Aran Sei

நாடாளுமன்ற விஸ்டா கட்டிட முறைகேடு – குற்றச்சாட்டை வாபஸ் பெறுவதாக எஸ்பி குழுமம் அறிவிப்பு

புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் வென்றதில் முறைகேடுகளும் நலன் முரண்பாடும் இருப்பதாகக் குற்றம் சாட்டிய கடிதங்களைத் திரும்பப் பெற்றுள்ளது ஷபூர்ஜி பல்லோன்ஜி (எஸ்.பி) குழுமம். சம்பந்தப்பட்ட அரசுத் துறை எந்தத் தவறும் நடக்கவில்லை என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து எஸ்பி குழுமம் புகாரைத் திரும்பப் பெற்றுள்ளதாக thewire.in வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.

ஷபுர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் சேர்மன் பல்லோன்ஜி மிஸ்திரி டாடா குழுமத்தின் 18.3% பங்குகளுடன் மிகப்பெரிய தனிநபர் பங்குதாரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்பி குழுமம் மத்திய பொதுப்பணி துறைக்கு அளித்த கடிதத்தில் இந்த விவகாரத்தை மேற்கொண்டு தொடரப்போவதில்லையெனத் தெரிவித்துள்ளது.

“அனைத்துச் சிக்கல்களையும் பிரச்சனைகளையும் குறித்து உங்கள் துறை ஒரு சிறப்பான உள்மதிப்பாய்வை மேற்கொண்டதையும் முழுமையாக விவாதித்து மதிப்பீடு செய்ததையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம்“ என்று எஸ்பி குழுமம் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளது

மேலும் “முழு ஏல நடைமுறையும் பாரபட்சமின்றி நியாயமாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்பட்டது. டாடா கன்சல்டிங் இன் இன்ஜினீயர்ஸ் (டி.சி.இ) மற்றும் டாடா ப்ராஜக்ட்ஸ் லிமிடட் (டிபிஎல) நிறுவனங்களுக்கு இடையில் எந்த நலன் முரண்பாடும் இருக்கவில்லை” என்றும் கூறியிருக்கின்றனர்.

முன்னதாகச் செப்டம்பரில் இரண்டு கடிதங்களை எஸ்.பி குழுமம் மத்தியப் பொதுப்பணித்துறைக்கு அனுப்பி இருந்தது. அதில், “டிசிஇ, டிபிஎல் இரண்டுமே ஏல நடைமுறையில் பங்கேற்பது மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விதிகளுக்கு எதிரானது” என்று குற்றம் சாட்டியிருந்தது.

மேலும் ஏலத்தில் டிபிஎல் நிறுவனம் பங்கேற்பதற்கு வழி செய்யும் வகையில் ஏலம் எடுப்பதற்கான தகுதிகள் மற்றும் அளவுகோல்கள் மாற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.

தமது “2020 செப் 10 மற்றும் 17 தேதியிட்ட கடிதங்கள் ஏலமிடுவதில் ஒரு சிறிய பிரச்சனை இருந்தால் கூட அது விசாரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய பொதுப்பணித்துறைக்கு எழுதப்பட்டன” என்று எஸ்பி குழுமம் கூறியுள்ளது.

”இந்தப் பிரச்சனைகுறித்து நீங்கள் எங்களுக்குத் தெளிவுபடுத்தி விட்டதால் மேற்கொண்டு இந்தப் பிரச்சனையை மேலும் முன்னெடுத்துச் செல்லப் போவதில்லை” என்று கூறியுள்ளனர்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவதற்கான ஏலத்தில் எல்&டி நிறுவனத்தை (ரூ.865 கோடி) விஞ்சி முதலிடம் பெற்றது டிபிஎல் நிறுவனம் (ரூ.861.90 கோடி)

தேர்ந்தெடுக்கப்பட்ட 7 நிறுவனங்களில் டாடா நிறுவனம், எல்&டி நிறுவனம் மற்றும் எஸ்.பி குழுமம் மட்டுமே ஏலத்திற்கான கடைசிச் சுற்றுக்குத் தகுதியாகி இருந்தனர்.

புதிய நாடாளுமன்ற கட்டடம் மத்திய விஸ்டா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டடத்திற்கு அருகில் கட்டப்படும். இன்னும் 21 மாதங்களில் இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பொதுப்பணித்துறையின் திட்டத்தின படி இந்தக் கட்டடம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள 118 வது பிளாட் எண்ணில் அமைக்கப்படும். மேலும் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடம் இந்தத் திட்டம் நிறைவேறும் வரையில் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டாடாவுடன் தொடர்ந்து முரண்பட்டு வந்த டாடா நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரரான எஸ்.பி குழுமம் (18.37 %) 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த உறவைத் தற்போது முடிவுக்குக் கொண்டு வருவதாகச் சென்ற மாதம் கூறியிருந்தது.

டாடா சன்ஸ் நிறுவனம் $10,000 கோடிக்கும் (சுமார் ரூ.75 லட்சம் கோடி) அதிகமான மதிப்புடைய டாடா குழுமத்தின் கட்டுப்படுத்தும் நிறுவனமாக உள்ளது. டாடா சன்ஸ் பங்குகளை அடகு வைத்து நிதி திரட்டும் எஸ்பி குழுமத்தின் திட்டங்களுக்கு அது எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

கட்டுரை & படம் : நன்றி  thewire.in
(மொழியாக்கம் செய்யப்பட்டது)

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்