Aran Sei

13500 கோடி வங்கி மோசடி செய்த நீரவ் மோடி வழக்கு – பிப்ரவரி 25-ல் தீர்ப்பு

நீரவ் மோடி - Image Credit : business-today.in

ஞ்சாப் நேஷனல் வங்கியை அதன் ஊழியர்கள் துணைகொண்டு நூதனமாக மோசடி செய்த நீரவ் மோடிக்கு எதிரான  வழக்கு இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்து உள்ளது. வழக்கின் கடைசி கட்ட வாதங்களை இருதரப்பு வழக்கறிஞர்களும் கடந்த ஜனவரி 5, 6ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விட்டனர்.

இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு பிப்ரவரி 25 அன்று வெளியிடப்படும் என்று இங்கிலாந்து நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீரவ் மோடிக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

அந்த வழக்கில் மற்றொரு திருப்பமாக நீரவ் மோடியின் உடன்பிறந்த சகோதரி மும்பையில் நடைபெறும் வழக்கில் அப்ரூவராக மாறியிருக்கிறார். தனக்கு நீதிமன்றம் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் தனக்குத் தெரிந்த நீரவ் மோடி தன்னிடம் விட்டுச்சென்ற 579 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மீட்பதற்கு உதவி செய்வதாகவும் மும்பை நீதிமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

நீரவ் மோடியின் வழக்கில் ஏற்கனவே அமலாக்கத்துறை 1400 கோடி ரூபாய் மீட்டுள்ளது. நீரவ் மோடி ஏமாற்றிச் சென்ற மதிப்பு 13,500 கோடி ரூபாயாகும். அதில் இருந்து இதுவரை 2,000 கோடி ரூபாய் மீட்கப்படுவதற்கான சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன.

நீரவ் மோடியின் வழக்கானது வங்கியில் உள்ள ஓட்டைகளை வைத்து நடைபெற்றதால் வங்கித் துறைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் வழக்காக அது உள்ளது. அதனால் அரசு நீரவ் மோடியை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்து அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று முயன்று வருகிறது.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற பழமொழி நமக்கு ஞாபகம் வந்தாலும், தும்பை விட்டு வாலை பிடித்தாலும், நீரவ் மோடியை சட்டத்தின் பிடியில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதே சாமானியனின் கருத்தாக உள்ளது. அந்த சாமானியனின் நினைப்பில் விவசாயத்திற்கு வாங்கிய 20 ஆயிரம் ரூபாய் கடனிற்கு தனது வீட்டை ஜப்தி செய்யும் அரசு நீரவ் மோடியை மட்டும் விட்டு வைத்து இருக்கிறதே என்ற அங்கலாய்ப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த மோசடி காரணமாக வங்கித்துறை மிகப்பெரிய சரிவை சந்தித்தது. 200 ரூபாய்க்கு மேல் வர்த்தகம் ஆன பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஒரு பங்கு தற்போது 35 ரூபாய் என்ற அளவிற்கு விற்பனையாகிறது. இதன்மூலம் வங்கித் துறைக்கு இந்த மோசடி என்ன இழப்பை கொண்டு வந்துள்ளது என்பது விளங்கும்.

இதன் காரணமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த பலர் ஓட்டாண்டியாக திரிகின்றனர். அதற்குக் காரணம் நீரவ் மோடி வாங்கிய கடன் வாராக் கடனாக ஆனது தான் ஆகும். கருப்பு பணத்தை மீட்டு வருவேன் என்று கூறிய அரசு வங்கிகளின் வெள்ளை பணத்தில் கோட்டை விட்டுள்ளதே என்ற வேதனையும் பணத்தை இழந்த அந்த அப்பாவி முதிலீட்டாளர்களிடம் உள்ளது. அதற்காகவாது அரசு விரைந்து இந்த வழக்கில் நீரவ் மோடிக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

நீரவ் மோடியின் வழக்கில் அவர் பணத்தை கட்டாமல் வெளிநாடு தப்பிச்சென்று விட்டதால் சிறிது காலம் காத்திருந்த பஞ்சாப் நேஷனல் வங்கி அந்த கடனை வாராக்கடன் என்று அறிவித்துவிட்டது. ஒரு கடனானது வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்கில் வாரா கடன் நஷ்டமாக காட்டப்பட்டு விடும்.

ஒரு வங்கி தனி நபருக்கோ, நிறுவனத்திற்கு கடன் கொடுத்தால் அந்த தனிநபர் கடனை மாதம் மாதம் வட்டியுடன் செலுத்தினால் எந்தப் பிரச்சனையும் வருவதில்லை. ஆனால் கடனை திரும்ப செலுத்தாவிட்டால் வங்கி முதலில் அவருக்கு நினைவூட்டல் கடிதத்தை அனுப்பும்.

வங்கி ஊழியர்கள் அந்த நிறுவனத்தையோ, தனி நபரையோ தொலைபேசியில் தொடர்புகொண்டு கடனை கட்டுவதற்கு நினைவூட்டல் செய்வார்கள். அப்படியும் அந்த நபர் மூன்று மாதங்களுக்கு மேல் கடனை திரும்ப செலுத்தாமல் இருந்தால் அந்த கடன் செயல்படாத கடன் என்று மாற்றப்படும் (இதை ஆங்கிலத்தில் NPA என்று சுருக்கமாக குறிப்பிடுகிறோம்)

அதன் பிறகு வங்கி முகவர்கள் வாடிக்கையாளரை நேரில் சென்று சந்தித்து பணத்தை திரும்பவும் வசூலிப்பதற்கு முயற்சிகளை எடுப்பார்கள். அந்த வாடிக்கையாளர் நியாயமான காரணத்திற்காக கடனை திருப்பி செலுத்த முடியாமல் இருந்தால் இந்தக் கடனை மறுஆய்வு செய்து கடன் தவணையை குறைத்து, ஆண்டுகளை நீட்டித்து வங்கி அந்த வாடிக்கையாளருக்கு வழங்கும் இந்த சலுகையை பயன்படுத்தி வாடிக்கையாளர் தொடர்ந்து கடனை செலுத்தினால் எந்த பிரச்சனையும் வராது.

அதற்கு மாறாக அந்த வாடிக்கையாளர் கடனை திரும்பச் செலுத்தாமல் இருந்தால் வங்கி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதன் ஒரு பகுதியாக காவல் துறையிலோ நீதிமன்றத்திலோ அந்த வாடிக்கையாளரின் மீது வழக்கு பதிவு செய்யப்படும். சட்டத்தின் உதவியுடன் அந்த வாடிக்கையாளரிடம் இருந்து பணத்தை திரும்ப பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் செயல் காரணமாக வாடிக்கையாளர் பணத்தை திரும்ப செலுத்தி விட்டார் என்றால் எந்த பிரச்சனையும் வராது.

அதற்கு மாறாக வாடிக்கையாளர் திவால் ஆகி விட்டேன், தம்மால் பணத்தை திரும்ப செலுத்த முடியாது என்று கூறும் பட்சத்தில் வழக்கு சிக்கலாக முடியும். அந்த வழக்கை தொடர்ந்து நடத்தி வங்கி அந்த வாடிக்கையாளருக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுத்தாலும் கொடுத்த கடனைத் திரும்ப வசூலிக்க முடியாது. அதனால் வேறு வழியில்லாமல் வங்கி அந்தக் கடனை வாராக்கடன் பட்டியலில் சேர்த்து விடும். மேலும் வாடிக்கையாளர் பல ஆண்டுகளாக தலை மறைவாக இருந்தாலோ அல்லது வாடிக்கையாளர் இறந்து அவரிடம் மீட்பதற்கு வேறு சொத்துக்கள் இல்லாமல் இருந்தாலோ அந்த சொத்துக்களும் கணக்கியல் ரீதியில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் என்று வரையறைக்கப்படும் (கணக்கியல் ரீதியில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் என்பது ஆங்கிலத்தில் Written off Loan)

ஒரு கடன் கணக்கியல் ரீதியில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் என்று அறிவிக்கப்பட்டதால் பிரச்சனை ஓய்ந்துவிடாது. வங்கி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை உதவியுடன் பணத்தை திரும்ப பெறுவதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். அந்த முயற்சி காரணமாக நீரவ் மோடி வழக்கில் 2000 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறையால் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சொத்துக்களை விற்று அந்த பணம் வங்கியின் வரவாக வைக்கப்படும்.

அந்தப் பணம் ஏற்கனவே நஷ்டமாக காட்டப்பட்டு விட்ட காரணத்தால் திரும்பப் பெறப்பட்ட பணம் லாபமாக காட்டப்படும். மேலும் வழக்கை தொடர்ந்து நடத்தி மோசடி செய்த காரணத்திற்காக நீரவ் மோடிக்கு வங்கி தண்டனை பெற்றுத் தரும்.

நீரவ் மோடி வழக்கில் அரசு உறுதியுடன் நடந்து அவர் மோசடி செய்த பணத்தை மீட்பதுடன் அவரை திரும்ப இந்தியா அழைத்து வந்து தக்க தண்டனை வாங்கி தருவதே வங்கியை ஏமாற்ற நினைக்கும் நபர்களுக்கு பாடமாக இருக்கும். இதனை உணர்ந்து அரசு நடக்க வேண்டும் என்பதே சாமானியனின் எண்ணமாக உள்ளது.

– ஷியாம் சுந்தர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்