Aran Sei

சிறுகுறு தொழிலகங்களின் பிரச்சனை: கடன் உதவி போதுமா?

credit: orfonlie.org

கொரோனா காலத்தில் அனைத்து சிறுகுறு தொழிலகங்களாலும் மத்திய அரசு வழங்கிய கடன் உதவிகளை பெற முடியவில்லை என்று நிதிசார் தகவல் வழங்கும் நிறுவனமான க்ரெடிவாட்ச் அமைப்பு கூறியுள்ளது.

பொது முடக்கம் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிலகங்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை மட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு சிறப்பு கடன் பெறும் வசதியை ஏற்படுத்தியது. மே மாதம் அறிவிக்கப்பட்ட ரூ. 20 லட்சம் கோடி பொருளாதார மீட்பு தொகுப்பின் பகுதியாக இந்த கடன் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் மொத்த 6 கோடியே 40 லட்சம் சிறுகுறு தொழிலகங்கள் உள்ளன. அவற்றில், இந்த கடன் வசதியை பெறுவதற்கு 45 லட்சம் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிலகங்கள் மட்டுமே தகுதியுடையவையாக இருக்கின்றன என்று அரசு சார்பில் கூறப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் இப்போது வரை 24 லட்சம் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிலகங்கள் பயன் அடைந்துள்ளன என்று க்ரெடிவாட்ச் கூறுகிறது.

இந்த கடன் உதவித் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ 3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தது. அந்த நிதியில், செப்டம்பர் 3-ம் தேதி வரையில் ரூ. 1.61. லட்சம் கோடி மட்டுமே கடனாக வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையில் கூட ரூ. 1.31 லட்சம் கோடிதான் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிலகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று தரவுகள் மூலமாக தெரிய வருகிறது.

இதுவரையில்  வங்கிகள் மூலமாக கடன் பெற்று வந்த தொழிலகங்கள் மட்டுமே மத்திய அரசின் கடன் திட்டத்தின் கீழ் உதவி பெற்றுள்ளனர். வங்கி மூலமாக கடன் பெறுகின்ற வாய்ப்பை பெற்ற சிறுகுறு நடுத்தர தொழிலகங்கள் வெறும் 5 முதல் 10 விழுக்காடு வரைதான் இருக்கின்றன.

இந்த கடன் உதவித் திட்டத்துக்கு மத்திய அரசே உத்தரவாதம் அளித்துள்ளதுடன் வட்டியும் கூடக் குறைவுதான் என்றாலும் சிறுகுறு தொழிலகங்கள் பொருளாதாரம் மீண்டும் புத்தாக்கம் அடைவதற்காக காத்திருக்கின்றவே தவிர  கடன் உதவிகளை பெற விரும்பவில்லை என்று க்ரேடிவாட்ச் அமைப்பின் நிறுவனர் மேக்னா சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் தனிநபர்களுக்கும் கடன் வழங்க வேண்டும் என்று வங்கிகளும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு ஜூலை மாதம் கடிதம் எழுதின. அதில், சிறுகுறு தொழிலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களை தனிநபர்களும் கார்ப்பரேட் அல்லாத நிறுவனங்களும்தான் வாங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளன.

இந்தக் கடன் உதவி திட்டமானது பெரு எண்ணிக்கையில் உள்ள சிறுகுறு தொழிலகங்கள் கடன் பெற முடியாதபடிக்கு கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது என்று நிதித் துறை தொழில் வளர்ச்சி மன்றம் (finance Industry Development Council) தெரிவித்துள்ளது.

சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிலகங்கள் பெரும்பாலும் கந்து வட்டி போன்ற அமைப்புமுறை சாராத வழிகளில்தான் கடன்களை பெற்று வருகின்ற நிலையில் மத்திய அரசின் கடன் வழங்கும் திட்டம் சிறுகுறு தொழிலகங்கள் மீது குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு குறிப்பிடுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்