்கள் 45 கிராம் எடையில் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

செக்டர்-1 காந்திநகரில் 3,531 சதுர அடியில் நிலம் வைத்துள்ளார் என்றும், இந்த நிலம் இன்னும் மூன்று உரிமையாளரைக் கொண்டுள்ளதாகவும் ஒவ்வொருவருக்கும் 25 சதவிகிதம் பங்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பிரதமரின் அசையா சொத்து மதிப்பு இன்றைய நிலையில் ரூபாய் 1.10 கோடியாகும்.

மேற்கோள் பத்திரங்களின் சந்தை மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் அமித் ஷாவின் நிகரச் சொத்து மதிப்பு இந்த ஆண்டு வீழ்ச்சியடைந்துள்ளது.

அமித் ஷாவின் இந்த ஆண்டின் நிகரச் சொத்து மதிப்பு ரூபாய் 28.63 கோடி. சென்ற ஆண்டில் ரூபாய் 32.3 கோடியாக இருந்தது.

13.56 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 அசையா சொத்துகளை அமித் ஷா வைத்துள்ளதாகவும் கையில் ரொக்கமாக ரூபாய் 15,814, வங்கி இருப்பு மற்றும் காப்பீட்டில் ரூபாய் 1.04 கோடி இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

ரூபாய் 13.47 லட்சம் மதிப்புள்ள ஓய்வூதிய பாலிசிகள், நிலையான வைப்புத் திட்டங்களில் ரூ.2.79 லட்சம் மற்றும் ரூ.44.47 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளன என்றும் பிரதமர் அலுவலக அறிவிப்புகள் வெளியிட்டுள்ளன.

அமித் ஷா மனைவியின் சொத்து மதிப்பு சென்ற ஆண்டு ரூபாய் 9 கோடியிலிருந்து 8.53 கோடியாகக் குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-ன் நிகரச் சொத்து மதிப்பு ரூபாய் 1.97 கோடி அசையும் சொத்து என்றும், ரூபாய் 2.97 கோடி அசையா சொத்து என்றும் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பில் பங்குச்சந்தை, காப்பீடு, ஓய்வூதியம் போன்றவை குறித்து எந்த வெளியீடும் இல்லை.

32 ரக துப்பாக்கி மற்றும் 2 குழாய் துப்பாக்கி வைத்துள்ளதாகவும், அவரது மனைவி சாவித்ரி சிங் ரூபாய் 54.41 லட்சம் அசையும் சொத்து வைத்துள்ளதாகவும் வெளியிட்டுள்ளார்.

நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கத்கரி, அவரது மனைவி மற்றும் குடும்பம் அனைத்தும் சேர்ந்து ரூபாய் 2.97 கோடி அளவிற்கு அசையும் சொத்து வைத்துள்ளதாகவும், அசையா சொத்து ரூபாய் 15.98 கோடி மதிப்பில் வைத்துள்ளதாகவும் “பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் (HUF category)” ல் இந்தச் சொத்துகளை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நிதின் கட்கரி தனது பெயரில் 6 வாகனங்களை வைத்துள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் சொத்து மதிப்பு மோடியின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களில் குறைவாக உள்ளது. குடியிருப்பு சொத்து மதிப்பு ரூபாய் 99.36 லட்சம் என்றும்,  நிலம் ரூபாய் 16.02 லட்சம் மதிப்பில் உள்ளதாக அறிவித்துள்ளார்.

நிதியமைச்சரின் பெயரில் நான்கு சக்கர வாகனம் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை என்றும், ஆந்திரா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட பஜாஜ் ஸ்கூட்டர் மட்டும் ரூபாய் 28,200 க்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

19 வருட வீட்டுக் கடன், ஒரு வருட மிகைப்பற்று மற்றும் 10 வருட அடமானக் கடன் இருப்பதாகவும் வெளியிட்டுள்ளார். அசையும் சொத்து மதிப்பு ரூபாய் 18.4 லட்சம் என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்ட சொத்து மதிப்பில் மூன்று அசையா சொத்துகளில் ஒன்று பரம்பரைச் சொத்து மற்றும் மீதமுள்ள இரண்டின் மதிப்பு ரூபாய் 3.79 கோடி என்றும், பல்வேறு பிரிவுகளில் செய்திருக்கும் மொத்த முதலீட்டு மதிப்பு ரூபாய் 16.5 கோடி என்றும் தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்பு மொத்தம் ரூபாய் 27.47 கோடி என்றும், அவரது மனைவி சீமா கோயல் ரூபாய் 50.34 கோடி மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் (HUF category)” ன் கீழ் 45.65 லட்சம் மதிப்பிலான சொத்து உட்பட அனைத்தும் சேர்ந்த மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 78.27 கோடி என்றும் வெளியிட்டுள்ளார்.

பியுஷ் கோயல் மோடியின் அமைச்சரவையில் அதிக சொத்துடையவராவார்.

ஸ்மிருதி இரானியின் அசையும் சொத்து ரூபாய் 4.64 கோடி என்றும், அசையா சொத்து எல்லா முதலீடுகளையும் சேர்த்து ரூபாய் 1.77 கோடி என்றும் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்